சட்டையின் இரண்டு பாக்கெட்டுகளிலும் பல கடிதங்கள், மனுக்கள். அறையிலுள்ள டிவியில் செய்திதான் எந்த நொடியும். வக்கீல்கள் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். செல்போனில், “அதுக்கு ஒரு கேஸ் போட்டுடலாம்”, என்கிறார். இப்போதே கண்டுபிடித்திருப்பீர்களே. அவரேதான். இடைத்தேர்தல் எங்கு நடந்தாலும் முடிவு என்ன என்று தெரிந்தும் அசராமல் போட்டியிடுவாரே, அவர்தான். சென்னையின் சில பகுதிகளில் நடைபாதைக் கடை நடத்துபவர்களின் வயிற்றில் அடித்த அவரேதான் இவர். பாலாற்றில் மணல் அள்ளுவது முதல் எளியவர்கள் பிழைக்க உதவும் மீன்பாடிக்குத் தடை கேட்பது வரை சென்னை உயர் நீதிமன்றத்தைச் சுற்றி வருவாரே அவரேதான் இவர்; டிராஃபிக் ராமசாமி. “அடுத்து என்ன கேஸ் போடலாம்”, என்று யோசித்துக் கொண்டிருந்தவரை கொஞ்சம் எங்களுக்குப் பேட்டி கொடுத்துவிட்டு யோசியுங்கள் என்று அமைதிப்படுத்தினோம்.

”சொப்பா! எவ்ளோ வழக்கு பெண்டிங்ல இருக்கு”
”சொப்பா! எவ்ளோ வழக்கு பெண்டிங்ல இருக்கு”

14 வயசுலயே 10 கிலோ அரிசியைக் கொடுக்காமல்விட்ட செய்யாறு தாசில்தாரை சஸ்பென்ஸ் செய்ய வைத்தார். 1948இல் இது நடந்தது. ஆச்சரியம் இல்லை. இவருடைய தந்தை என்.கே.ரங்கசாமி அப்போது வடசென்னையின் காங்கிரஸ் செயலாளர். ராமசாமிதான் தேர்தல் வேலைகளைக் கவனிப்பார். இவருடைய பொது வாழ்க்கை ஆசான் ராஜாஜி. ராஜாஜி சொன்னது அத்தனையும் வேதவாக்கு. “உன்னைக் குற்றம் சொல்பவர்களின் வார்த்தைகளை அதிகம் கேள். அதுதான் உன்னை உயர்த்தும்.” என்று அவர் சொன்னதை இன்றும் பின்பற்றுகிறார். “இட ஒதுக்கீடே கூடாது. அதுதான் ஏற்றத்தாழ்வுக்குக் காரணம்.” என எதையும் யோசிக்காமல் சொல்லுகிறார். இதிலிருந்தே இவரது பிற்போக்குத்தனமான அரசியலைப் புரிந்துகொள்ளலாம். பொங்கல் திருநாளை தமிழர் திருநாளாகக் கொண்டாடக் கூடாது என வழக்குப் போட்டவர்; இப்படித் தேவையில்லாத விஷயங்களுக்கு வழக்குப் போடுவதிலும் கை தேர்ந்தவர்.

”பி.எம்.சி மில்லில கிளார்க்கா சேர்ந்து ஆஃபீசரா ரிட்டையர்ட் ஆனேன். எந்தக் குடும்பத்துலதான் வேலை இல்லாம, சமூக சேவை பண்ணா வச்சிப்பாங்க. அதனால நானே வெளியில வந்துட்டேன். மனைவிகிட்ட இருந்து காசு வாங்க மாட்டேன். நானும் அவங்களுக்குக் கொடுக்க மாட்டேன்” என்கிறார் ராமசாமி. அவருடைய மனைவி சகுந்தலாவும் சாதாரண வேலையிலிருந்து பெரிய பதவிக்கு உயர்ந்தவர். அவருடைய ஒரே மகளுக்கு வேலையும் வாங்கித் தந்திருக்கிறார். ஆனால், இப்போது குடும்பத்தைப் போய்ப் பார்க்கும் ஆர்வம் இல்லை.

ஆளும் கட்சி, மற்ற கட்சிகளைப் பயப்பட வைக்காவிட்டாலும், அவர்கள் மத்தியில் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மற்ற பெரிய கட்சிகளெல்லாம் ஒதுங்கிக்கொள்ள, தனித்துப் போட்டியிட்டார். “எனக்குத் தெரியும் யார் ஜெயிப்பாங்கன்னு. ஆனா, எனக்குனு 5,000 ஓட்டு விழுந்துதுல்ல. எதிர்க்க யாருமே இல்லன்னு அ.தி.மு.க. இருந்தப்ப நான் போட்டி போட்டன்ல. அதுவே வெற்றித்தான”, என்று பெருமை கொள்கிறார் ராமசாமி. ஸ்ரீரங்கமாக இருக்கட்டும், ஆர்.கே.நகர் தேர்தலாக இருக்கட்டும் தேர்தலில் நின்று புகழ் பெறுவதற்கு முயற்சிக்கிறார்.

சில விஷயங்களில் மக்களுக்காக இவர் வழக்குப் போட்டாலும் அதனால் பாதிக்கப்பட்டவர்களும் சாதாரண மக்களே. 2005இல் நடைபாதை வியாபாரிகளின் கடைகளை அகற்றுவதற்காக அவர்களுடன் சேர்ந்து லாட்டரிச் சீட்டுக்கள் விற்றார். பின், வழக்குத் தொடர்ந்து அந்தக் கடைகளையெல்லாம் காலி செய்தார். அவர்களுக்கு மாற்று ஏற்பாடு? தியாகராய நகரில், எத்தனையோ பெரிய கடைகள் நடைபாதைகளை ஆக்கிரமித்துக் கட்டியுள்ளன. ஆனால் அதை ஏன் டிராஃபிக் ராமசாமி கேட்கவில்லை. மீன்பாடி வண்டியை 2009இல் வழக்குப் போட்டு தடை செய்தார். இதனால், அப்போது மீன்பாடி வண்டி ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தத் தடையினால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

ஊழலுக்கு எதிராகப் போராடும் மனிதனாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறார் டிராஃபிக் ராமசாமி. ஆனால் இவர் சொல்வதைக் கேட்டால் பேச்சிலேயே முரண் தெரிகிறது. “கட்டாயப்படுத்தி ஒருவரிடம் லஞ்சம் கேட்டால்தான் தவறு. அவர்களாக ஆசைப்பட்டுக் கொடுத்தால் தவறில்லை. நான் இருக்கும் இந்த வீடு, ஜீப், டிவி, கம்ப்யூட்டர் எல்லாம் மக்கள் கொடுத்ததுதான். இதை நான் அவர்களுக்காகத்தான் பயன்படுத்துகிறேன்” என்று சொல்கிறார். ஆனால், இதையெல்லாம் யார் வாங்கித் தந்தார்கள் என்று கேட்டால் சரியான பதில் இல்லை. தியாகராய நகரில் இவருக்கு ஒரு வீடுகூட தி.நகரில் பெரிய கடை வைத்திருக்கும் ஒருவர்தான் வாங்கிக் கொடுத்திருக்கிறார். நடைபாதைக் கடைகளைத் துரத்துவதற்கு அவருக்குக் கொடுத்திருக்கும் சன்மானமோ இது?

விளம்பரத் தட்டிகளை அனுமதியின்றி வைக்கக்கூடாது என்று நீதிமன்றத்தில் வாதாடி வெற்றியும் கண்டார். ஒருமுறை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்ட விளம்பரத்தட்டியை கையாலேயே கிழித்து எறிந்தார். இதைப்பார்த்த மு.க.ஸ்டாலின் டிராஃபிக் ராமசாமியைப் பாராட்டி “அப்படியே வள்ளுவர் கோட்டத்தில் வைக்கப்பட்ட திருமாவளவன் விளம்பரத்தையும் கிழித்து எறியுங்கள்” என்று சொல்லியிருக்கிறார். அதையும் செய்துவிட்டார். “இப்போது பலம் இல்லை. அதனால் விளம்பரத் தட்டிகளைக் கையால் கிழிக்க முடியவில்லை” என்று தற்போதைய வருத்தத்தைத் தெரிவிக்கிறார்.

”இத கிழிச்சிட்டு அங்க இருக்குற பிளக்ஸ் போர்ட வேற கிழிக்கணும்”
”இத கிழிச்சிட்டு அங்க இருக்குற பிளக்ஸ் போர்ட வேற கிழிக்கணும்”

பேசிக்கொண்டே இருந்தவரை இடைமறித்து நடுவில் சேர்ந்துகொண்டார் பாத்திமா. ”டிராஃபிக் ராமசாமி போகும் வழி எனக்குப் பிடித்திருந்தது. வந்து சேர்ந்துகொண்டேன். யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான்தான் போட்டியிட்டிருக்க வேண்டும். அதற்குள் என்னுடைய ஜீப்பை ஆளும் கட்சியினர் விபத்து செய்துட்டாங்க. கால் முறிஞ்சிடுச்சு” என்று ஆரம்பத்திலேயே பொரிந்துத் தள்ளுகிறார் பாத்திமா. எங்கள் இரண்டு பேரையும் பற்றி யார் என்ன சொன்னாலும் தங்களுக்குக் கவலை இல்லை என்று இரண்டு பேரும் ஒருமித்த குரலில் சொல்கின்றனர்.

”ட்ராஃபிக் ராமசாமிதான் எனக்கு குரு”, படத்தில் ட்ராஃபிக் ராமசாமி மற்றும்  பாத்திமா.
”ட்ராஃபிக் ராமசாமிதான் எனக்கு குரு”, படத்தில் ட்ராஃபிக் ராமசாமி மற்றும் பாத்திமா.

டிராஃபிக் ராமசாமிக்கு 82 வயது. இன்னும் 15 வருடங்கள் உயிர் வாழ்வேன் என்ற நம்பிக்கை அவருக்கு உள்ளது. “சாப்பாடு சாப்பிடுவதில்லை. நீர் ஆகாரம்தான். கண்டிப்பாக 100 வயதைத் தாண்டி வாழ்வேன்” என்கிறார் காபியைக் குடித்துக் கொண்டே.

வழக்குகள் போடுவதில் இவருக்குக் கட்சி பேதங்கள் இல்லை. ஆளும் கட்சியை எதிர்த்தே நிறைய வழக்குகளைப் போட்டிருக்கிறார். இதனால் இவருக்குப் பல தடவை மிரட்டல்கள், கொலை முயற்சி ஆகியவை வந்திருக்கின்றன. அதனால்தான் பிராட்வேயில் உள்ள இவரது வீட்டில் எப்பொழுதும் இரண்டு காவல்துறையினரின் பாதுகாப்பு இருக்கும். ”இவரால் வாழ்விழந்த சாலையோர சனங்களின் கோபத்திலிருந்தும் பாதுகாக்கத்தான் இந்த ஏற்பாடு” என்கிறார் நடைபாதை வியாபாரியான லாலாகுண்டா அப்துல்லா.

இவருக்கு டிராஃபிக் ராமசாமி என்று பெயர் வந்ததுகூட சுவாரஸ்யமானதுதான். பாரிமுனையில், போக்குவரத்து நெரிசலை இவரே இறங்கி சரி செய்வார். இதைக் கண்ட போக்குவரத்துத் துறை இவருக்கு அடையாள அட்டையையும் கொடுத்தது. அதற்காகத்தான் அவருக்கு டிராஃபிக் ராமசாமி என்று பெயர் வந்தது.

தமிழக அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு ஏன் முதல்வரின் படம் இருக்கிறது என்று போட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது. “அம்மா என்ற பெயர் இருக்கட்டும். ஆனால், ஏன் அவர்களுடைய படம் இருக்கிறது?” என்பது இவருடைய குறை. இப்போது மதுரையில் கிரானைட் குவாரிக்காக நரபலி கொடுக்கப்பட்டது குறித்து பேசுகிறோம். ஆனால், கிரானைட் முறைகேடு பற்றி தனிநபர் விசாரணை வேண்டும் என்று சொன்னது டிராஃபிக் ராமசாமிதான். பாலாற்றில் மணல் அள்ளுவது குறித்து புகார் அளித்ததும் ராமசாமிதான்.

”சார், எப்படியாவது கண்டுபிடிச்சுடுங்க”
”சார், எப்படியாவது கண்டுபிடிச்சுடுங்க”

மக்கள் பிரச்சனைகள் மற்றவர்கள் கண்களுக்குத் தெரிந்தாலும் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று இவருக்குத் தோன்றுகிறது. 82 வயதிலும் அவரை தள்ளிவிடுவது என்ன? தெரியவில்லை.

தனி ஆளாக பிரச்சனைகளுக்குக் குரல் கொடுப்பவர்களை இயல்பாகவே மக்களுக்குப் பிடித்துவிடும். அப்படித்தான் ராமசாமிக்கும் அவர் செல்லும் இடத்தில் எல்லாம் மரியாதை. இவருடைய எதிரிகளுக்குக் கூட இவரைக் கண்டால் ஒரு ‘கிலி’தான். கடைசியாக அவரைத் தாக்கியபோது மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் வந்து பார்க்கிறார். ஆர்.கே.நகர் தேர்தலில் தொல்.திருமாவளவன் ஆதரவு. தி.மு.கவுடன் நெருக்கம். (இவர்கள் உண்மையாக ஆதரவு தந்தார்களா என்பது நமக்கு வேண்டாம்). “இவர் எப்படி இதெல்லாம் செய்கிறார்?” என்ற சந்தேகத்தை எல்லோரிடமும் எழுப்பிக்கொண்டே இருக்கிறார்.

”எந்தக் கட்சி பேதமும் இல்லை”
”எந்தக் கட்சி பேதமும் இல்லை”

இவருக்கு மக்கள் நலம் மட்டும் முக்கியமில்லை. தனிப்பட்ட முறையில் இவருக்குப் பதவிகளும் வேண்டும். அதனால்தான் இந்தத் தேர்தல் பங்களிப்புகள் எல்லாம். “2016இல் கண்டிப்பாக மூன்றாம் அணிதான் வெல்லும். தி.மு.க, அ.தி.மு.க இல்லை” என்று உறுதியுடன் கூறுகிறார். ஆனால் மூன்றாவது அணி எது என்று கேட்டால் தடுமாறுகிறார். இவரும் தமிழக ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் நெருக்கம். அடுத்த சட்டசபைத் தேர்தலில் இருவரும் கைகோர்ப்பது உறுதி. சில சமூக இயக்கங்களும் ஆதரவு. ஆக, 2016 தேர்தலில், முழுமூச்சுடன் இறங்கப் போகிறார். வழக்கு, நீதிமன்றம், கொலை மிரட்டல், தாக்குதல் என இவரது வாழ்க்கை தொடரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here