தமிழகத்தில் கடந்த 4 நாட்களில் வழக்கத்தை விட அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது. தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், நேற்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. 

வழக்கமாக அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் நாளொன்றுக்கு 80 முதல் 90 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை நடைபெறும். தேர்தல் நெருங்கிய நிலையில் நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்த தகவலின்படி, கடந்த 15ஆம் தேதி இரவு முதல் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியதாகவும்  3 நாட்களுக்குத் தேவையான மதுபானங்களை போட்டிப் போட்டுக்கொண்டு மதுபிரியர்கள் வாங்கிச் சென்றதாக தெரிவித்தார். மேலும் நான்கு நாட்களில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 139 கோடி ரூபாய்க்கும், சென்னையில் 136 கோடி ரூபா‌ய்க்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக, திருச்சியில் 133 கோடி ரூபாய்க்கும், சேலத்தில் 120 கோடி ரூபாய்க்கும், கோவையில் 111 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன என்று தகவல் தெரிவிக்கின்றன. இதன் மூலம் கடந்த 4 நாட்களில் ரூ.639 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், விதிகளை மீறி மதுபானங்கள் விற்பனை நடைபெறுகிறதா என காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here