டூல் கிட் வழக்கில் திஷா ரவிக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு இரு நபர் உத்தரவாதத்துடன் தலா ரூ.1 லட்சம் செலுத்த உத்தரவிட்டுள்ளது .
திஷா ரவி தனக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீது, டெல்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணை நடத்த மேலும் கால அவகாசம் வேண்டும் என்று, திஷாவுக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது.
ஜனவரி 26 அன்று விவசாயிகள் போராட்டத்தில் நடந்த வன்முறைக்கும் திஷா ரவிக்கும் உள்ள தொடர்புக்கான சாட்சி என்ன என்று நீதிபதி கேட்க, ‘சதித் திட்டத்தில் அனைவருக்கும் ஒரே போன்ற வேலை இருப்பதில்லை. இந்த டூல்கிட்டால் தூண்டப்பட்ட ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம்’ என்றது காவல்துறை. அந்தப் பதிலில் திருப்தியடையாத நீதிபதி, போராட்டத்துக்கு நேரடி தொடர்பு உள்ள வகையில், டூல்கிட்டில் உள்ள தகவல்களைக் காட்டுமாறு கேட்டார்.
‘நேற்று திஷா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. பிப்ரவரி 22 வரை திஷா காவலில் இருக்க வேண்டும். அவருக்கு ஜாமீன் வழங்கினால், விசாரணை தடைபடும்’ என்று தெரிவித்தது காவல்துறை.
இன்று ஜாமீன் மனு விசாரணையின் இறுதியில், தீர்ப்பு ஃபிப்ரவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடனைச் சேர்ந்த பருவநிலை செயல்பாட்டாளரான கிரேட்டா துன்பெர்க்,
இந்தியாவில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, அமைதியான
போராட்டங்களை நடத்துவதற்கு வழிகாட்டும், “டூல்-கிட்” (வழிகாட்டு ஆவணம்)
ஒன்றை பகிர்ந்திருந்தது தொடர்பாக, அவர் மீது டெல்லி காவல்துறை தேசவிரோத
வழக்கை பதிவு செய்தது.
கிரெட்ட பகிர்ந்த அந்த டூல் கிட்டை வெளியிட்ட காரணத்திற்காக, 22 வயது
சூழலியல் செயல்பாட்டாளர் திஷா ரவி, டெல்லி காவல்துறையினரால் கைது
செய்யப்பட்டார்.
கிரேட்டா துன்பர்க் டூல்கிட்கிட்டில் என்ன இருந்தது?
இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகப் பாப் பாடகி ரிஹானா ட்விட்டரில் பதிவிட்ட பின்பு சுவீடனைச் சேர்ந்த மாணவியும் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான செயலாளருமான கிரேட்டா துன்பர்க் தமது ட்விட்டர் பக்கத்தில் ‘டூல்கிட்’ ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.
அந்த ட்விட்டர் பதிவில் இந்தியாவில் களத்தில் உள்ள மக்களால் இந்த டூல்கிட் புதுப்பிக்கப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதன் பின்பு அதை தமது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கி இருந்தார்.
பிப்ரவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பதிவுகள் மூலம் ‘ட்விட்டர் புயல்’ உருவாக்குவது, போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புகைப்படம் மற்றும் காணொளிகளை வெளியிடுவது ஆகியவை கிரேட்டா துன்பர்க் டூல்கிட்கிட்டில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
அதானி,அம்பானி போன்ற பெரு முதலாளிகளுக்கு எதிராக செயல்படுவது, அரசு அதிகாரிகள் மற்றும் அரசை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுக்கு விவசாயிகள் போராட்டம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் கோரிக்கை வைப்பது, பிப்ரவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் அவரவர் இருக்கும் இடத்துக்கு அருகில் உள்ள இந்தியத் தூதரகம், ஊடக நிறுவனம் அல்லது உள்ளூர் அரசு அலுவலகம் ஆகியவற்றின் அருகே போராட்டம் நடத்துவது உள்ளிட்டவையும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.
கிரேட்டா துன்பர்க் பதிவிட்டிருந்த டூல்கிட் இந்திய அரசுக்கு எதிராக செயல்பட விரும்பும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் சதி என்றும் கிரேட்டா தன்னுடைய பதிவு மூலம் காலிஸ்தான் பிரிவினைவாதத்தை தூண்டும் சதித்திட்டத்தில் ஈடுபட்டார் என்றும் டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
கிரேட்டா துன்பர்க் மட்டுமல்லாது ‘அடையாளம் அறியப்பட்டவர்கள்’ மீதும் டெல்லி காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.