டிடிவி தினகரனை தவிர்த்து, பிரிந்து சென்றவர்களில் வேறு யார் வந்தாலும் அதிமுக-வில் ஏற்றுக்கொள்ள இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில், முதலமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுக சார்பில் புயல் பாதித்த மாவட்டங்களுக்கான நிவாரண உதவிகளின் தொடர்ச்சியாக, புதுக்கோட்டைக்கு 2 லாரிகளில் 30 டன் அரிசி அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவித்தார்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை அரசு செய்து வருவதாகவும், நிவாரணத் தொகை உரியவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் கூறினார். மின்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து விளக்கிய முதலமைச்சர், பெரும்பாலான இடங்களில் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

புயலால் வீடிழந்தவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். மேகதாது விவகாரத்தில் கர்நாடகம் மற்றும் மத்திய நீர்வளக் குழுமத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குகள் தொடர்ந்துள்ளதாகவும் முதலமைச்சர் பதிலளித்தார்.
 
அ.ம.மு.க.வில் இருந்து ஒருசிலர் வேறு கட்சிக்கு செல்வதாக வெளியான தகவல் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, அது அவர்களது விருப்பம் என எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அதேசமயம், பிரிந்து சென்றவர்கள் அனைவரும் தங்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என ஏற்கெனவே அழைப்பு விடுத்திருப்பதாகவும், டிடிவி தினகரன் தவிர்த்த மற்ற அனைவருக்கும் இது பொருந்தும் எனவும் அவர் விளக்கமளித்தார்.

சிலை கடத்தல் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை முழுமையாக பார்த்து, வழக்கறிஞர்களிடம் கலந்தாலோசித்த பிறகே கருத்து சொல்ல முடியும் எனவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here