டெல்லியில் கடந்த இரு மாதங்களாகவே காற்று மாசுவின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையை போக்க டெல்லி அரசு பல கட்டுபாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக வாகனங்கள் இயக்குவதற்கு சில கட்டுபாடுகளை விதித்தது. அதேபோல டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய கழிவுகளை விவசாயிகள் எரிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசு காரணமாக, அதனை சுவாசிக்கும் மக்களின் ஆயுள் 17 ஆண்டுகள் வரை குறையும் என்கிறது உலக சுகாதார அமைப்பு.

தற்போது டெல்லியில் வாழும் மக்கள், சாதாரண மக்கள் சுவாசிக்கும் கெட்ட காற்றை விட 25 மடங்கு அதிகமான கெட்ட காற்றை சுவாசிக்கிறார்கள்.  இதே அளவுக்கு கெட்ட காற்று டெல்லியில் ஆண்டு முழுக்க நீடிக்காது என்றாலும், மிக மோசமான காற்று மாசினால், தில்லியில் வாழும் மக்களின் ஆயுட்காலம், நிர்ணயிக்கப்பட்டதை விட, 17 ஆண்டுகள் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல கடந்த 2016 ஆம் ஆண்டு மிக மோசமான காற்று மாசு குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில், டெல்லியில் வாழும் மக்கள், அவர்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட ஆயுள் காலத்தை விட 10 ஆண்டுகள் குறைவாக வாழும் நிலை ஏற்படலாம் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2016 ஆம் ஆண்டு முழு ஆயுளில் 10 ஆண்டுகள் குறையும் என்று கூறப்பட்டிருந்த நிலையில்,2019 ஆம் ஆண்டு ஏற்பட்டிருக்கும் காற்று மாசு காரணமாக இது 17 ஆண்டுகளாகக் அதிகரித்திருப்பது, கடந்த மூன்றே ஆண்டுகளில் காற்று மாசு நிலைமை எந்த அளவுக்கு மோசமடைந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.

மனிதனின் தலைமுடியின் அளவில் 3 சதவீத அளவில் காற்றில் கலந்திருக்கும் மாசானது, ரத்த நாளங்களில் தொடர்ந்து சென்றடையும் போது, அது அங்கே ஒன்றாக இணைந்து ஒரு புள்ளியாக (கிளாட்) உருவாகிவிடும். இதனால், ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் தடைபடும். இதன் காரணமாகவும் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிப்பு மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட சில நோய்கள் தாக்கக் கூடும். இதுபோன்ற காரணங்களால், மக்களின் ஆயுள் குறையும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசு காரணமாக இதய நோய், பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய், நீரழிவு உள்ளிட்ட நோய்கள் வரக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here