‘டிக்டாக்’ செயலி மூலம் சீன அரசு சட்டவிரோதமாக தகவல்களைத் திருடி வருவதாக திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்பியான சசிதரூர் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் மழைக்கால கூட்டத் தொடரின் நேரமில்லா நேரத்தில் பேசிய சசிதரூர், இந்தியாவின் தகவல்கள் ‘டிக்டாக்’ செயலி மூலம் கசிகின்றன என்றார். இது தேசிய பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் அவர் குறிப்பிட்டார். 

நாட்டில் முறையான தகவல் பாதுகாப்பு இல்லாததால், ‘டிக்டாக்’ போன்ற சீன செயலிகள் மூலம் சீன அரசு சட்ட விரோதமாக தகவல்களைத் திருடி வருவதாகவும் சசிதரூர் குற்றம்சாட்டினார்.

மத்திய அரசு வலுவான கட்டமைப்பை ஏற்படுத்தி, ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், அமெரிக்க குழந்தைகள் குறித்த தகவல்களை ‘டிக்டாக்’ நிறுவனம் திருடியதற்காக அந்நாடு சுமார் 40 கோடி அபராதம் விதித்ததையும் சசிதரூர் சுட்டிக்காட்டினார்.

ஏற்கெனவே ‘டிக்டாக்’ செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி அந்தச் செயலிக்கு தடைவிதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த ஏப்ரல் மாதம் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. 

அதன்படி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கை விசாரித்து தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில் ஆபாச வீடியோக்கள், சமூக சீர்கேடு வீடியோக்களை பதிவிறக்கம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு ‘டிக்டாக்’ செயலி மீதான தடையை நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here