ஞாநி: சில நினைவுகள்

A note on Gnani Sankaran by A.Marx

0
1004

சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைகள், நாடகம், அரசியல் விமர்சனம் என வாழ்ந்தவர் ஞாநி.

பலவற்றில் அவர் முன்னோடி என நினைவுகூரத் தக்கவர்.

அவர் ஒரு நாடகாசிரியர் மட்டுமல்ல வீதி நாடகங்களை பிரபலப்படுத்தியவர்; சிறுவர்களுக்கான இதழியலில் பல புதுமைகளைச் செய்தவர் என்பன இப்போது அவரைப் பற்றிப் பேசும் எல்லோரும் மனம் நெகிழ்ந்து குறிப்பிடுபவை.

வேறு சில துறைகளிலும் அவர் முன்னோடியாகச் செயல்பட்டுள்ளார். குறிப்பாக அணு உலை எதிர்ப்பின் அவசியத்தைத் தமிழ் மண்ணில் அறிமுகம் செய்து அது குறித்த ஒரு ஓர்மையைத் தமிழகத்தில் ஏற்படுத்தியதில் அவருக்கு முதன்மையான ஒரு பங்கு உண்டு.

அவரது இல்லம் எப்போதும் ஒரு திறந்த விடுதியாகவே இருந்தது. ராயப்பேட்டை ஹௌசிங் யூனிட்டில் அவர் வாழ்ந்த காலத்தில் நன்பர்கள் யாரும் எப்போதும் வந்து தங்கிச் செல்லும் இடமாக அது இருந்ததை அவ்வளவு எளிதாக மறந்துவிட இயலாது; அப்படியான ஒரு கதவுகளற்ற திறந்த இல்லத்தை யாரும் கற்பனை செய்ய இயலாது.

தற்போது வாழ்ந்த அவரது சற்று வசதியான இல்லத்திற்குச் சென்ற பின்னும்கூட அது பலரும், குறிப்பாக இளைஞர்கள் சந்திக்கும் ஒரு மையமாக இருந்து வந்தது. மாதந்தோறும் யாரேனும் ஒரு செயல்பாட்டாளரை, எழுத்தாளரை அழைத்து அவரது அந்த வீட்டுக் கொல்லைப்புறக் கிணற்றடியில் முழுமையாக, பூரண சுதந்திரத்துடன் உரையாற்ற வைத்த அவரது அம் முயற்சி மறக்க இயலாத ஒன்று. பின் அந்த உரைகள் நூலாகவும் தொகுக்கப்பட்டு வந்தன.

அந்த இல்லத்திற்கு நான் அடிக்கடி செல்லக்கூடிய ஒரு வாய்ப்பு இரன்டாண்டுகளுக்கு முன் வாய்த்தது. ‘Media Watch’ – என்பதை இளைஞர்களுக்குப் பயிற்றுவித்து ஒரு இணைய தளம் தொடங்கும் முயற்சி அது. ‘கவனிக்கிறோம்’ எனும் நறுக்கான ஒரு பெயரை அந்தத் தளத்திற்குத் தேர்வு செய்தவரும் அவரே. பல இளம் நண்பர்கள் அதில் பங்கேற்று அந்தக் காலகட்டத்தின் சில முக்கியமான நிகழ்வுகளை ஊடகங்கள் எவ்வாறு கையாண்டன என்பது குறித்த நுண்ணோக்குப் பார்வைகளை இளைஞர்கள் மூலமாக அந்தத் தளத்தில் அரங்கேற்றிய அனுபவங்கள் மறக்க இயலாது. அம்முயற்சி இப்போது நின்ற போதும் ‘கவனிக்கிறோம்’ எனும் தலைப்பில் அந்தத் தளத்தை நீங்கள் இன்னும் காணலாம். தமிழில் அது எப்படி ஒரு முன்னோடி முயற்சியாக அமைந்தது என்பதைப் புரிந்துகொள்ள இயலும்.

தந்தை பெரியார் மீது அவர் கொண்டிருந்த பற்றும், அவர் பெரியார் குறித்து ஆக்கிய நாடகமும் அவ்வாறே குறிப்பிடத்தக்கன.

இந்துத்துவ அரசியல் குறித்த விமர்சனங்கள் அவருக்கே உரித்தான எல்லைகளுடன் அவரிடம் வெளிப்பட்டு வந்ததையும் குறிப்பிட வேண்டும். குறிப்பாக வெடிகுண்டுத் தாக்குதல்கள் தொடர்பான பயங்கரவாத வழக்கில் இன்று சிறையிலுள்ள சுவாமி அசீமானந்தாவின் ‘காரவான்’ இதழ் நேர்காணலை அவர் உடனடியாக மொழியாக்கி வெளியிட்டது ஒரு முக்கியமான பணி. மாட்டுக்கறி தொடர்பான பிரச்சினைகளில் இந்துத்துவ அரசியலுக்கு எதிரான போராட்டங்களிலும் அவர் பங்குபெற்றார்.

தனிப்பட்ட முறையில் இரண்டு நிகழ்வுகளை இங்கே குறிப்பிட வேண்டும். கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் தஞ்சையில் என் அம்மாலயம் சந்து இல்லத்தில் அவரும் பத்மாவும் வந்து இரண்டு நாட்கள் தங்கிச் சென்றது ஒன்று. மற்றது என் இரண்டாவது மகள் பாரதி ‘ஜர்னலிசம்’ படித்து முடித்தவுடன் அவரது பொறுப்பில் அப்போது இயங்கிய ‘சுட்டி விகடன்’ இதழில் அவளுக்கு ஒரு வாய்ப்பளித்து சுமார் இரண்டாண்டு காலம் அவளைப் பத்திரிகைத் துறையில் பயிற்றுவித்தவர் அவர்.

அவருக்கும் எனக்கும் பல விடயங்களில் கருத்து மாறுபாடுகள் உண்டு. அது மிகவும் வெளிப்படையாகப் பல நேரங்களில் வெளிப்பட்டதும் உண்டு. குறிப்பாக கலைஞர் கருணாநிதி அவர்களின் உடற்குறை குறித்து அவர் கடுமையாக விமர்சித்த தருணத்தில் அதைக் கண்டித்தவர்களில் நானும் ஒருவன். பிறிதொரு நேரத்தில், என்ன நிகழ்வு என நினைவில்லை, ‘கவிதாசரண்’ இதழில் அவரும் நானும் மாற்றுக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதுமுண்டு. அதேபோல மதுவிலக்கைக் கறாராக அமல்படுத்த வேண்டும் என்கிற அவரது கருத்தையும் நான் கடுமையாக விமர்சித்துள்ளேன். சில நேரடி விவாதங்களிலும் பங்கு பெற்றுள்ளேன். பல அம்சங்களில் அவருடைய பார்வைகள் மற்றும் அணுகல்முறைகளில் எனக்கும் அவருக்கும் வேறுபாடுகள் உண்டு என்றபோதிலும் பரஸ்பர நட்பும் மரியாதையும் தொடர்ந்தது.

ஒரே நேரத்தில் என்னைப் போன்றவர்களுடனும் பத்ரி சேஷாத்ரி போன்றோருடனும் நட்பு பாராட்டி, இணைந்து செயல்படும் தகைமை அவருக்கு உண்டு.

இறுதிவரை இயங்கிக் கொண்டிருந்தவர். சிறுநீரகங்கள் செயலிழந்த பின்னும் முன்னைப் போலவே இயங்கியவர். இரண்டு வாரங்கள் முன்னதாகக் கூட ‘யூ ட்யூபில்’ ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியவர், இறுதியாகத் தன் உடலையும் மருத்துவ மாணவர்களுக்கு அளித்துள்ளவர்…

கண்ணீருடன் ஞாநிக்கு அஞ்சலிகள்..

அன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள CLICK HERE பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here