ஒரு ரஃபேல் விமானத்தை கூட வழங்காத, பிரான்சின் டஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் பணத்தை வழங்கும் பிரதமர் நரேந்திர மோடி, பொதுத்துறை நிறுவனமான HALக்கு பணம் கொடுக்க மறுப்பதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, சில குற்றச்சாட்டுகளை பதிவிட்டிருக்கிறார். அதில், பொதுத்துறை நிறுவனமான HAL தயாரித்து கொடுத்த போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களுக்கு தர வேண்டிய 15 ஆயிரத்து 700 கோடி ரூபாயை பிரதமர் மோடி தர மறுப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆனால், ஒரு ரஃபேல் போர் விமானத்தை கூட வழங்காத, பிரான்சின் டஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு, 20 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் கொடுத்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.

இதன் காரணமாக, பலவீனமடைந்துள்ள HAL, தனது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக, 1000 கோடி ரூபாய் கடன் பெற வேண்டிய துயர நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்றத்திற்கு வெளியே தாம் திங்கட்கிழமை அளித்த பேட்டியின் வீடியோ தொகுப்பையும் ராகுல் வெளியிட்டிருக்கிறார். அதில், நாடாளுமன்றத்தில், நீண்ட நேரம் உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், HALக்கு, ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு விமான தயாரிப்பு ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளது எனக் கூறியதாக, தெரிவித்திருக்கிறார்.

இது அப்பட்டமான பொய் என தாம் கூறியதைத் தொடர்ந்து, 26 ஆயிரத்து 570 கோடி ரூபாய் அளவிற்கு மட்டுமே, HALக்கு ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது என நிர்மலா சீதாராமன் மாற்றிக் கூறியிருப்பதை ராகுல் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பிரதமரின் புதிய ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்திற்கு பாதுகாப்புத்துறை மற்றும் இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்களா? இல்லையா? என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

HALஐ பலப்படுத்துவதற்கு பதிலாக, அதை பலவீனப்படுத்தி விட்டு, ரஃபேல் போர் விமான ஒப்பந்தங்களை, அனில் அம்பானிக்கு பரிசு போல் வழங்கப்பட்டிருப்பதாகவும், ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here