மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகளின் குழந்தைகளை தனியாக பிரித்து அடைத்து வைக்கும் வகையில் புதிய நடவடிக்கையை டிரம்ப் கொண்டு வந்தார். இதன்படி, சுமார் 2 ஆயிரம் குழந்தைகள் பெற்றோரை விட்டு தனியாக பிரித்து வைக்கப்பட்டு கூண்டுக்குள் அடைக்கப்பட்டனர்.

ஐ.நா உள்ளிட்ட பல நாடுகள் டிரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் கூட இந்த நடவடிக்கையை விமர்சித்திருந்தார். இதனை அடுத்து, பெற்றோர் – குழந்தைகளை பிரிக்கும் நடவடிக்கை ரத்து செய்யப்படும் என டிரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில் பெற்றோர்களிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்டிருந்த அகதி சிறார்களை பார்க்கச் சென்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலானியா அணிந்து சென்ற ஆடை சர்ச்சையை எழுப்பியது.

அமெரிக்க – மெக்ஸிகோ எல்லையில் உள்ள அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிச் சிறார்களைப் பார்க்க மெலானியா புறப்பட்டது உலக நாடுகளை ஆச்சரியப்பட வைத்த சில நொடிகளில், அவரது ஆடை அதிருப்தியை ஏற்பட வைத்தது.

அப்படி அந்த ஆடையில் என்னதான் குறை? ஆடையில் எந்த குறையும் இல்லை. ஆலிவ் பச்சை நிற அந்த ஆடையில் பதிவாகியிருந்த வாசகம்தான் சர்ச்சையானது.

“எனக்கு உண்மையிலேயே அக்கறை இல்லை, உங்களுக்கு?” என்ற வாசகத்துடனான ஆடைதான் பல கேள்விகளை எழுப்பியது.

இந்த புகைப்படம் சமூக தளங்களில் வேகமாகப் பரவியது. இதற்கு மெலானியாவின் செய்தித் தொடர்பாளர் க்ரிஷம் கூறுகையில், இதில் எந்த மறைமுக தகவலும் இல்லை. இவர் உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்கிறார். அது வெறும் ஆடை மட்டுமே என்று டிவிட்டதில் பதிலளித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு அகதிகளாக வருவோரிடம் இருந்து அவர்களது குழந்தைகளை பிரித்து வைப்பது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதற்கு மெலானியா உட்பட பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்ததால், அந்த முடிவை நேற்று டிரம்ப் திரும்பப் பெற்றார்.

இவ்வாறு பிரித்து வைக்கப்பட்டிருந்த அகதிகளின் குழந்தைகளைப் பார்க்கச் செல்லும் போது மெலானியா அந்த ஆடையை எதற்காகத் தேர்ந்தெடுத்தார் என்பது கடைசி வரை யாருக்கும் தெரியவில்லை.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here