தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம்

0
172

நீதித்துறையின் வெளிப்படைத் தன்மையை நிலைநிறுத்தும் வகையில் தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்ட வரம்புக்குள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என்று உச்சநீதிமன்றம் இன்று புதன்கிழமை  தீர்ப்பளித்துள்ளது 

ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உள்ளிட்ட 3 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை அளித்தனர். இரண்டு நீதிபதிகள் வேறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்தது . இந்தத்  தீரப்பை எதிர்த்து உச்ச நீதிமன்ற செயலாளர், தகவல் தொடர்பு அதிகாரி ஆகியோர் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.

2010 ஆம் ஆண்டு ஆர்டிஐ சட்ட வரம்புக்குள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் இடம்பெறும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது . 88 பக்கங்கள் கொண்ட அந்தத் தீர்ப்பில், ‘நீதித்துறை சுதந்திரம் என்பது ஒரு நீதிபதிக்கு அளிக்கப்பட்ட சிறப்பு உரிமை அல்ல; அது அவருக்கு அளிக்கப்பட்ட பொறுப்பு’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  அந்த தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று  தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

இந்த அமர்வில் நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

 முன்னதாக, இந்த வழக்கில் ஆர்டிஐ ஆர்வலர் எஸ்.சி.அகர்வால் சார்பில் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதாடினார். அவர் கூறுகையில், ‘அரசின் அமைப்புகளில் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்ற வலுவான நிலைப்பாட்டை கொண்டுள்ள உச்சநீதிமன்றம், தனது விஷயத்திலும் அதே கவனத்தை செலுத்துவதிலிருந்து விலக இயலாது. நீதித்துறையின் சுதந்திரம் என்பது பொதுமக்களின் கண்காணிப்பிலிருந்து கிடைக்கும் சுதந்திரம் என்று அர்த்தமாகிவிடாது. அரசு அமைப்புகள் எவ்வாறு செயல்பட்டுகொண்டிருக்கின்றன என்பதை அறியும் உரிமை மக்களுக்கு உள்ளது. நீதிபதிகளின் நியமனம் தொடா்பாக உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் நடைபெறும் விவாதங்கள் ஆர்டிஐ சட்டத்தின்கீழ் வெளியிடப்பட வேண்டும்’ என்று வாதிட்டிருந்தார்
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here