ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும்- அமைச்சர் சண்முகம்

0
277

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெயலலிதாவிற்கு ஆஞ்ஜியோகிராம் செய்யப்படவில்லை. மருத்துவர்களே சொன்னார்கள். அப்படியென்றால் ஆஞ்சியோகிராம் செய்திருக்கலாமா? இல்லையா? ஆஞ்ஜியோகிராம் என்பது தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. சாதாரண ஜுரத்திற்கு ஊசி போடுவது போல இன்று ஆஞ்ஜியோகிராம் ஆகிவிட்டது. எல்லோருக்கும் தெரியும், சாதாரண மக்களுக்கும் தெரியும் இன்று நெஞ்சு வலி என்று மருத்துவமனை சென்றாலே ஆஞ்சியோகிராம் செய்வார்கள் என்று. அந்த அளவிற்கு அது சாதாரணமாகிவிட்டது. நானே இரண்டு முறை ஆஞ்சியோகிராம் செய்திருக்கிறேன். செய்துவிட்டு 15 நிமிடங்களில் வீடு திரும்பினேன். 

இப்படி இருக்கையில், 75 நாட்கள் மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும் என 3 மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் அதை செய்ய விடாமல் தடுத்தது யார்? ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டாம் என சொன்னது யார்? தவறான தகவலை சொன்னது யார்? தவறான சிகிச்சை கொடுத்த மருத்துவர் யார்? அந்த மருத்துவமனையின் நோக்கம் என்ன? அந்த மருத்துவமனையை ஆட்டிப்படைத்தது யார்? அப்படியென்றால் ஆஞ்சியோகிராம் செய்யக் கூடாது, செய்தால் ஜெயலலிதா பிழைத்துவிடுவார் என நினைத்தது யார்? அந்த உண்மை தெரியப்பட வேண்டும். அதுமட்டுமல்ல ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என பலமுறை சொல்லப்பட்டது. 

மத்திய அரசு ஜெயலலிதாவிற்கு தனி விமானம் தருகிறோம். அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கு முழு வசதிகளையும் செய்து தருகிறோம் என்றது. அதைத் தடுத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தால், இந்திய மருத்துவர்களின் மதிப்பு குறைந்துவிடும் என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் உயிரை விட, இந்திய மருத்துவர்களின் கவுரவம் முக்கியம் என்ற ராதாகிருஷ்ணனின் பின்னணியை அறிய வேண்டும். மருத்துவமனையில் இருந்தபோது, அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இதுதான் உண்மை. நாங்கள் அந்த மருத்துவமனையில் காலை முதல் இரவு வரை இருந்தோம். 

தற்போது அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து வெளியிடப்பட்ட செலவுக்கணக்கில் இட்லி சாப்பிட்டோம், தோசை சாப்பிட்டோம் என ரூ.1.25 கோடி சேர்க்கப்பட்டுள்ளது. யார் சாப்பிட்டார்கள் அந்த இட்லியையும், தோசையையும், உப்புமாவையும். ஜெயலலிதாவே சாப்பிட்டாரா? அம்பானி அல்லது டாட்டாவாக இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அவருடன் ஒருவர் தங்கியிருப்பார். மற்றவர்கள் வந்து பார்த்துவிட்டு செல்வார்கள். ஆனால் அப்பல்லோவில் ஒரு குடும்பமே தங்கியிருந்துள்ளது. அதுவும் ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்ட குடும்பம் அது. சசிகலாவை தவிர அனைவருமே விரட்டியடிக்கப்பட்டர்கள். அந்தக் குடும்பம் மருத்துவமனையையே உல்லாச விடுதியாக மாற்றியுள்ளது. அந்த குடும்பத்தின் நோக்கம் என்ன? இங்கே தான் மர்மம் அடங்கியிருக்கிறது. அந்த மர்மம் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here