டெல்லி பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கெடுப்பு குழு கொடுக்கவில்லை என்று முதன்மை தேர்தல் அதிகாரி கூறினார். இதைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தேர்தல் ஆணையத்தின் அனுமதி இல்லாமல் வாக்கு எந்திரங்களை வைத்திருப்பது குற்றம் என்று டிவீட் செய்துள்ளார்.

டெல்லி பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில், பாஜக ஆதரவு ஏபிவிபிக்கு அதிக வாக்குகள் பதிவாகும் வகையில் வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. தனியார் நிறுவனம் வாக்குப்பதிவு எந்திரத்தை தயாரித்துள்ளது பற்றி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அர்விந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் மின்னணு வாக்கு எந்திரங்கள் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது ? மின்னணு வாக்கு எந்திரங்களை தனியார் யாரும் தயாரிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ முடியாது என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே கூறியுள்ளது. டெல்லி பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் தனியார் மின்னணு வாக்கு எந்திரங்களை பயன்படுத்தப்பட்டுள்ளது உண்மை என்றால்? அது எப்படி நடந்தது? தேர்தல் ஆணையத்தின் அனுமதி இன்றி தனியார் நிறுவனம் வாக்குப்பதிவு எந்திரம் தயாரிப்பது குற்றம் ஆகாதா? என்று பதிவிட்டுள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவைத் தேர்தல் நேற்று நடைபெற்றது. தலைவர், துணை தலைவர், செயலாளர், இணை செயலாளர் ஆகிய நான்கு பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.

இந்தத் தேர்தலில், பாஜக ஆதரவு மாணவர் அமைப்பான ஏபிவிபி எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், மற்றும் காங்கிரஸ் ஆதரவு மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ எனப்படும் இந்திய தேசிய மாணவர் சங்கம் இடையே முக்கிய போட்டி நிலவியது.

தலைவர் பதவிக்கு ஏபிவிபி சார்பில் போட்டியிட்ட அங்கிவ் பசோயா வெற்றி பெற்றார். மேலும் ஏபிவிபியின் சார்பில், துணை தலைவராக சக்திசிங், இணை செயலாளராக ஜோதி சவுத்ரி ஆகியோரும் வெற்றி பெற்றனர். செயலாளர் பதவியை, என்எஸ்யுஐயை சேர்ந்த ஆகாஷ் சவுத்ரி கைப்பற்றினார்.

ஆம் ஆத்மி மற்றும் இடதுசாரி மாணவர் அமைப்புகள் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிட்டனர் ஆனால் வெற்றி பெறவில்லை.

பொதுத் தேர்தல்கள் போலவே, இந்தத் தேர்தலிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக என்எஸ்யுஐ குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த ஆகாஷ் சவுத்ரி கூறுகையில் ‘‘டெல்லி பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், தனியார் நிறுவனங்களில் இருந்து வாங்கப்பட்டுள்ளன. இதில் மோசடி நடைபெற்றுள்ளது. பாஜக ஆதரவு ஏபிவிபிக்கு அதிக வாக்குகள் பதிவாகும் வகையில் எந்திரம் திட்டமிட்டே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

( இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்