சட்டபேரவையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத் திறப்பு நிகழ்ச்சியைப் புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா படம், பிப்ரவரி 12ஆம் தேதி (திங்கட்கிழமை) தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை திமுக புறக்கணிப்பதாக அக்கட்சியின் செயல்தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் இந்நிகழ்ச்சியைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழகக் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்த ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்தை தமிழக சட்டமன்றத்தில் பேரவைத் தலைவர் திறந்துவைப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த முயற்சியைக் கைவிட வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். தமிழக சட்டமன்றத்தில் நாளை (12.2.2018) நடக்கவிருக்கிற ஜெயலலிதா உருவப்பட திறப்பு நிகழ்ச்சியில் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: எழுதப் படிக்க கஷ்டப்படுகிறதா குழந்தை? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்