டெல்லி கலவர வழக்கு; 3 மாணவர்களுக்கான ஜாமீனை ரத்து செய்ய முடியாது- உச்சநீதிமன்றம் அதிரடி

Delhi HC verdict granting bail to 3 student activists will not be used by others in securing same relief as precedent, says SC

0
262

 டெல்லி வன்முறை வழக்கு தொடர்பாக 3 மாணவர்களுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம்  தெரிவித்துள்ளது. அதேநேரம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (unlawful activities prevention act/UAPA) தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் கூறிய கருத்துக்கள், பிற வழக்குகளில் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளப்படக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லி கலவரத்திற்கு தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்டிருந்த மாணவர் அமைப்பைச் சேர்ந்த தேவங்கனா கலிதா, நடாஷா நர்வால், ஆசிப் இக்பால், தன்ஹா ஆகியோருக்கும் பிணை வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது . 

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது வடகிழக்கு டெல்லியின் சில பகுதிகளில் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்திற்கு சதி செய்த குற்றச்சாட்டின் பெயரில் மாணவர் அமைப்புகளை சேர்ந்த தேவங்கனா கலிதா, நடாஷா நர்வால், ஆசிப் இக்பால் தன்ஹா ஆகியோரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் டெல்லி காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

இவர்கள் மூவரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் மூவருக்கும் கடந்த செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது. புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்குள் அவர்களை விடுதலை செய்ய காலக்கெடு நிர்ணயித்தது.

ஆனால் இரு தினங்களாகியும் நேற்றுவரை மூவரும் விடுதலை செய்யப்படவில்லை. காவல்துறை தரப்பில் கடைசி நேரத்தில் கூடுதல் அமர்வு நீதிபதி முன்பு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாணவர்களின் அடையாள சான்றுகளை முழுமையாக திரட்ட முடியவில்லை. எனவே அவர்களை இப்போது விடுதலை செய்யக் கூடாது என்று கூறப்பட்டது.

இதுபோன்ற காரணங்களை ஏற்க முடியாது என கண்டனம் தெரிவித்த நீதிபதி மாலை 5 மணிக்குள் மூவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களை பிணையை வழங்கிய பின் ஒரு நிமிடம் கூட சிறையில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற டெல்லி உயர்நீதிமன்றத்தின் கருத்தையும் நீதிபதி சுட்டிக்காட்டினார். இதனை தொடர்ந்து மாலையில் மூன்று மாணவர்களும் திகார் சிறையிலிருந்து வெளியாகினர்.

ஆனால், மாணவர்களுக்கு கொடுத்த ஜாமீனை  எதிர்த்து  காவல் துறை உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தது.

இன்று இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின், இந்த காலகட்டத்தில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை பிறப்பிப்பது தேவையற்றது என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது. எனவே மாணவர்களை ஜாமீனில் விடுதலை செய்ததற்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

போராட்டம் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகள் ஆகிய இரண்டுக்கும் இடையேயான வித்தியாசத்தை அரசு இல்லாமல் செய்து விட்டது இதுபோன்ற மனநிலை உருவாகுமானால் ஜனநாயகத்திற்கு அது கருப்பு நாளாக அமைந்து விடும் என்று உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது .

இதை உச்ச நீதிமன்றம் இன்று தனது உத்தரவின் போது சுட்டிக்காட்டியது. வெறும் 100 பக்கம் கொண்ட ஒரு உத்தரவில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் பற்றி டெல்லி உயர்நீதிமன்றம் அதிக அளவு கருத்து தெரிவித்திருப்பது கவலை அளிக்கிறது . ஒட்டுமொத்த நாடு முழுக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டம் இதுவாகும் .எனவே டெல்லி உயர் நீதிமன்றம் கூறிய இந்தக் கருத்துக்களை எந்தவொரு நீதிமன்றத்திலும் எந்த ஒரு மனுதாரரும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு ஜூலை 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here