வரும் பிப்.27ஆம் தேதி, தலா 60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி மொத்தமுள்ள 60 இடங்களில் 20 இடங்களில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 40 இடங்களில் அதன் கூட்டணி கட்சியான என்.டி.பி.பி. என்னும் தேசிய ஜனநாயக முன்னணி (Nationalist Democratic Progressive Party) கட்சி போட்டியிடுகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று திமாபூரில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணையமைச்சர் கிரன் ரிஜூஜூ, மாநில பாஜக தேர்தல் குழு தலைவர் ஜூபா, மாநில தலைவர் விசாசோலி ஆகியோர் கட்சியின் தேர்தல் அறிக்கையினை வெளியிட்டனர்.

இதில், வருடத்திற்கு குழுக்கல் முறையில் மூத்த குடிமகன்கள் 50 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் இலவசமாக ஜெருசலேம் அழைத்துச் செல்லப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, காங்கிரஸ் கட்சியும், கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்ல மானியம் வழங்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, முஸ்லிம்களுக்கான ஹஜ் மானியத்தை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்தது. அப்போது பேசிய மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, சிறுபான்மை சமூகத்தினரை மரியாதையுடன் நடத்த மத்திய அரசு விரும்புவதாகவும், அவர்களைச் சமாதானப்படுத்தும் நடவடிக்கையை விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான், ஜெருசலேத்துக்கு கிறிஸ்தவர்களை இலவசமாக அழைத்துச் செல்கிறோம் என பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது.

இந்த அறிவிப்புகளை கிறிஸ்தவ அமைப்புகள் வரவேற்கவில்லை. இது குறித்து நாகாலாந்து பாப்டிஸ்ட் சர்ச் கவுன்சிலின் பொதுச்செயலாளர் ஜெலோ ஹீஹோ, மக்களின் மத உணர்வுகளுடன் கட்சிகள் விளையாடி வருவதாகக் குற்றம் சாட்டுகிறார். ஹஜ் மானியங்களை நிறுத்திய பாரதிய ஜனத கட்சி, ஜெருசலேமுக்கு இலவச பயணங்கள் அளிப்பதாகக் கூறுவது ஆச்சரியம் அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கட்சிகள் இதுபோன்று கீழ்த்தரமான அரசியலைக் கைவிட்டு, வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், 88 சதவிகித மக்கள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள். இதில் நாகாலாந்து பாப்டிஸ்ட் சர்ச் கவுன்சிலின் கட்டுப்பாட்டின்கீழ் 1,500க்கும் மேற்பட்ட சர்ச்சுகள் உள்ளன.

நன்றி: hindustantimes

இதையும் படியுங்கள்: எழுதப் படிக்க கஷ்டப்படுகிறதா குழந்தை? இதைப் பாருங்கள்