தமிழக அரசால் ரூ.80 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை இன்று காலை 11 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

*சென்னை, மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அமைந்துள்ள வளாகத்திலேயே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு நினைவிடம் அமைக்க சுமார் ரூ.80 கோடியை தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.

*இதைத்தொடர்ந்து, 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பில் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்கு கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணிகள் முடிவடைந்துள்ளது.

Image

*இதையடுத்து ஜெயலலிதா நினைவிடத்தை இன்று காலை 11 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி  திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம்,அமைச்சர்கள், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் ஒருவர் பின் ஒருவராக வந்துஜெயலலிதாவிற்கு மரியாதை செலுத்தினர். இதனிடையே ஜெயலலிதா நினைவிட கல்வெட்டும் திறக்கப்பட்டது. *இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் தனபால், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பீனிக்ஸ் பறவை வடிவத்தில் நினைவிடம்

*பீனிக்ஸ் பறவை வடிவத்தில் கட்டப்பட்டுள்ள மண்டபம், டிஜிட்டல் அருங்காட்சியகம், தடாகம், மியாவாக்கி தோட்டம் உள்ளிட்ட நினைவிடத்தின் பல்வேறு சிறப்புகள் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு..

.*நினைவிட வளாகத்தில் பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக உயர்தர கருங்கல்லான நடைபாதை
அமைக்கப்பட்டுள்ளது. இந்நடைபாதை கூரைகளின் மீது சூரிய ஓளி தகடுகள் பதிக்கப்பட்டு அதன்மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது

*பீனிக்ஸ் நினைவு மண்டபத்திற்கு பின்புறம் மியாவாக்கி தோட்டமும், மண்டபத்தை சுற்றிலும் கருங்கற்கள் பதிக்கப்பட்ட தடாகங்களும், தோட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஜெயலலிதா நினைவிடம் ஒரு சிறிய சுற்றுலாத் தலமாகவே மாற்றப்பட்டுள்ளது

*நுழைவுவாயில் தடாகத்தின் அருகில் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. நினைவிடத்திற்கு வாகனங்கள் வந்து செல்ல ஏதுவாக 265 மீட்டர் நீளம் மற்றும் 9 மீட்டர் அகலத்தில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

*ஜெயலலிதா நினைவு மண்டப நுழைவு வாயிலின் இருபுறங்களிலும், கருங்கல்லில் செய்யப்பட்ட சிங்க சிலைகள் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. இத்துடன் கண்காணிப்பு கேமராக்கள், பொது ஒலி அமைப்பு, அணையா விளக்கு ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. பார்வையாளர்கள் வாகனங்களை நிறுத்த ஏதுவாக இரு இடங்களில் வாகன நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அருங்காட்சியகம், அறிவுசார்  பூங்கா


ஜெயலலிதா நினைவிடம் அருகே, அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார்  பூங்கா அமைக்கவும் தமிழக அரசு ₹12 கோடியும், நினைவிடத்தின் 5 ஆண்டு  பராமரிப்பு பணிக்கு ₹9 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில்  கொண்டு வரப்பட்ட திட்டங்கள், அவரது வீடியோ மற்றும் ஆடியோ பேச்சின் பதிவு,  அவர் படித்த நூல்கள், அவரது சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் வைக்கப்படுகிறது.இதில், ஜெயலலிதா பேசுவது போன்று  தொடு திரை மூலம் ஒளி, ஒலி காட்சிகள் வைக்கப்படுகிறது. இந்த  அருங்காட்சியகம், அறிவுசார் மையம் முழுக்க, முழுக்க ஏசி வசதி  செய்யப்படுகிறது. தற்போது இந்த பணிகள் முடிவடையாததால், பிப்ரவரி மாதம் திறந்து திறந்து வைக்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here