டிஆர்பி மோசடி; அர்னாப் கோஸ்வாமியை குற்றவாளியாக சேர்ப்பதாக இருந்தால் சம்மன் அனுப்பி விசாரியுங்கள் – உயர் நீதிமன்றம் உத்தரவு

A notice was issued on a writ petition seeking to quash the FIR against the news channel and Goswami for cheating, criminal breach of trust and conspiracy.

0
216

டிஆர்பி மோசடி வழக்கில் ரிபப்ளிக் சேனல் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை குற்றவாளியாக சேர்ப்பதாக இருந்தால் ,  வழக்கில் 8 பேருக்குச் சம்மன் அனுப்பி விசாரித்ததைப் போல் அவருக்கும் சம்மன் அனுப்பி விசாரியுங்கள் என்று மும்பை போலீஸாருக்கு மும்பை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மும்பை போலீஸார் சம்மன் அனுப்பினால் அர்னாப் கோஸ்வாமி போலீஸார் விசாரணைக்கு ஆஜராகி, ஒத்துழைக்க வேண்டும். விசாரணை அறிக்கையை போலீஸார் ஒரு கவரில் சீல் வைத்து நவம்பர் 5-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மும்பையில் உள்ள ரிபப்ளிக் சேனல், மராத்தியைச் சேர்ந்த பக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா ஆகிய சேனல்கள் டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டுப் பார்வையாளர்களையும், வருமானத்தையும் அதிகமாக்கும்  நோக்கில் செயல்பட்டதாக பிஏஆர்சி நிறுவனம் போலீஸில் புகார் அளித்தது.

இதையடுத்து, மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து 8 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ரிபப்ளிக் சேனல் நிறுவனத்தின் நிர்வாகிகளை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மும்பை போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

ஆனால், மும்பை போலீஸார் அனுப்பிய இந்தச் சம்மனை ரத்து செய்யக் கோரி ரிபப்ளிக் சேனல் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையிடுமாறு அறிவுறுத்தியது.

இதைத் தொடர்ந்து ரிபப்ளிக் சேனலின் ஏஆர்ஜி அவுட்லையர் மீடியா நிறுவனம் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது

அதில், “டிஆர்பி மோசடி வழக்கில் கடந்த 6-ம் தேதி மும்பை போலீஸார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து, நியாயமான விசாரணைக்காக வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” எனக் கோரியிருந்தனர்.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே, எம்.எஸ்.கர்னிக் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ரிபப்ளிக் சேனல் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரிஸ் சால்வேவும், மகாராஷ்டிரா அரசு, போலீஸார் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும் ஆஜராகினர்.

அப்போது ரிபப்ளிக் சேனல் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே, “மும்பை போலீஸார் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்யத் தடைவிதிக்க வேண்டும். அவருக்கு நீதிமன்றம் கைதிலிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர் கைது செய்யப்படுவார் எனும் அச்சம் நிலவுகிறது” எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதில் அளித்த கபில் சிபல், “இந்த வழக்கில் இதுவரை குற்றம் சாட்டப்பட்டவராக அர்னாப் கோஸ்வாமி சேர்க்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும்போது கைது செய்வதில் இருந்து ஏன் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த வழக்கில் இதுவரை 8 பேருக்கு போலீஸார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்கள். யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், “இந்த வழக்கில் அர்னாப் குற்றவாளி எனச் சேர்க்கப்படாத நிலையில் எதற்காக அவரைக் கைது செய்வதிலிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும். கைது செய்யாதீர்கள் என்று போலீஸாருக்கு ஏன் உத்தரவிட வேண்டும்?

ஒருவேளை விசாரணை அதிகாரி, மனுதாரரான அர்னாபை குற்றவாளியாகச் சேர்த்தால், 8 பேருக்கு அளிக்கப்பட்டதைப் போல் சம்மன் அர்னாப்புக்கும் அனுப்ப வேண்டும். அர்னாப் போலீஸார் விசாரணையில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அப்போது நீதிபதி ஷிண்டே, எம்.எஸ்.கர்னிக் கூறுகையில், “டிஆர்பி மோசடி வழக்கில் மும்பை போலீஸார், ஆணையர் பரம்பிர் சிங் வழக்கில் முன்கூட்டியே ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தது நியாயமான செயலா. இது சரியான நெறிமுறையா? எங்களுக்குத் தெரியாது.

விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது ஊடகங்களுக்கு போலீஸார் எவ்வாறு தகவல்களை வழங்கலாம். இந்த வழக்கு விசாரணை தொடர்பான தகவல்களை போலீஸார் வெளியிட்டிருக்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.

 இதை ஒப்புக்கொண்ட வழக்கறிஞர் கபில் சிபல், “இந்த வழக்கு தொடர்பாக இனிமேல் போலீஸார் ஊடகங்களிடம் பேச மாட்டார்கள். அதேநேரம், மனுதாரர் நடத்தும் சேனலும் போலீஸாரையும், விசாரணை முறையையும் குறைகூறக் கூடாது” எனத் தெரிவித்தார்

அதற்கு நீதிபதி ஷிண்டே, எம்.எஸ்.கர்னிக் பிறப்பித்த உத்தரவில், “ ஊடகங்கள் இந்த தேசத்தின், ஜனநாயகத்தின் நான்காவது தூண். அவர்கள் பொறுப்புடன்தான் செயல்படுவார்கள்.

முதல் தகவல் அறிக்கை ஒன்றும் தகவல் களஞ்சியம் அல்ல. இந்த வழக்கில் என்ன விசாரிக்கப்பட்டுள்ளது, இன்று முதல் அடுத்தகட்ட விசாரணை வரை போலீஸார் எவ்வாறு கொண்டு செல்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

ஆதலால், அர்னாப் மீது குற்றம்சாட்டும் முன், 8 பேருக்கு சம்மன் அனுப்பியது  போல் அர்னாப் கோஸ்வாமியை குற்றவாளியாக சேர்ப்பதாக இருந்தால் சம்மன் அனுப்பி விசாரியுங்கள் என்று மும்பை போலீசாருக்கு உத்தரவிட்டனர். மும்பை போலீஸார் சம்மன் அனுப்பினால் அர்னாப் விசாரணைக்கு ஆஜராகி, போலீஸாருக்கு ஒத்துழைக்க வேண்டும்.

விசாரணை அறிக்கையை நவம்பர் 5-ஆம் தேதிக்குள் ஒரு கவரில் சீல் வைத்து நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்ய வேண்டும்” எனவும் உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here