தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம் என்பதை நாம் அறிவோம். ஆனால், அதை எப்படி எந்த வேளையில் குடிக்க வேண்டும் என்பதில்தான் குழப்பம். தவறான நேரங்களில், அளவுக்கு அதிகமாக தண்ணீரைக் குடித்தாலோ, குடிக்க வேண்டிய நேரங்களில் தண்ணீரைத் தவிர்த்தாலோ பிரச்னை ஆரம்பம். சரி தண்ணீரை எப்போது? எப்படிக் குடிக்க வேண்டும் ? 

1.காலை எழுந்ததும் தண்ணீர்

குளிர் காலங்களில், காலையில் சிறிது நேரம் வண்டியை ஸ்டார்ட் செய்து என்ஜின் சூடாவதற்கு நேரம் தராமல் உடனடியாக கியர் போட்டு 120 வேகத்தில் சென்றால் வண்டிக்கு என்ன ஆகும்? அதே போலக் காலையில் எழுந்ததும் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக செயல்பட ஒரு கப் தண்ணீர் அவசியம். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவாகவும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

2. சாப்பிடுவதற்கு முன்

சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பது உணவைக் குறைப்பதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கும். தண்ணீர் குடிக்கும்போது, வயிற்றுப் பகுதி உணவின் செரிமானத்திற்குத் தயாராகிறது. வயிற்றின் புறப் பகுதிகள் ஈரப்பதமாக இருப்பதால், உடையக்கூடிய அல்லது அமில உணவுகளைச் செரிக்கச் செய்வது எளிதாகிறது. ஒரு குவளை தண்ணீர் நாவின் சுவை அரும்புகளைத் தூண்டுகிறது.

3. உணவு நேரமற்ற வேளைகளில்

உணவு நேரம் அல்லாத நேரங்களில், அதாவது, காலை, மதியம், மாலை நேரம் தவிர பிற நேரங்களில் பசி உணர்வு ஏற்பட்டால் , நீங்கள் நீரிழப்புடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அப்போது கட்டாயம் தண்ணீர் குடிக்க வேண்டும். 75 % சதவிகித மக்கள் இதைப் பசியென்று தவறாகப் புரிந்துகொண்டு துரித உணவுகள், குளிர்பானங்கள் போன்ற உடல் எடை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்கிறீர்கள்.

4. பருவ காலங்கள்

வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் உங்கள் உடலின் திரவ அளவைப் பொறுத்து, உங்கள் உடற்பயிற்சிகளின்போதும் அதற்குப் பிறகும் நீரிழப்பிலிருந்து பாதுகாக்க உங்களுக்கு ஒன்று அல்லது  மூன்று கிளாஸ் அளவு தண்ணீர் தேவைப்படலாம். வெப்பமான காலநிலையில் வெப்ப பக்கவாதம் மற்றும் குளிர்ந்த வெப்பநிலையில் உறைபனி ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க நீரேற்றம் அவசியம்.

5. நோய்

நீங்கள் மருத்துவமனையில் அல்லது அலுவலகம் மற்றும் கல்விக்கூடங்களில் நோய் வாய்ப்பட்டவர்களைச் சுற்றி இருந்தால், உங்கள் உடலைத் தாக்க வாய்ப்புகளுடைய கிருமிகளையும் வைரஸ்களையும் வெளியேற்ற வழக்கத்தை விடச் சற்று அதிகமாகத் தண்ணீர் குடிக்கவும்.

6. உண்ட மயக்கம்

மதிய உணவிற்குப் பின்பு தூக்கம் வந்தால் இரண்டு அல்லது மூன்று கிளாஸ் தண்ணீரைக் குடிக்கவும். சோர்வு என்பது நீரிழப்பின் அறிகுறிகளில் ஒன்று. உடலின் வழியாக விரைவாக நகரும் திறன் காரணமாக, தண்ணீர் உங்கள் மூளையை அடைந்து, சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.