டிசிடபிள்யூவின் வேதிக் கழிவுகளால் அழியும் மக்கள்

சமூக அக்கறையுடன் தொழில்களை நடத்த வேண்டும் என்பது டிசிடபிள்யூக்கும் பொருந்தும்.

0
804
அழகிய கடலை மாசுபடுத்தியுள்ளது டிசிடபிள்யூ ஆலை.

தமிழகம் கடந்த பல வருடங்களாகவே கருவேல மரம், மீத்தேன் திட்டம், சாயப்பட்டறைக் கழிவு, ஆலைகள் கழிவு என சுற்றுச்சூழல் சார்ந்த பல பிரச்சினைகளை எதிர்கொண்டு, தற்போது இக்கட்டான சூழலில் உள்ளது. இதில், கடந்த பல வருடங்களாக அதிகளவிலான சுற்றுச்சூழல் கேடுகளையும், அதனால் பல்வேறு உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளது தூத்துக்குடி மாவட்டம். தூத்துக்குடி பெருவாரியாக வர்த்தக ரீதியில் துறைமுகத்தையும் உப்பளங்களையும் ஆலைகளையும் நம்பியுள்ள மாவட்டம். அங்குள்ள தனியார் அனல் மின் நிலையங்கள், மாவட்டத்திற்கு மேற்கே அமைந்துள்ள சிப்காட் தொழிற்சாலை, ஸ்பிக் ஆலை, ஸ்டெர்லைட் ஆலை மற்றும் டிசிடபுள்யு தொழிற்சாலை பல குடும்பங்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கித் தந்தாலும், அங்குள்ள சுற்றுச்சூழல் மாசுபாடுகளுக்கும் அதுசார்ந்து அங்கு ஏற்பட்டுள்ள, ஏற்பட்டுக்கொண்டிருக்கும் சில நோய்களுக்கும் இந்த ஆலைகள்தான் மூலகாரணம். அவ்வாறு அதிகளவிலான நச்சுக்கழிவுகளை வெளியிட்டு மாவட்டத்தில் புற்றுநோய் அதிகரிக்க காரணமாக இருந்தது டிசிடபுள்யு தொழிற்சாலை என்பதற்கு பல தரவுகள் இருக்கின்றன. இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்களையும் மக்களையும் சந்திப்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் அந்த ஆலையினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட காயல்பட்டினம் கிராமத்திற்குச் சென்றேன்.

இதையும் படியுங்கள்: திம்மக்கா 200 ரூபாய்க்காக குழந்தையை விற்றாரா?

இதையும் படியுங்கள்: சினிமாவுக்கு இடைவேளை தேவையா?

டிசிடபுள்யு தொழிற்சாலை பற்றி:

தரங்கதாரா கெமிக்கல் தொழிற்சாலை தற்போதைய குஜராத் மாநிலத்தின் சுரேந்திர நகர் மாவட்டத்திலுள்ள தரங்கதாரா நகரில் சோடா ஆஷ் என்ற பொருளைத் தயாரிப்பதற்காக துவக்கப்பட்டது. 1939ஆம் ஆண்டில், இந்நிறுவனம் சாஹு ஜெய்ன் குடும்பத்தால் நிறுவப்பட்டது. 1959ஆம் ஆண்டு, காஸ்டிக் சோடா என்ற பொருளை தயாரிப்பதற்காக இந்நிறுவனம் காயல்பட்டினத்தில் தொழிற்சாலையை நிறுவியது. அதற்காக, அப்போதைய மெட்ராஸ் அரசாங்கம் காயல்பட்டினத்திலிருந்து 1064 ஏக்கர், புன்னைக்காயலிலிருந்து 175 ஏக்கர், சேர்ந்தமங்கலத்திலிருந்து 142 ஏக்கர் நிலங்களை வழங்கியது. பின்னர், 30 ஆண்டு குத்தகை அடிப்படையில் காயல்பட்டினத்திலிருந்து 144 ஏக்கர், புன்னைக் காயலிலிருந்து 448 ஏக்கர், சேர்ந்தமங்கலத்திலிருந்து 200 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இக்குத்தகை 1993இல் நிறைவுற்றது.
நிறுவனத்தின் தற்போதைய ஆண்டு வருமானம் 1275 கோடி ரூபாய். இதில் 195 கோடி ரூபாய் அதன் குஜராத் பிரிவிலிருந்து வருகிறது. எஞ்சிய 1080 கோடி ரூபாய் காயல்பட்டினத்திலுள்ள பிரிவின் மூலம் வருகிறது. இந்நிறுவனத்தில் சுமார் 2000 பேர் பணியாற்றுகின்றனர். இதில் காயல்பட்டினத்தைச் சார்ந்தவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவில் மட்டுமே உள்ளனர். காயல்பட்டினம் நகராட்சிக்கு இந்நிறுவனம், சொத்து வரி ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் வரையும், தொழில் வரி ஆண்டுக்கு சுமார் 15 லட்சம் ரூபாயும் செலுத்துகிறது. காயல்பட்டினம் நகராட்சியின் அனைத்து வகை வருமானமான ஆண்டுக்கு சுமார் 4 கோடி ரூபாயில், இத்தொழிற்சாலை மூலம் வரும் வருமானம் சுமார் 6 சதவீதம் மட்டுமே.
2500 ஏக்கர் நிலம் தன் வசமுள்ளதாகக் கூறும் இந்நிறுவனம், காயல்பட்டினம் பகுதியில் மட்டும் சுமார் 1200 ஏக்கர் நிலம் வைத்துள்ளது. ஆனால், இந்நிறுவனம் முறையாக நிலவரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தவறானது என்று டிசிடபிள்யூவின் மக்கள் தொடர்பு அதிகாரி என்னிடம் சொன்னார்.

இதையும் பாருங்கள்: உங்க போனில் மெமரி நிறையாமல் பார்த்துக்கொள்வது எப்படி?

இதையும் பாருங்கள்: நாணயமா சம்பாதிச்சு சந்தோஷமா இருக்க முடியும்ன்னு மனைவிக்கு அழகா சொல்லுங்க

கழிவும், கடலும் கலக்கும் இடம்:

அந்த ரசாயன ஆலையின் நச்சுக்கழிவுகள் நேரடியாக ஆற்றில் கலக்கப்பட்டு, அந்த ஆறானது கடலில் கலக்கும் பகுதிக்கு மிக அருகில் உள்ளது கொம்புத்துறை கிராமம். காயல்பட்டினத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது அந்தக் கிராமம். மிகவும் ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த அக்கிராமத்தில் ஒரே ஒரு தேவாலயமும், 160 கிறிஸ்தவ மீனவக் குடுமபங்களும் வாழ்ந்து வருகின்றனர். மற்ற கடற்கரைகளைப் போல அல்லாமல், சுற்றுலாப் பயணிகள், கடைகள் என எதுவும் இல்லாமல், பலத்த காற்று சத்தத்துடன், கரைகளில் படகுகளுடன் மட்டுமே காட்சி அளித்தது கொம்புத்துறை கடற்கரை. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கடந்த ஒரு வார காலமாக மீனவர்கள் எவரும் கடலுக்குச் செல்லாமல், கரைகளில் அமைக்கப்பட்டிருந்த அவர்களுக்கான கட்டடத்தில் அமர்ந்திருந்தனர். கடலுக்குச் செல்லாததால், சீட்டு விளையாடிக்கொண்டிருந்த மீனவர்களிடம் பேசினேன்.

என்னிடம் பேசிய மீனவர் ஒருவர்,” என் பேரு ஜோசப் ஆன்டனி, 53 வயசு ஆகுது, எங்க கிராமத்துல 150க்கும் மேல குடும்பங்கள் இருக்கு.. எல்லாமே மீனவக் குடும்பங்கள்தான்.. நாங்க எல்லாம் தூண்டில்ல மீன் பிடிக்கிற மீனவர்கள். இப்ப கடந்த ஒரு வாரமா காத்து ரொம்ப பலமா வீசுறதால.. எங்களால கடலுக்கு போக முடில… நான் ஒரு 35 வருசமா மீன் பிடிக்கிறேன்.. நான் கடலுக்குப் போறதுக்கு முன்னாடி இருந்தே.. இந்த பேக்டரி இங்க இருக்கு .. இந்த பேக்டரில ஏதோ, ஏதோ கெமிக்கல் தயாரிக்குறாங்கனு சொல்லிக்குறாங்க.. அதனால பெரிய அளவில பாதிக்கப்படறது நாங்கதான். இந்தக் கம்பனிகாரங்க என்ன பண்றாங்கனா.. அவங்க பாக்டரிலருந்து வர கழிவுத்தண்ணி எல்லாத்தையும் சேத்து வச்சுக்குறாங்க… வழக்கமா அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாசங்கள்ல வடகிழக்குப் பருவமழை பெய்யும்.. அப்படி பெய்யுற காலத்துல இந்தக் கரைலருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துலதா.. தாமிரபரணி ஆறும், கடலும் கலக்குற இடம் இருக்கு.. அந்தக் காலத்துல இந்த ஆறு நெறஞ்சு கடல கலக்கும்… அப்படி கலக்குற நேரத்துல அவங்க பேக்டரில உள்ள கழிவுகளையும் அவங்க ஆத்துல தொறந்து விட்ருவாங்க… அப்படி கலக்குற அந்த தண்ணிங்கனால கடல் நீல நிறத்துல இருந்து மஞ்ச நிறத்துக்கு மாறிடுது.. அந்த நிறத்துல இருக்கிறப்ப கடல்ல இருக்குற நெறய மீனுங்க செத்து, செத்து கரைல ஒதுங்குங்க.. சிறுவலை, மதனம், சின்ன சின்ன பாறை மீன்கள் எல்லாம் செத்துடும்..முன்கடல்ல வாழற பெரும்பாலும் உயிரினங்கள் எல்லாம் செத்துடும்.. அந்த நேரத்துல நாங்க கடலுக்குப் போறது ரொம்ப சிரமமா இருக்கும்.. படகுங்க எல்லாமே மஞ்ச கலருக்கு மாறிடும்ங்க… அந்த நேரத்துல அந்தத் தண்ணி பட்றதுனால எங்க மேல் பூரா ஒரே அரிப்பும், எரிச்சலுமாத்தான் இருக்கும்..

இதையும் படியுங்கள்: ஜிஷாவும் அம்பேத்கரும்

இந்தப் பக்கம் கடலோட நீரோட்டம் வருஷத்துக்கு 325 நாளு மேற்கு திசையிலதான் இருக்கதால, இந்தக் கிராமம் மட்டுமில்லாம பக்கத்துல மீன் பிடிக்கிற சுங்கத்துறை, வீரபாண்டிய பட்டினம், ஜீவாநகர், குலசேகரப்பட்டினம், ஆலந்துறை கிராமங்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுதுங்க.. இது எல்லாத்தையும் எதித்து நாங்க எல்லாம் காயல்பட்டினத்துல நடந்த போராட்டத்துல கலந்துக்கிட்டோம்.. ஆனாலும் எங்களால ஒண்ணும் பண்ண முடியல.. அந்த பாக்டரிக்காறங்க என்ன பண்ணுவாங்கனா.. எப்பல்லாம் மீன்கள் செத்து ஒதுங்குதோ அப்போல்லாம், பேக்டரி ஆளுங்களை அனுப்பி அதைப் புதைக்க சொல்லிடுவாங்க.. நாங்களும் எங்களுக்கு கரை சுத்தமா இருந்தா போதும்னு பேசாம இருந்துடுவோம்.. எங்க மக்களுக்கு அந்த அளவுக்குப் படிப்பறிவு இல்லாத காரணத்தால, இதனால வருகிற பிரச்சனை தெரிய மாட்டுது.. எங்க கிராமத்துல புற்றுநோய் பாதிப்பு அடைஞ்சவங்க பெருசா ஏதும் இல்ல.. இதுவரைக்கும் ஒருத்தர்தான் இறந்துருக்காங்க.. ஒருவேளை எங்களுக்குப் புற்றுநோயினாலதான் சாகுறோம்னுகூட தெரியாம இருக்கலாம்.. நாங்க எங்களோட எதிர்ப்பைக் காட்டிரக்கூடாதுனு பாக்டரிகாரங்க கல்யாண மண்டபம், அது, இதுனு நெறய உதவி செஞ்சு தரோம்னு சொல்லுவாங்க.. ஆனா நாங்க அதை ஏத்துக்கிறது இல்ல..”

தாமிரபரணி ஆறும் கடலும் கலக்கும் அந்தப் பகுதிக்குச் சென்றேன். ஆள் அரவமில்லாத அந்தப் பகுதியின் மிக அருகில் நெருங்கியதும், கடல் வாசனையையும் தாண்டி, ரசாயன வாடை காற்றில் அதிகமாக வீசியது. மற்ற ஆற்றங்கரைகளைப் போல அல்லாமல், கரை முழுதும், நீர் வற்றிய பகுதிகளிலும் மண்ணில் வெள்ளைப் படிவங்கள் தெளிவாக தெரிந்தது. அது மட்டுமில்லாமல், நீரில் ரசாயன வாடையும் மிக அதிகமாகவே இருந்தது. அருகிலிருந்த சில தாவரங்களின் தரைப்பகுதியும் மஞ்சள் நிறங்களிலே காட்சி அளித்தது. அந்த நீரில் சிறு புழுக்கள் வாழ்வதற்கான தடம்கூட தெரியவில்லை.

இந்த ஆலையின் கழிவுகளினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட காயல்பட்டினம், ஆறுமுகநேரி, புன்னைக்காயல், ஆத்தூர் பகுதிகளில் ஆலைக்கு மிக அருகில் உள்ள ஆறுமுகநேரி பகுதிக்கு சென்றேன். இதுகுறித்து பேசிய, ஆட்டோ ஓட்டுநர் ராஜா என்பவர், ”இப்ப கடந்த இரண்டு வாரமா அந்த பேக்டரி தொழிலாளர் பிரச்னைனால போராட்டம் நடந்துட்டு இருக்கு.. அதுனால வேலை ஏதும் இல்லாம இருக்கு.. இப்ப ஒரு இரண்டு வருஷமாத்தான் இந்த கம்பனினால ஏற்பட்ட பாதிப்பு குறைஞ்சுருக்கு…அதுக்கு முன்னாடி எல்லாம் க்ளோரின் ஓபன் பண்றப்ப ரொம்ப மோசமா இருக்கும்.. ஊரே பனிமூட்டம் வந்த மாதிரி இருக்கும்.. எல்லாரும் மூச்சு விடவே ரொம்ப சிரமப்படுவாங்க.. இதுனால இந்தப்பக்கம் உள்ள எல்லாருக்கும் சளித்தொல்லை, மூச்சுத்திணறல் அப்டினு ஏதாது ஒன்னு இருக்கத்தான் செய்யும்.. இது ஏன் இந்த பாக்டரினால இந்த மாவட்டத்துல எவ்ளோ பேருக்கு கேன்செர் வந்திருக்கு தெரியுமா? எனக்கே கேன்சர் இருக்கு..” என்று தனக்கு நடந்த அறுவை சிகிச்சை தழும்பினை காட்டினார்.

இதையும் படியுங்கள்: பசுக் காவலர்களுக்கு மகாத்மா காந்தி என்ன சொன்னார்?

மேலும், ”எனக்காது ஸ்மோக்கிங், ட்ரிங்கிங் பழக்கம் இருக்கு.. ஆனா இந்தப் பக்கம் நிறைய குழந்தைங்களுக்கு, பொம்பளைங்களுக்கு எல்லாம் கேன்சர் இருக்கு.. அவங்க எல்லாம் என்ன பண்ணுனாங்க..” என்றார் ஆதங்கத்துடன். “ இந்த மாவட்டத்துல முக்கால்வாசி பேரு உப்பளத்த நம்பித்தான் இருக்காங்க..ஆனா இந்த பேக்டரி திறந்துவிட்ற கழிவு வழில இருக்குற உப்பளத்து வழியா எல்லாம் போறதுனால.. அந்த உப்பளங்கள் எல்லாம் நாசமா போச்சு.. இதுனால பல குடும்பங்கள் தொழில் வாய்ப்புகளை இழந்து ரொம்ப மோசமான நிலைமைக்குப் போய்டுச்சு..அது மட்டுமில்லாம கழிவுகள் தொறக்குற காலத்துல அந்தப் பக்கம் மேயுற ஆடு, மாடுங்க குடிச்சு நெறய செத்துருக்கு.. ஆரம்பக் காலங்கள கழிவு ஆத்துல கலக்குற நேரத்துல மாடுங்க ஆத்துல முங்கி எந்திருச்சுச்சுனா தோல் இருக்காது” அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களின் உடல்நிலை, மற்றும் சூழல் பற்றி கேட்ட பொழுது,” எனக்கு பூர்விகமே இந்த ஆறுமுகநேரிதா.. இந்த பேக்டரி வந்த புதுசுலயே எங்க அப்பா, தாத்தா காலத்து ஆளுங்க எல்லாம் எதுத்தாங்க.. அதுனால திருச்செந்தூர், அடைக்கலப்புரம் ஆகிய பகுதிகள்ல இருந்துதான் வேலைக்கு ஆளுங்க வருவாங்க.. ஆனா இன்னைக்கு வேற வழி இல்ல.. மக்கள் தொகை பெருகிடுச்சு… வேலை வேணும் அதுனால மக்கள் இந்த பாக்டரிக்கு வேலைக்குப் போறாங்க..

இங்க உள்ள அதிகாரிங்க தவிர, தொழிலாளிங்க யாருமே பெர்மெனென்ட் கெடயாது… எல்லாருமே கான்ட்ராக்ட்தா… அதுனால யாரும் கேள்வி கேக்க முடியாது.. அப்படி கேள்வி கேட்டா வேலை போயிடும்.. அதையும் தாண்டி சங்கம், அரசியல் கட்சிங்கனு போராடுனா காசைக் கொடுத்தோ அல்லது வேலை கொடுத்தோ வாயை அடைச்சுடுவாங்க.. ஆனா அங்க வேலை பாக்குற எல்லாருக்கும் நிச்சயம் சளித்தொந்தரவு, மூச்சுத் திணறல் இருக்கும்.. பல பேருக்கு கேன்சர் இருக்கும்.. ஆனா வெளியில சொல்றது இல்ல… அது மட்டுமில்லாம இந்தப் பக்கம் அந்த பாக்டோரிய நம்பி நிறய குடும்பங்கள் இருக்கு.. அதுனால யாரும் அவங்களுக்கு எதிரே பேசமாட்டாங்க..” என்றார் ஆதங்கமாக. அவர் கூறுவதைப் போலவே அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்த நிறுவனத்தின் பணியாளர்களாகவே உள்ளனர். மேலும், அந்நிறுவனத்திற்கு சொந்தமான தனியார் பள்ளியில் பல குடும்பங்களின் குழந்தைகள் படிப்பதிலும் அந்தப் பகுதி மக்கள் இதன் உண்மைத்தன்மை பற்றிக் கூற தயங்குகின்றனர்.

இதையும் படியுங்கள்: செல்ஃபோனால் நாம் எவற்றை இழந்தோம்

அவர் கூறுவதைப் போலவே இந்தப் பகுதியில் புற்றுநோயின் தாக்கம் அதிகளவில் உள்ளது. அடையாறு கேன்சர் மையம் வெளியிட்ட 2011ஆம் ஆண்டு அறிக்கையில், காயல்பட்டினத்தில் மட்டும் சுமார் 500 பேர் புற்றுநோய்ப் பாதிப்பிற்கு ஆளாகி இருந்தனர். இதன் தாக்கமானது 2014இல் மாதத்திற்கு 17 பேர் இறக்கும் சூழலுக்குச் சென்றது. இன்றைய சூழலில் காயல்பட்டினத்தில் மட்டும், (தூத்துக்குடி மாவட்டம் முழுதும் கணக்கில் கொள்ளாமல்) சராசரியாக 6 பேரில் ஒருவர் புற்றுநோயால் இறக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த மொஹம்மது ஷாரி என்பவர் இதுகுறித்து, “1958இல் காஸ்டிக் சோடா தயாரிக்கின்றோம் என்ற பெயரில்தான் முதன்முதலாக இந்த தாரங்கதாரா நிறுவனம் தூத்துக்குடிக்குள் நுழைந்தது. இன்று அவர்களின் 80 சதவீதம் வருவாய் இங்கிருந்துதான் கிடைக்கின்றது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினத்தினை வடபாகம், தென்பாகம் என இரண்டாக பிரிக்கின்றனர். இதில், தென்பாகத்தில் உள்ள சாகர்புரத்தில்தான் இந்த ஆலை அமைந்துள்ளது. ஆரம்ப காலங்களில் இந்த காஸ்டிக் சோடா தயாரிக்க மெர்க்குரியைப் பயன்படுத்தி வந்தனர். அவ்வாறு பயன்படுத்ததப்படும் அந்த மெர்குரி கழிவுகளை எல்லாம் தென்பாகத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில், வடகிழக்குப் பருவ மழை பெய்யும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் கலந்து விடுகின்றனர். இந்நிகழ்வானது 1958 முதல் 2007 வரை தொடர்ச்சியாக நடை பெற்று வந்தது. பின்னர், குறிப்பிட அந்தக் காலங்களில் கடல் நிறம் மாறுவதாலும், மீன்கள் பெருவாரியாக இறந்து விடுவதாலும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவிக்க துவங்கினோம்.

பின்னர், நடந்த மீன் பரிசோதனையில் இறந்த மீன்களின் உடல்களில் மெர்குரி பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக மத்திய அரசின் சிஎம்எஸ்ஆர்ஐ அமைப்பு 1985, 89, 93 ஆண்டுகளில் ஆய்வு மேற்கொண்டது. 2007க்குப் பிறகு இந்நிறுவனமானது தங்களது காஸ்டிக் சோடா தயாரிப்பை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தது. ஆனால், அதற்கு பதிலாக பிவிசி (பால்வினைல் க்ளோரைட்) தயாரிப்பைத் துவங்கியுள்ளது. இதன் மூலப்பொருளான வினைல் க்ளோரைட் மோனோமர்(விசிஎம்) மிகவும் ஆபத்தான ஒன்று. இந்த விசிஎம் தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு, தினசரி லாரி மூலமாக நிறுவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இது மிகவும் ஆபத்து நிறைந்த செயல். மேலும், இவ்வாறு கொண்டு வருவது சட்டப்படி குற்றமும் ஆகும். இதனை மண்ணில் புதைக்கப்பட்ட குழாய் வழியாக மட்டுமே நிறுவனத்திற்கு கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு லாரியில் கொண்டு வரப்படும் விசிஎம், ஏதேனும் விபத்திற்குள்ளானால் சுற்றியுள்ள பல ஊர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கடந்த 2011, 2012ஆ ம் ஆண்டுகளில் நிறுவனத்தில் மூலப்பொருளை இறக்கிவிட்டு திரும்பிய லாரிகள் விபத்திற்குள்ளாகி அப்பகுதி மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிறுவனம் 2007 லேயே மெர்குரி தயாரிப்பதை நிறுத்திவிட்டோம் என்று அறிவித்தாலும், அதற்கு முன்னால் 40 வருடங்கள் மெர்குரி கழிவுகளைக் கொட்டிய தாக்கமானது, ஆற்றங்கரைகளில் இன்றளவும் காணப்படுகிறது. இதனைச் சுத்தம் செய்ய அந்நிறுவனமும் சரி, அரசாங்கமும் சரி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2010இ ல் திடீரென்று உற்பத்தித் திறனை அதிகரிக்க போகிறோம் என்று நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மேலும், அதுவரை மின்வாரியத்திடமிருந்து மின்சாரம் பெற்று வந்த இந்நிறுவனம், 2007இல் சொந்தமாக மின் உற்பத்தியில் ஈடுபட்டது. அதுவும் 58 மெகாவாட் மின்சாரத்தை, 108 மெகாவாட்டாக அதிகரிக்க அனுமதி கோரியுள்ளனர்.

மேலும், இவ்வாறு மின் உற்பத்திக்குப் பயன்படும் நிலக்கரியின் கழிவுகளைத் தனியார் சிமெண்ட் நிறுவனத்திற்குத் தருவதாக தெரிவித்துவிட்டு, அருகிலுள்ள நீரோடைகளில் கொட்டுவதாக 2013ஆம் ஆண்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. மேலும், பிவிசி தயாரிப்பை 90,000 டன்னிலிருந்து 1,50,000 டன்னாக அதிகரித்து தரக் கோரியும் அனுமதி கோரியுள்ளனர். “எங்கள் ஜமாஅத் சார்பாக அடிக்கடி மருத்துவ முகாம், கல்வி முகாம் நடத்தப்படும். அவ்வாறு நடத்தப்படும் மருத்துவ முகாம்களில் பெரும்பாலானோர் கேன்சர் வியாதிக்கான மருந்துகள் பெறுவதும், ஆலோசனை பெறுவதும், அதற்கான அறிகுறிகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், எங்களுக்கு இந்நிறுவனத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டது. மேலும், ஊரில் பெரும்பாலானோருக்கு காலையில் மூச்சுத்திணறல் ஏற்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், நாங்கள் எடுத்த கணக்கெடுப்பின்படி காயல்பட்டினத்தில் மட்டும், பெரும்பாலான மக்களுக்கு கேன்சர் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வருடத்திற்கு 250 பேர் புற்றுநோயால் இறப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், 2014இல் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதில், அந்நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பொய்யான மருத்துவச் சான்றிதழ் அளித்தனர். இதற்கு மக்களும் ஒரு காரணம், மக்களில் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் கேன்சர் காரணமாகத்தான் இறந்தனர் என்று கூறி இறப்புச் சான்றிதழ் பெற தயங்குகின்றனர். இதனால், அரசின் அறிக்கைபடி வருடத்திற்கு 8 முதல் 10 பேர் மட்டுமே புற்றுநோயால் இறந்தனர் என கணக்கு வருகிறது. மேலும், காயல்பட்டினத்தில் பெரிய அளவிலான மருத்துவமனைகள் இல்லை. அதனால், புற்றுநோய்க்கு மருத்துவம் பார்க்க தூத்துக்குடி, மதுரை, சென்னை, கன்னியாகுமாரி, திருவனந்தபுரம் என்று சென்று விடுகின்றனர். அங்கு இறந்தால் இறப்புச் சான்றிதழ் அந்த ஊரில்தான் கிடைக்கும். இதனாலும், இங்கு புற்றுநோயால் இறப்பு குறைவு என்று நிர்வாகத்தினர் நீதிமன்றத்தில் வாதிட எளிதாக அமைந்துவிட்டது. அது மட்டுமின்றி, ஆலைக்குள் நிகழ்ந்த பாய்லர் வெடிப்பு, விபத்து போல பல சம்பவங்களை நிர்வாகம் மறைத்துவிட்டது. அரசாங்கமும் முறையான மருதத்துவ அறிக்கை, சுற்றுச்சூழல் அறிக்கை எதுவுமே சரியாகவே செய்யவில்லை. இதுவும் அவர்களுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. மக்கள் வாயைத் திறக்காமல் இருப்பதற்காக சில பகுதிகளுக்கு திருமண மண்டபம் கட்டித் தந்துள்ளனர் .

மேலும், கடந்த 2 வருடங்களாக பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக காற்றில் க்ளோரின் அளவு குறைந்துள்ளது. அது மட்டுமின்றி, இவர்கள் தங்களின் உற்பத்தியை அதிகரித்தால் ஏற்கனவே குடிநீர்ப் பற்றாக்குறை உள்ள இந்தப்பகுதியில் தாமிரபரணி ஆற்றின் இருப்பு இன்னும் குறைந்து மோசமான அளவிலான குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. அது மட்டுமில்லாமல், கடல் நீர் மிகவும் மோசமடைந்து கடலையே நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரமும் மோசமாக பாதிப்படைய வாய்ப்புகள் நிறையவே உண்டு. மேலும் புற்றுநோயின் தாக்கமும் அதிகரிக்கும் அபாயமும் ஏற்படும். இவ்வாறு இந்த நிறுவனத்தில் கழிவுகள் மட்டுமின்றி, சுற்றியுள்ள அனைத்து ஆலைக் கழிவுகளினாலும் பாதிக்கப்பட்டுள்ள இம்மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையே காற்றிலும், நீரிலும் உள்ள மாசுக்களைக் குறைத்து சுத்தமான காற்றும், சுகாதாரமான நீரும் வேண்டும் என்பதே.

டிசிடபிள்யூ நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு இப்போது டாட் காம் பேசியது; சுற்றுச்சூழலுக்குப் பாதகமான செயல்களில் நாங்கள் ஈடுபடவில்லை என்று அவர்கள் ஒரே வரியில் பதிலளித்தார்கள்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்