டெல்லி அருகே பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் பெண் – முழு விவரங்கள்

In a shocking incident a girl was shot dead in broad daylight by an assailant outside her college in Haryana’s Ballabhgarh.

0
164

டெல்லி அருகே உள்ள ஃபரிதாபாத் நகரில் 20 வயதாகும் கல்லூரி மாணவி ஒருவர் திங்களன்று அவரது கல்லூரி வாசலிலேயே சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

நிகிதா தோமர் எனும் அந்த மாணவியின் கொலை அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவானது. இது தொடர்பாக தெளசீப், அவரது நண்பர் ரெகான் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள தெளசீப் மற்றும் கொலையான நிகிதா ஆகியோர் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

தெளசீப் தனது மகளுக்கு பல மாதங்களாகவே தொல்லை கொடுத்து வந்தார் என்றும், மதம் மாறி தம்மைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார் என்றும் நிகிதாவின் தந்தை மூல் சந்த் தோமர் கூறியுள்ளார் என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி.

காரில் வந்தவர்கள் முதலில் நிகிதாவை காருக்குள் இழுத்துச் செல்ல முயன்றதாகவும், பின்னர் அவரைச் சுட்டுக் கொன்றதாகவும் சம்பவத்தின்போது உடனிருந்த நிகிதாவின் தோழி கூறியுள்ளார்.

2018இல் ஏற்கனவே தெளசீப் நிகிதாவைக் கடத்தியதாகவும், உள்ளூர் பஞ்சாயத்து நடத்தப்பட்டு, நிகிதாவின் குடும்பத்தினர் தெளசீப் மீதான வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டதாகவும் காவல் துறை வட்டாரங்கள் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவிக்கிறது.

தெளசீபின் உறவினர் அஃப்தாப் அகமது என்பவர் ஹரியானா மாநில காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இனிமேல் தங்கள் மகன் நிகிதாவை தொந்தரவு செய்ய மாட்டார் என அவரது குடும்பத்தினர் 2018இல் உறுதியளித்தனர் என்று அந்தச் செய்தி விவரிக்கிறது.

ஹரியானா காவல்துறை விசாரித்து வரும் இந்த வழக்கு தொடர்பாக, அந்த மாநில மகளிர் ஆணையம் அறிக்கை அளிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here