ஞாநி

நம் காலத்து பாரதி

0
1699

”சங்கரோட தங்கை நான்; அவனை உதைச்சு விளையாடியிருக்கேன்; இவ்ளோ பெரிய ஆளா வருவான்னு நெனக்கவேயில்ல; இருந்தாலும் அவன் வீட்டில எப்ப வேணும்னாலும் யார் யாரோ வருவா; தங்குவா; சாப்பிடுவா; இதையெல்லாம் ஏத்துக்கிட்டு குடித்தனம் நடத்தறது கஷ்டம்; ஹேட்ஸ் ஆஃப் டு பத்மா; அவளால மட்டும்தான் இது முடியும்; அவனோட வெற்றிக்கு நிச்சயமா அவளோட ஒத்தாசைதான் காரணம்” – இப்படிச் சொன்னது ஞாநியின் தங்கை காயத்ரி. ஜனவரி 15, 2018இல் மறைந்த ஞாநி சங்கரனுக்காக மாற்றத்திற்கான ஊடகவியலாளர்களும் மெட்ராஸ் யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸும் (MUJ) தீக்கதிர் குமரேசனும் ஒருங்கிணைத்த நினைவேந்தல் கூட்டத்தில் காயத்ரி பேசினார்.

”1991இல் ராயப்பேட்டையில் “கோவேறு கழுதைகள்” புத்தக வேலைக்காக க்ரியா பதிப்பகத்துக்கு வந்துவிட்டு வேலை முடிந்ததும் கால் போன போக்கில் நடந்துபோய் நிற்பது பீட்டர்ஸ் காலனியில் ஞாநி வீடாகத்தான் இருக்கும்; பசியிலிருந்த எனக்கு எத்தனையோ முறை பத்மா சோறு போட்டிருக்கிறார்” என்று நினைவுகூர்ந்தார் எழுத்தாளர் இமையம். “15 வயசிலே என் பையனுக்கு இரு சிறுநீரகங்களும் பழுதாகி டயாலிஸிஸ் செய்ய வேண்டி வந்தது; 23 லட்ச ரூபாய் செலவழித்து ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜில் வைத்தியம் செய்தேன். ஒரு டாக்டர் கூட நம்பிக்கையாக நாலு வார்த்தைகள் சொல்லவில்லை; ஞாநிதான் அந்த நம்பிக்கைச் சொற்களையும் எனக்குத் தந்தார். ‘கவலைப்படாதய்யா; உன் பையன் 50 வருஷம் நிச்சயம் வாழ்வான்’ என்றார்.”

”ராஜீவ் காந்தியின் கொலையில் சம்பந்தப்பட்ட சிவராசனின் படம் கொண்ட டேப் ஞாநியிடம் இருந்தது என்ற தகவல் தெரிந்தவுடன் தி ஹிந்துவின் என்.ராம் அவரிடம் கேட்டார்; உங்களைச் சாட்சியாக வைத்து அந்த டேப்பை அரசிடம் ஒப்படைக்கிறேன் என்ற நிபந்தனையுடன் அதனை ஞாநி ஒப்படைத்தார்” என்று நினைவுகூர்ந்தார் பத்திரிகையாளர் நர்மதா. ராஜீவ் படுகொலை சம்பந்தமாக மல்லிகையில் சிபிஐ அதிகாரி கார்த்திகேயனால் விசாரிக்கப்பட்டபோது, “Don’t act like a tough cop to me” என்று தனது உண்மையின் பலத்தால் ஞாநி திருப்பியடித்ததையும் நர்மதா நினைவலைகளாக சொல்லிச் சென்றார்.

பாரதியின் கோபமும் பெரியாரின் சுயமரியாதையும் ஞாநியின் தனித்துவமாக மிளிர்ந்ததாக மூத்த பத்திரிகையாளர் தீக்கதிர் பாலு விவரித்தார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தன்னைப் பணிநீக்கம் செய்ததற்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி ஜெயித்து, மறுபடி வேலைக்குச் சேர்ந்த நாளிலேயே ராஜினாமா செய்த துணிவை ஞாநியின் மூத்த சகோதரி சுபத்ரா சுட்டிக் காட்டினார். எல்லோருக்கும் ஒரு காஃபி மட்டும் தந்து எளிமையாக ஞாநி-பத்மா திருமணம் நடந்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.

ஞாநி தனது மரணத்துக்கு முன்பு மேதா பட்கருடன் ஆளுநரைச் சந்தித்தபோது சென்னையின் பூர்வகுடி மக்களை வளர்ச்சியின் பெயரால் வலுக்கட்டாயமாக அகற்றுவதைத் தடுக்கும்படி கோரிக்கை வைத்தார் என்று அவரது மைத்துனர் குருமூர்த்தி சொன்னார். ஜனவரி 14 மதியம் ஒரு மணிக்கு ஆளுநரைச் சந்தித்த பின் ஆண்டாளைப் பற்றி வீடியோ பதிவு செய்ததை ஞாநியின் வளர்ப்பு மகள் சிவமதி ஞாபகப்படுத்தினார். பின்னர் மேதா பட்கரை விமான நிலையம் செல்லும் வழியில் காரில் பேட்டி எடுத்ததைப் பற்றியும் சிவமதி பேசினார்.

ஞாநியை இழந்த துயரிலிருந்து மீளாத பத்மாவும் சீதா ஜனனியும் இனி வரும் நினைவேந்தல்களில் தங்கள் நினைவுகளைப் பகிரக்கூடும். வெளியூரிலிருந்ததால் மகன் மனுஷ் நந்தன் கலந்துகொள்ள முடியவில்லை. மூத்த பத்திரிகையாளர் ஜவஹர் தலைமையேற்றுப் பேசினார். ஞாநியுடன் பணிபுரிந்த சிகாமணி, ஜென்ராம், மணா, கார்த்திகைச் செல்வன் ஆகியோரும் பெண்ணியவாதி ஜீவசுந்தரியும், தமிழ்த் தேசியவாதி தியாகுவும், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் வீராச்சாமியும் தீக்கதிர் குமரேசனும் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.

மதவெறியைத் துடைதெறியவும் அறிவார்ந்த தமிழ்ச் சமூகத்தைப் படைக்கவும் ஓயாமல் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஞாநி சங்கரனின் நினைவைப் போற்றுவோம்.

இதையும் படியுங்கள்: யார் இந்த அசீமானந்தா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here