சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்காத பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்டோர் மீது சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்துள்ளது.

நிலத்தடி நீர் பாதுகாப்பு குறித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை பின்பற்றவில்லை என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்தார். 

தண்ணீர் பஞ்சத்தினால் மக்கள் கடுமையாக அவமதிப்படுவதாகவும், மறுபுறம் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் திருடப்பட்டு, அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறித்து பொதுமக்கள் புகார் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விரிவான செய்திகளை பத்திரிகைகள் மற்றும் ஒரு தனியார் டிவி சேனல்கள் மூலம் கண்டறிந்த நீதிபதி இந்த வழக்கினை தொடர்ந்தார். 


இதில் தமிழக பொதுப்பணித்துறை செயலாளர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் மண்டல இயக்குனர், பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு  தொடந்துள்ளார். 

இந்த வழக்கு விசாரணையில், நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை ஒழுங்குப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தனியார் நிலத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஏரி, குளம், விவசாய நிலம், தனியார் நிலம் ஆகியவற்றில் இருந்து சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறித்து பொதுமக்கள்  கொடுத்த புகாரின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? 

விவசாயத்துக்காக இலவசமாக கொடுக்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி நிலத்தடி நீரை உறிஞ்சி, அதை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? முறையான அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என சரமாரி கேள்விகளை நீதிமன்றம் முன்வைத்தது.

மேலும் கடந்த கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி அன்று பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாததற்காக பொதுப்பணி துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் ஏன் தண்டனை வழங்கக்கூடாது? போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு மே 20ஆம் தேதி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here