டிக்டாக்கை விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்தும் மைக்ரோசாஃப்ட்

0
162

தேசிய பாதுகாப்பு மற்றும் தணிக்கை செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டு இருப்பதால் சீனாவின் டிக் டாக் ஆப்பை அமெரிக்காவில் தடை செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்று வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், டிக் டாக் ஆப்பை மைக்ரோ சாப்ட் நிறுவனம் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிக் டாக் ஆப் குறித்து வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்களுக்கு அதிபர் ட்ரம்ப் அளித்த பேட்டியில், ”டிக் டாக் ஆப்பை தடை செய்யலாம் என்று ஆலோசித்து வருகிறோம். இத்துடன் வேறு சில ஆலோசனைகளும் முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் எது ஒத்து வரும் என்பது குறித்து விரைவில் முடிவு செய்வோம்” என்று ட்ரம்ப் தெரிவித்து இருந்தார்.

டிக் டாக் நிறுவனத்தை சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம் இயக்கி வருகிறது. இந்நிலையில், டிக்டாக்கின் அமெரிக்க பிரிவை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, டிக்டாக்கின் பாதுகாப்பு குறித்து அமெரிக்க அரசு விசாரணை நடத்தி வருகிறது. டிக்டாக் சீனாவை சேர்ந்த நிறுவனம் என்பதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறதா என்ற கோணத்தில் ஆய்வு நடைபெறுகிறது.

டிக் டாக் ஆப்பை வாங்குவதற்கு அமெரிக்காவின் நிதி நிறுவனங்கள், டெக் நிறுவனங்கள் முன் வந்து இருப்பதாக செய்தி வெளியானாலும், டிக் டாக் ஆப்பை வாங்குவதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஆனால், இந்த விஷயத்தில் கருத்துக்கள் தெரிவிக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் மறுத்துள்ளது. இதற்கிடையே நேற்று அறிக்கை வெளியிட்டு இருக்கும் டிக் டாக் நிறுவனம், ”டிக் டாக் குறித்து வரும் செய்திகள், அனுமானங்கள், புரளிகள் குறித்து எந்த பதிலையும் தெரிவிக்க விரும்பவில்லை. வெற்றிகரமாக டிக் டாக் ஆப்பை நடத்துவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது. பைட்டான்ஸ் 2017ல் டிக் டாக் ஆப்பை துவங்கியது. பின்னர் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக இருக்கும் மியூசிக்கல்.லி என்ற வீடியோ சேவையை வாங்கியது. அமெரிக்காவின் பேஸ்புக், ஸ்நாப்சாட் இரண்டும் தங்களுக்கு போட்டியாக டிக் டாக் ஆப்பை பார்த்தன. இன்றும் உலக அளவில் டிக் டாக் ஆப்பிற்கு கோடிக்கணக்கான பார்வையாளர்கள் உள்ளனர்.

டிக் டாக் தங்களிடம் இருக்கும் டேட்டாவை சீன அரசுடன் பகிர்ந்து கொள்ளாது என்று பலமுறை டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் தவறான பிம்பத்தில் இருந்து வெளியே வரவேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் டிஸ்னி நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியை டிக் டாக் அதிகாரியாக பைட்டான்ஸ் பணியில் அமர்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here