தண்ணீரால் கேள்விக்குறியாகும் பஞ்சாபின் அடுத்த தலைமுறை

0
324

பஞ்சாப்பில் ஒரு கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள தம்பதிகள் பலர் தங்களுக்கு குழந்தை இல்லையே என வருந்தி அதற்கான காரணத்தை தேட முயற்சிக்கின்றனர். எவ்வளவோ செலவு செய்தும் குழந்தை பிறப்பு அங்குள்ளவர்களுக்கு கேள்விக்குறியாகவே உள்ளது. அந்த சிறிய கிராமத்தில் 1,600 குடும்பங்கள் உள்ளன. எல்லோருக்கும் இந்த குழந்தை பிறப்பின்மை பற்றிய பயம் தொற்றியுள்ளது. ஒன்று கரு கலைந்து விடுகிறது. இல்லையென்றால் கர்ப்பமாவதற்கான வாய்ப்புகளே இல்லாமல் உள்ளது. சிலருக்கு குழந்தை பிறதாலும், மன, உடல் ரீதியாக பாதிப்படைந்த, உறுதியற்ற குழந்தைகளே பிறக்கின்றன. காரணம் என்ன? கேட்டால் அதிர்வீர்கள். அங்கே சில வருடங்களாக குழாயில் இருந்து வரும் புளிப்பான துருப்பிடித்த நிறமுள்ள தண்ணீரை அருந்துவதுதான் காரணம்.

பஞ்சாப்பை பெரிதாக இந்தியாவின் ஒரு பகுதியாக பலர் சேர்த்துக் கொள்ளாததே இந்த நிலைமைக்குக் காரணம் என சிலர் கருதுகிறார்கள். பஞ்சாப்பில் விவசாயத்துக்காக பயன்படுத்த சுத்தமான தண்ணீரே கிடைப்பதில்லை. இதனால் அங்குள்ள விவசாயிகள் விளைச்சலை அதிகரிக்க அதிகமான பூச்சிக்கொல்லிகளையும் வேதி உரங்களையும் பயன்படுத்துகின்றனர். பஞ்சாப்பில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வரும் அசுத்தமான நச்சுத்தன்மை கலந்த தண்ணீரைத்தான் அவர்கள் பருகுகின்றனர். இதுதான் இவ்வளவுக்கும் காரணம். பஞ்சாப்பில் உள்ள 28 மில்லியன் மக்களுக்கு இதுதான் நிலைமை. அந்தத் தன்ணீரில் கடினமான உலோகங்கள், வேதிப்பொருட்கள் கலந்துள்ளன.

மலட்டுத்தன்மை, எலும்பு சம்பந்தமான நோய்கள், புற்றுநோய் ஆகியவை இதனால் அதிகம் அந்த மக்களை தாக்குகிறது. சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர் ஜே.எஸ்.தாக்கூரின் ஆராய்ச்சிப்படி, 2014-இல் அவர் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட 5,567 பேரில் 65 சதவீதத்தினர் தொழிற்சாலைகளுக்கு அருகில் உள்ள வீடுகளில் இருக்கிறார்கள். அவர்கள் பருகும் நீர் முழுக்க நச்சுத்தன்மை கொண்டதாகவே உள்ளது என அவர் ஆய்வில் நிரூபித்து உள்ளார். மலட்டுத்தன்மை ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் ஏற்பட்டுள்ளது. அந்த தண்ணீரை டெல்லியில் உள்ள ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்தபோது அதில் ஆர்சனிக், ஈயம், குளோரைடு, ஆகியவை அந்த தண்ணீரில் உலக சுகாதார மையம் (WHO) அனுமதித்ததை விட அதிகமாக கலந்திருப்பது தெரிய வந்தது.

பஞ்சாபில் உள்ள ஹிந்துஸ்தான், பெப்சி, யுனிலிவர் ஆகிய கார்ப்பரேட் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கழிவுகள் அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதே இந்த பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கேத்ரி விரசாத் மிஷன் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம் இதனை கையில் எடுத்து பெப்சி நிறுவனத்தை பதில் அளிக்குமாறு கேட்டது. அதற்கு பெப்சி நிறுவனம் சரியான பதில் அளிக்காமல் உள்ளது.

இப்படி தங்களுடைய சுய லாபங்களுக்காக பல மாநிலங்களில் மக்களின் உடல் நலத்தை வேட்டையாடும் கார்ப்பரேட்டுகள்தான் பஞ்சாப்பின் நிலைமைக்கும் காரணம். “எங்கு வளர்ச்சி இருக்கிறதோ அங்கு நோய்கள் இருக்கும்” என்பதும் சரிதானே.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்