2014 தேர்தலில் டீ விற்பனையாளராக இருந்த பிரதமர் நரேந்திர மோடி, 2019 தேர்தலில் காவலாளியாக மாறிவிட்டார். பாஜக ஆட்சியில் ‘இந்தியா மாறுகிறது’ என்று கூறுவது இதைத்தானா என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கிண்டல் செய்துள்ளார்.

பிரதமர் மோடியின் நானும்கூட காவல்காரர் என்ற வாசகத்தை கிண்டல் செய்துள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், மக்கள் தங்கள் பிள்ளைகள் காவல்காரராக வரவேண்டும் என்று விரும்பினால், மோடிக்கு வாக்களிக்கலாம் என்று கிண்டல் செய்துள்ளார்

“நானும் தேசத்தின் காவலாளி ” என்ற ஹேஷ்டேக் கொண்ட தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் நேற்று (சனிக்கிழமை) தொடங்கினார்.

2014 மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, ஆட்சிக்கு வந்தால் மக்களின் பணத்தையும், நம்பிக்கையும் பாதுகாக்கும் பாதுகாவலனாக செயல்படுவேன் என்று நரேந்திர மோடி கூறினார். அதன்பிறகு, அவர் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரும் ஆனார்.

ஆனால், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசத்தின் காவலாளி ஒரு திருடன் என்று குறிப்பிட்டார். இதன்மூலம், தேசத்தின் காவலாளி ஒரு திருடன் (ChowkidarChorhai) என்ற ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் டிரெண்டிங் ஆனது. இதன்மூலம், காவலாளி என்று பிரதமர் மோடி முன்மொழிந்த சொல் விமரிசனமாக மாறியது.

இந்நிலையில், அதே காவலாளி என்ற சொல்லை பயன்படுத்தி பிரதமர் மோடி 2019 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். பிரதமர் மோடி சனிக்கிழமை தனது டிவிட்டர் பக்கத்தில் “உங்களுடைய காவலாளி உறுதியாக நின்று நாட்டுக்கே சேவையாற்றி வருகிறேன். ஆனால், நான் தனி நபர் அல்ல. ஊழலுக்கு எதிராகவும், சமூகத்தில் நிலவும் தீய செயல்களுக்கு எதிராகவும் போராடும் அனைவருமே பாதுகாவலர் தான். நாட்டின் வளர்ச்சிக்காக கடினமாக உழைக்கும் அனைவருமே காவலாளிதான். இன்று, அனைத்து இந்தியர்களும் ‘நானும் தேசத்தின் காவலாளியே’ #MainBhiChowkidar என்று சொல்கின்றனர்” என்றார். மேலும், இந்த பதிவின் முடிவில், ‘நானும் தேசத்தின் காவலாளியே’ #MainBhiChowkidar என்ற உறுதிமொழியை ஏற்று ஹேஷ்டேக்கை டிவீட் செய்யுமாறும் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் ஓட்டுமொத்த தேசத்தைக் காவல்காரராக மாற்ற பிரதமர் மோடி முயற்சித்து வருகிறார். மக்கள் தங்கள் குழந்தைகளைக் காவல்காரராக ஆளாக்கிப் பார்க்க விரும்பினால், அவர்கள் தாராளமாக மோடிக்கு வாக்களிக்கலாம். ஆனால், தங்கள் குழந்தைக்கு நல்ல கல்வி தேவை, எதிர்காலத்தில் மருத்துவராகவோ, பொறியாளராகவோ, வழக்கறிஞராகவோ மாற வேண்டும் என்று மக்கள் விரும்பினால் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

இது குறித்து மாயாவதி தனது டிவிட்டர் பக்கத்தில் கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது நரேந்திர மோடி டீ விற்பனையாளராக இருந்தார். இப்போது 2019 மக்களவைத் தேர்தலில் காவலாளியாக மாறிவிட்டார். பாஜக ஆட்சியில் ‘இந்தியா மாறுகிறது’ என்று கூறுவது இதைத்தானா? இந்த மாற்றம் பிரமிப்பாக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியபோது, ‘‘பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான சில ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன. இதற்கு காவலாளி பொறுப்பேற்பாரா’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கிழக்கு உத்தரபிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா கூறியபோது, ‘‘பிரதமர் மோடி பணக்காரர்களுக்கு மட்டுமே காவலாளியாக இருக்கிறார்’’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.