(October 25, 2015)

தி.மு.கவின் அறிவிக்கப்படாத முதலமைச்சர் வேட்பாளர் மு.க.ஸ்டாலினின் ”நமக்கு நாமே” பிரச்சார சுற்றுப்பயணம், மூன்றாவது கட்டத்தை எட்டியிருக்கிறது. ”மதுவை ஒழிப்பேன்” என்று கன்னியாகுமரியில் தொடங்கியது வாக்குறுதிகள் நிறைந்த இந்தப் பயணம். நாளுக்கு நாள் புதிய வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றன. சமீபத்தில் “தமிழ்நாட்டில் அரசுப் பதவி வகிப்பவர்களின் லஞ்ச, ஊழலை விசாரிக்க லோக் ஆயுக்தா அமைக்கப்படும்” என்கிற வாக்குறுதியைத் தந்திருக்கிறார் ஸ்டாலின். 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ஜெயலலிதா அள்ளி வீசிய வாக்குறுதிகளை ஸ்டாலினின் இந்தப் பயணமும் நினைவூட்டுகிறது.

மதுரையில் நின்று “மணல் கொள்ளையைத் தடுப்பேன்” என்று ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதி என்னவானது? இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு போன்றவர்கள் இன்றைக்கும் மணல் கொள்ளைக்கு எதிராக நீதிமன்றப் படிகளையும் மக்கள் மன்றத்தையும் நாடிச் செல்ல வேண்டியிருக்கிறது. நீர்ப்பற்றாக்குறை மாநிலமான தமிழ்நாட்டில் இயற்கை வளங்களைச் சூறையாடி பணம் சேர்த்து தண்ணீரை இறக்குமதி செய்யப் போகிறோமா? அரசியல் நடத்த பணம் தேவை; ஒவ்வொரு தமிழகச் சட்டமன்றத் தேர்தலிலும் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் அரசியல் கட்சிகளால் செலவிடப்படுகிறது. இந்தப் பணம், மாநிலத்தின் பெரும் தொழில் நிறுவனங்களிடமிருந்து பெறப்படுகிறது. இந்தத் தொழில்களுக்குப் பாதிப்பில்லாத வாக்குறுதிகளை வழங்குவது எப்படி? பட்டும் படாமலும் பொத்தாம் பொதுவாக மக்களைக் கவரும் வாக்குறுதிகளை வழங்குவதுதான்.

”நமக்கு நாமே” சுற்றுப்பயணத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நல்லதம்பி, ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். இதனால் அ.தி.மு.கவில் தான் வகித்து வந்த பதவியை இழந்துள்ளார் நல்லதம்பி. கனிம வளத் தொழில் செய்கிறவர்கள், கல்வித் தொழில் செய்கிறவர்கள் என்று பல தரப்பு ஆதரவைத் திரட்டிக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். கூட்டணிக்குக் கதவுகளையும் மனதையும் திறந்து வைத்து ”அடைந்தால் முதலமைச்சர் பதவி” என்று தீர்க்கமாக முன்னோக்கிச் செல்கிறார் ஸ்டாலின்.

ஸ்டாலின் முதலமைச்சராவதைவிட, ஜெயலலிதாவே முதலமைச்சராக நீடிக்கலாம் என்று நினைக்கும் வைகோ, தனி அணி அமைத்துத் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகிறார். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை தன் அணிக்குத் தலைமையேற்கச் செய்ய வைகோ தயாராக இருக்கிறார். ஆனால், விஜயகாந்துக்கு ஒரே இலக்குதான்: “ஜெயலலிதா எக்காரணம் கொண்டும் மீண்டும் முதலமைச்சராகிவிடக் கூடாது.” ஜெயலலிதா, ஸ்டாலின் அல்லாத ஒரு முதலமைச்சர் என்கிற குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக முடிந்தால் வைகோவும் விஜயகாந்தும் கைகோர்ப்பார்கள். அப்படியொரு சூழல் ஏற்பட்டால் ஐம்பது முதல் எழுபது இடங்களைக் கைப்பற்றி தமிழ்நாட்டில் “உண்மையான கூட்டணி” ஆட்சிக்கு வித்திடலாம்.

ஆனால், மக்களுக்கும் தொழில்களுக்கும் “ஸ்திரத்தன்மை” அவசியம்; எனவேதான் ஜெயலலிதாவும் ஸ்டாலினும் மக்களிடமும் தொழில்களிடமும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவைப்போலவே செல்லுமிடமெல்லாம் திருக்கோவில்களின் ஆசீர்வாதங்களைப் பெற ஆரம்பித்திருக்கிறார், ஸ்டாலின். ஆனால் ஸ்டாலின் திருக்கோவில்களின் ஆசீர்வாதங்களைப் பெற்றால் மட்டும் போதாது; 2006 முதல் 2011 வரை நடந்த தி.மு.க ஆட்சியின் பெரும்பிழைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும்; மன்னிப்புக் கேட்க வேண்டும். 2009இல் இலங்கையில் நடந்த இறுதிப் போரின்போது தன் தந்தை நடத்திய “நாடகத்துக்கு” மன்னிப்புக் கேட்க வேண்டும். ஊடகங்களை வளர விடாமல் செய்ததற்கும் சினிமா தொழிலை நசுக்கியதற்கும் வருத்தம் தெரிவிக்க வேண்டும். ”அரச்ச மாவ அரச்சா” ஜனங்களுக்குப் போரடிக்கும், ஸ்டாலின் அவர்களே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here