சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலைதொடர்பு நிறுவனமான ஹுவாவே, ஈரான் மீது தாங்கள் விதித்த தடைகளை மீறி அந்நாட்டுடன் வர்த்தகம் வைத்ததோடு, மறைமுகமாக நிதியுதவி அளித்து வருவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இந்த விவகாரத்தில் ஹுவாவே நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மெங் வாங்சோ கடந்த ஆண்டு கனடாவில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், சீன அரசு ஹுவாவே நிறுவனம் தயாரிக்கும் மென்பொருட்களை பயன்படுத்தி, பிறநாடுகளில் உளவு பார்த்து வருவதாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் சந்தேகம் எழுப்பி வந்தன.

அதுமட்டுமல்லாமல் ஹுவாவே நிறுவனத்தின் 5ஆம் தலைமுறை செல்போன் ‘நெட்வொர்க்’ (5ஜி) சேவை ஆராய்ச்சிக்கும் எதிர்ப்புகள் கிளம்பின.

இதன் உச்சக்கட்டமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்போது அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட அறிவுசார் விவகாரங்கள் திருடப்படுவதையும், உளவு பார்க்கப்படுவதையும் தடுக்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப துறையில் அவசர நிலையை பிரகடனம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதற்கான நிர்வாக உத்தரவில் அவர் கையெழுத்திட்டார்.

அந்த உத்தரவில் எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால், சீனாவின் ஹுவாவே நிறுவனத்தை குறிவைத்துத்தான் இந்த உத்தரவை டிரம்ப் பிறப்பித்திருப்பதாக கருதப்படுகிறது.

மேலும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு சேவைகளில் தீவிரமாக அதிகரித்து வரும் பாதிப்பு மற்றும் வெளிநாட்டு எதிரிகளிடம் இருந்து அமெரிக்காவை பாதுகாத்து, தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய இந்த அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக டிரம்ப் குறிப்பிட்டார்.

இந்த நெருக்கடி நிலையால் வெளிநாட்டு தொலைதொடர்பு நிறுவனங்கள், அமெரிக்க நிறுவனங்களை பயன்படுத்திக்கொள்வது தடுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், நெருக்கடி நிலைக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உடன் ஹுவாவே மற்றும் அதோடு தொடர்புடைய 70 நிறுவனங்களை தடை செய்யப்பட்ட நிறுவனங்களுக்கான பட்டியலில் அமெரிக்க வர்த்தக துறை இணைத்தது.

இதன் மூலம், அமெரிக்க அரசின் சிறப்பு அனுமதியைப் பெறாமல், ஹுவாவே நிறுவனம் அமெரிக்க தொழில்நுட்பங்கள், கருவிகள், பாகங்களை வாங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

ஹுவாவே நிறுவனத்துக்கு தடை விதிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனா எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லூ காங் கூறியதாவது: ஆபத்தான நிறுவனங்களுக்கான பட்டியலில் ஹுவாவே நிறுவனத்தை சேர்க்கும் அமெரிக்காவின் முடிவு குறித்து தகவல் அறிந்தோம். எங்களது நிறுவனங்கள் வெளிநாடுகளில் செயல்படும்போது, அந்தந்த நாட்டு சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும்படி அறிவுறுத்தி வருகிறோம். எங்களது நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், அந்த நிறுவனங்களின் நலனைப் பேணும் வகையிலான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here