டெல்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் காலமானார். அவருக்கு வயது 81.
உடல்நலக் குறைவால் இன்று (ஜூலை 20) காலை 10.30 மணியளவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி மதியம் 3.30 மணியளவில் மறைந்தார்.
அண்மையில் அவர் டெல்லி காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். ஷீலா தீட்சித் சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமானவர்.
1998-ம் ஆண்டு முதல் 2015 வரை மூன்று முறை டெல்லி முதல்வராக இருந்தவர் ஷீலா தீட்சித். டெல்லியை நீண்ட காலம் ஆட்சி செய்த முதல்வர் என்ற பெருமையையும் பெற்றவர். டெல்லியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதில் அவருக்கு மிகப்பெரிய பங்கிருக்கிறது. சாலை வசதிகள், மேம்பால வசதிகள், பொது போக்குவரத்து வசதிகள், கல்வி மற்றும் மருத்துவத் துறையில் மேம்பாடுகள் என டெல்லியின் முகத்தை மாற்றிய முதல்வராகவே அவர் அறியப்படுகிறார்.
இவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.