டெங்குவா? நீங்கள் என்ன செய்ய வேண்டும்? மருத்துவ அவசர நிலையை ஏன் அறிவிக்க வேண்டும்?

உங்களுக்கு டெங்கு வந்தால் என்ன செய்ய வேண்டும்?

0
603

டெங்கு பாதித்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை மருத்துவர் வீரபாபு விவரிப்பதை இங்கே கேளுங்கள்:

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இது:

தமிழ்நாட்டில் 2000த்தில் டெங்குக் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டது; 2012-13 ஆண்டு வாக்கில் தமிழ்நாட்டில் முதன்முதலாக டெங்குக் காய்ச்சல் தீவிரமாகியது; தற்போது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் டெங்குக் காய்ச்சல் தீவிரமடைந்து சுமார் 400க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

மேலும் காலநிலை நோயாக இருந்த டெங்கு நோய் தற்போது வருடாந்திர நோயாக மாறியுள்ளது. உலகளவில் 10 லட்சம் மக்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் சென்னையில் உலக நோய் ஆய்வு செய்யும் அமைப்பு ஒன்று 2015 இல் நடத்திய ஆய்வுப்படி சென்னையில் மட்டும் 23% மக்கள் டெங்கு நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறுகிறது. தற்போது தமிழ்நாட்டில் 10% மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறோம். எனவே டெங்குக் காய்ச்சலை மருத்துவ அவசர நிலையாக அறிவிக்க வேண்டும்.

டெங்கு நோய்ப் பாதிப்பில் பாதிக்கப்பட்டோர், மரணமடைந்தோர் பற்றிய உண்மைத்தன்மையும் வெளிப்படைத்தன்மையும் அரசிடம் இல்லை. இவ்வளவு டெங்கு காய்ச்சல் தீவிரமான நிலையிலும் அரசு உண்மைத்தன்மையைத் தெரிவிக்கவில்லை எனக் கருதுகிறோம்.

இந்நிலையில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதில் அரசு போதிய கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக டெங்கு நோய் பரவுவதற்கு காரணமான சுற்றுப்புற சுகாதார நிலையை மேம்படுத்த வேண்டும். குடி தண்ணீரில் அபேட் என்ற வேதிப் பொருளையும் பிற தண்ணீரில் பைடெக்ஸ் என்ற வேதிப் பொருளையும் உரிய கால இடைவெளியுடன் தெளிக்க வேண்டும். பொது இடங்களில் தண்ணீர் தேங்குவதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனுக்குடன் தேங்கிய தண்ணீரை அகற்றுவதற்கு பல்வேறு துறைகளுடன் இணைந்து பொது சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும். அதற்குப் பதிலாக மக்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறுவது வேதனைக்குரியது.

எனவே சுற்றுப்புற சுகாதார நிலையை மேம்படுத்த மக்களின் பங்கேற்பை உறுதி செய்யும் கிராம, நகர சுகாதாரக் குழுக்களை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். இதன் மூலமே டெங்குக் கொசுவைக் கட்டுப்படுத்த முடியும்.

தற்போது நிலவும் தீவிரமான சூழ்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து மாவட்ட மருத்துவமனை வரை அனைத்து நிலைகளிலும் டெங்கு நோயைக் கண்டறியும் அடிப்படைக் கட்டமைப்புகளையும் சோதனை செய்து கண்டறியும் முறைகளையும் மேம்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள் ஆகியனவற்றை உறுதி செய்ய வேண்டும். போதுமான எண்ணிக்கையில் மருத்துவர்களையும் ஊழியர்களையும் அதிகப்படுத்த வேண்டும். இது மக்கள் எளிதாக அணுகுவதற்கும் நம்பிக்கையையும் உருவாக்கும்.

டெங்குக் காய்ச்சல் தீவிரமடைந்துள்ளதால் கார்ப்பொரேட் உட்பட தனியார் மருத்துவமனைகளும் இதில் சமூகப் பங்களிப்பாக கட்டணமில்லா பங்களிப்பாக பங்கேற்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

அதேபோல் மக்களிடம் டெங்கு பற்றிய தவறான அணுகுமுறைகள், கருத்துகள் பரப்பப்படுகின்றன. கொசு காலுக்கு மேல் கடிக்காது. எனவே எண்ணெய் தடவினால் போதும் போன்ற கட்டுக்கதைகளை நம்ப வேண்டாம். நிலவேம்புக் கசாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை அதிகம் இருக்கிறது. சந்தையில் வாங்கி பயன்படுத்தும் நிலவேம்புப் பொருட்கள் தரமற்று இருக்கும் வாய்ப்பு உள்ளது. அரசே சித்த வைத்திய மருத்துவமனைகள் மூலம் தரப்படுத்தப்பட்ட நிலவேம்பு மருந்தினைத் தர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். ஆனால் அதே சமயத்தில் நில வேம்புக் கசாயம் மட்டும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும், தீர்க்கும் என மக்கள் நம்பிவிட வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறோம். உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சோதனை செய்து உரிய மருத்துவ முறைகளைக் கைக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். டெங்கு என்ற வைரஸ் நோய்க்கு மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. எனவே ஆரம்பத்திலேயே கண்டறியப்படுவதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து பிளேட்டுலெட்டுக்கள் எண்ணிக்கையைக் கண்டறிந்து, அதனை அதிகரித்து உயிரைக் காப்பாற்ற முடியும்.

நிலவேம்புக் கசாயம் அல்லது நிலவேம்பு, டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாக & நோய்க்கு மருந்தாக எந்த அளவில் மருத்துவ அறிவியல்பூர்வமாக பங்காற்றுகிறது என்பதை சித்த மருத்துவ மத்திய, மாநில மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களும், ம்த்திய அரசின் மருத்துவ தலைமை அமைப்பான Indian Council of Medical Research-ICMR முழுமையான தொடர் ஆய்வு நடத்தி வெளியிட வேண்டும் என்று மத்திய , மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறோம்

சுமார் 2000 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 1000 மருத்துவமனைகளும் தனியார் உட்பட 48 மருத்துவக் கல்லூரிகளும் கொண்ட சிறந்த மருத்துவக் கட்டமைப்பு உள்ள தமிழ்நாடு பாராட்டுக்குரியது என்றாலும் டெங்கு இதுநாள் வரை கட்டுப்படுத்த இயலாமல் போனது மிகவும் கவலை அளிக்கிறது. இந்த மனித வளத்தையும் கட்டமைப்பையும் சீரிய முறையில் கையாண்டு சிறப்பாகச் செயலாற்றிடக் கேட்டுக் கொள்கிறோம். மத்திய மாநில அரசுகள் தேவையான அதிக நிதியினை ஒதுக்கி போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு டெங்கு பாதிப்புகளைப் போக்க வேண்டும்.

இந் நிலையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழகம் முழுவதும் மற்றும் டெங்கு தீவிரமாகக் காணப்படும் திண்டுக்கல், சேலம், தென் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலும் டெங்கு ஒழிப்பு மக்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை சுயேச்சையாகவும், மக்கள் நல்வாழ்வு இயக்கம் என்ற கூட்டமைப்பு மூலமும் தொடங்கியுள்ளோம்; விரிவாக கொண்டு செல்ல உள்ளோம்.

டெங்கு மரணங்களே இனி இல்லை என்ற அளவில் தமிழகத்தை மாற்றிட அரசாங்கத்துடனும், பிற சமூக அக்கறையுள்ள அமைப்புகளுடனும் சேர்ந்து பணியாற்றிட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முழுமூச்சுடன் செயல்பட தயாராக இருக்கிறோம்!! என்று அனைவருக்கும் அறைகூவல் விடுக்கிறோம்.

இதையும் படியுங்கள்: நீங்கள் பார்க்காத அமெரிக்கா

அன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்