குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளிக்குமாறு பாஜக வெளியிட்ட மிஸ்டுகால் நெம்பரை வைத்து டிவிட்டரில் பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் மக்களுக்கு எவ்வித பாதிப்புமில்லை என்றும் எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்று பாஜகவினர் கூறிவருகின்றனர்.

இதையடுத்து பாஜகவினர் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அந்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்போர் மிஸ்டு கால் கொடுக்கும் வகையில் 8866288662 என்ற தொலைபேசி எண்ணை வெளியிட்டனர். இந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், அது ஆதரவு வாக்காக பதிவாகும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மிஸ்டு கால் திட்டத்தை சிலர் ட்விட்டரில் தவறாக சித்தரித்து வருகின்றனர். அதாவது இந்த நெம்பருக்கு மிஸ்டுகால் கொடுத்தால், 6 மாதம் இலவச நெட்ஃப்ளிக்ஸ் உபயோகப்படுத்தலாம் என டிவிட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார். அத்துடன், வேலை வாய்ப்புகளுடன் இணைக்கவும் அல்லது தொலைபேசி செக்ஸ் ஆபரேட்டர்களுடன் தொடர்பு கொள்ளவும் இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுங்கள் எனவும் சிலர் பரப்புகின்றனர். இதுவேண்டுமென்றே சிஏஏவுக்கு ஆதரவை அதிகரிக்கச் செய்வதற்காக மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து நெட்ஃபிளிக்ஸ் இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில், “இது முழுவதும் பொய்யான தகவல். நீங்கள் இலவச நெட்ஃபிக்ஸ் விரும்பினால், எங்களைப் போன்று வேறு ஒருவரின் கணக்கைப் பயன்படுத்தவும்” எனத் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here