டெல்லிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் உலகின் பாதுகாப்பான நகரமாக மாற்றுவேன் – அர்விந்த் கெஜ்ரிவால்

0
118
Arvind Kejriwal

டெல்லிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் உலகின் பாதுகாப்பான நகரமாக மாற்றுவேன் என முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் புதன்கிழமை கூறினார். இதுதொடர்பாக ஆம்ஆத்மி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியதாவது:

டெல்லிக்கு எந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக இருந்தாலும், அதற்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், இந்நிலை இதர மாநிலங்களுக்கு கிடையாது. இந்த நடைமுறையால் டெல்லி தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது. 

நமக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக டெல்லி காவல்துறையை அணுகினால், அவர்கள் அதை கண்டுகொள்ள மாட்டார்கள். பின்னர் அப்பகுதி எம்எல்ஏ-விடம் முறையிட்டால், அவர்களாலும் டெல்லி காவல்துறையை கட்டுப்படுத்த முடியாது. அதே பிரச்னைக்காக முதல்வரை சந்தித்தாலும் அதே நிலை தான் தொடரும். 

ஏனென்றால் டெல்லி காவல்துறை பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கக்கூடியது. ஆனால், பிரதமருக்கு டெல்லி மக்களின் மீது அக்கறை கிடையாது. எனவே அவரிடம் இருந்து எந்த நடவடிக்கையையும் எதிர்பார்க்க முடியாது. அதுவே, டெல்லிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால், இங்குள்ள எந்த பெண் மீதும் யாரும் கைவைக்க முடியாத அளவுக்கு சீர்திருத்தங்களுடன் கூடிய கடுமையான சட்டதிட்டங்களை அமல்படுத்த முடியும். 

ஆம்ஆத்மி ஆட்சிக்கு வருவதற்கு முன், அரசு பள்ளிகளும், மருத்துவமனைகளும் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. பின்னர் நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் அதன் சீர்திருத்தங்களை ஏற்படுத்தினோம். அதே நிலையை மாநில அந்தஸ்து கிடைத்தால் சட்டதிட்டங்களிலும் ஏற்படுத்த முடியும். அதன்மூலம் உலகின் பாதுகாப்பான நகரமாக டெல்லியை மாற்ற முடியும் என்று தெரிவித்தார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here