தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.40,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்று ரூ.24 உயர்ந்து ரூ.5037-க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வை பார்த்து நகை வாங்குவார் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். இன்னும் விலை உயரும் என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் நகைக்கடைகள் இந்தியா முழுவதும் மூடப்பட்டது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட முந்தைய நாளான மார்ச் 23ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.3,952க்கும், சவரன் ரூ.31,616க்கும் விற்கப்பட்டது. கடைகள் அடைப்பால் மார்ச் 24ம் தேதி முதல் மே 7ம் தேதி வரை தங்கம் விலை வெளியிடப்படவில்லை. அதன் பிறகு தங்கம் விலை வெளியிடப்பட்டது.

சவரன் 50 ஆயிரத்தை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை

மேலும் நகைக்கடைகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை நகைக்கடைகள் முழுமையாக இயங்கவில்லை. அதுமட்டுமல்லாமல் ஊரடங்கு அமலில் உள்ளதால் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்றப்படி மக்கள் வீட்டை விட்டே இன்னும் வெளியில் வரவில்லை. சகஜநிலை திரும்பாத நேரத்திலும் தங்கத்தின் விலை மட்டும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. கொரோனாவின் தாக்கம், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு போன்றவற்றால்  தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யூகத்தை பொய்யாக்கி, தங்கம் விலை மட்டும் கொரோனாவின் வேகத்தை விட அதிகமாக உயர்ந்து வந்தது.

கடந்த 20ம் தேதி முதல் தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. 20ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.37,616க்கு விற்கப்பட்டது. 21ம் தேதி சவரன் ரூ.37,736க்கும், 22ம் தேதி ரூ.38,184க்கும், 23ம் தேதி ரூ.38,776க்கும், 24ம் தேதி ரூ.39,080க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் 6வது நாளாக கடந்த சனிக்கிழமை தங்கம் விலை உயர்ந்தது. அதாவது கிராமுக்கு 19 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,904க்கும், சவரனுக்கு ரூ.152 அதிகரித்து ஒரு சவரன் ரூ.39,232க்கும் விற்கப்பட்டது. (ஜூலை-27) நேற்று 7வது நாளாக சவரன் ரூ.40,104க்கும் விற்பனையானது. இந்த வேகத்தில் தங்கம் விலை உயர்ந்தால் இன்னும் ஓரிரு தினங்களில் சவரன் 50 ஆயிரத்தை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் நகை வியாபாரிகள் கூறி வந்தனர்.

(ஜூலை-28) இன்று 8வது நாளாக தங்கம் விலை உயர்வு

இந்த நிலையில் இன்று 8வது நாளாக தங்கம் விலை உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ.24 அதிகரித்து கிராம் ரூ.5,037க்கும், சவரனுக்கு ரூ.192 உயர்ந்து சவரன் ரூ.40,296க்கும் விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சமாகும். அது மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக 7 நாட்களில் சவரன் ரூ.2488 அளவுக்கு உயர்ந்துள்ளது. சென்னை தங்கம், வைரம் நகை வியாபாரிகள் சங்கம் தலைவர் ஜெயந்திலால் கூறுகையில், ‘‘வளர்ந்த நாடுகளும், பெரிய முதலீட்டாளர்களும் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். இது தான் தங்கம் விலை உயர்வுக்கு காரணம். மக்களும் தங்கத்தில் முதலீட்டை அதிகரித்து வருகின்றனர். இதனால் தங்கம் புதிய உச்சத்தை தொடும்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here