டெல்லியில், உஸ்பெகிஸ்தான் பெண்ணை காரில் கடத்திப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், இரண்டு மாதத்துக்கு முன் டெல்லி வந்துள்ளார். தனது நாட்டை சேர்ந்த பெண் ஒருவருடன் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு கடந்த ஏழு மாதங்களுக்கு முன் குர்கானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அறிமுகமானார். இருவரும் நட்பாகப் பழகி வந்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி, உஸ்பெகிஸ்தான் பெண்ணுக்கு போன் செய்த அந்த இளைஞர், தெற்கு டெல்லியில் உள்ள மால் ஒன்றுக்கு வருமாறு அழைத்தார். சென்றார் அந்தப் பெண். காரில் ஏறும் படி கூறியுள்ளார், இளைஞர். ஏறினார். காருக்குள் ஏற்கனவே இரண்டு பேர் இருந்தனர். ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு கார் சென்றதும் நிறுத்திவிட்டு, அந்தப் பெண்ணை மூன்று பேரும் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

பின்னர் அவரை சரமாரியாகத் தாக்கியபின், இறக்கிவிட்டுச் சென்று விட்டனர்.  ஒரு வழியாக தனது அறைக்கு வந்த அந்தப் பெண், நடந்த சம்பவத்தை தனது தோழியிடம் கண்ணீருடன் கூறினார். இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் அவரை சேர்த்தார் தோழி. பின்னர் போலீசில் புகார் செய்யப்பட்டது. 

பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ள போலீசார், பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் 2 பேரை கைது செய்துள்ளனர். ஒருவரை தேடி வருகின்றனர்.