(மறைந்த தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் நினைவு நாளை ஒட்டி இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது.)

சமூக நீதி, மாநில சுயாட்சி அரசியல் பின்புலத்தில் வந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, காவிரி, நீட், முல்லைப் பெரியாறு போன்ற மாநிலத்தின் முக்கியப் பிரச்சனைகள் குறித்து ஆழ்ந்த புரிதல் இருந்தது. தமிழ்நாட்டுக்கு என்ன தேவை என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. உரிய இடங்களில் மாநிலத்துக்கு தேவையானவற்றுக்காக அவர் நுட்பமாக வாதிட்டார்.

ஐக்கிய முன்னணி போன்ற கூட்டணி அரசுகளில் அவர் தமது செல்வாக்கால் தமிழகத்துக்கு அதிக அமைச்சரவை இடங்களை கோரிப் பெற்றார். அதன் மூலம் அதிக நிதி பெற்று தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க அவரால் முடிந்தது.

அத்துடன் அவருக்கு இந்திய, உலக அரசியல் குறித்தும் நுட்பமான புரிதல் இருந்தது. எமர்ஜென்சி காலத்தில் அமெரிக்காவின் உதவியைக் கோரிப்பெற்று இந்தியாவில் இருந்து தமிழகத்தை தனியாகப் பிரிக்கமுடியும் என்று க.ராஜாராம் யோசனை கூறியபோது, அப்படியெல்லாம் அமெரிக்கா உதவாது என்று உறுதியாக கூறியவர் கருணாநிதி. அந்த அளவுக்கு அவர் உலக அரசியலை புரிந்துவைத்திருந்தார்.

மறுபுறம் ஜெயலலிதாவோ பிரதமர்களைக்கூட அஞ்சாமல் நேருக்கு நேர் சந்தித்து தமது நிலைப்பாட்டை வலியுறுத்தும் துணிச்சல் மிக்கவராக இருந்தார்.

தமது கொள்கைகளுக்காக உறுதியாக வாதிடுவது, முடியாதபோது நீதிமன்றத்தை நாடி பரிகாரம் காண்பது அவரது பாணியாக இருந்தது.

நீதிமன்றத்தின் மூலம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று அவர் நம்பினார்.

பிடிவாதம் காட்டும் தலைவராக அவர் இருந்தார். ஆனால், கருணாநிதி விட்டுக்கொடுத்து நெகிழ்வாக பிரச்சனைகளை கையாள்கிறவராக, அழைத்துப் பேசுவதன் மூலம் தீர்வு காண்பவராக இருந்தார்.

ஆனால், டெல்லியில் இருந்து வருகிற தேசியத் தலைவர்கள் கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் சந்தித்துவிட்டுச் செல்லும் வகையில் அவர்களது செல்வாக்கு இருந்தது.

அதற்குக் காரணம் இருவருமே கட்சியையும், ஆட்சியில் இருந்தபோது ஆட்சியையும், அரசியலையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

இருவருக்குமே படிக்கும் வழக்கம் உண்டு. பல விஷயங்களில் ஆழமான படிப்பறிவு உள்ளவர் கருணாநிதி. ஜெயலலிதாவும் அப்படியே. அவரது வீட்டிலேய பெரிய நூலகம் இருந்தது.

ஆனால், ஜெயலலிதா உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோதே அவர் தீவிரமாக எதிர்த்துவந்த உணவுப் பாதுகாப்பு சட்டத்தை தமிழகம் ஏற்றுக்கொண்டது. அவர் இறந்த ஒரு மாதத்தில் உதய் மின் திட்டத்தையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. இதையும் முதல்வராக ஜெயலலிதா எதிர்த்துவந்தார்.

நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு கோரி தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதா இப்போது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக பல காலமாக காத்திருக்கிறது.

இன்று என்ன நடக்கிறது?

இதற்கிடையே, தமிழக அரசு பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறது. இது இவர்கள் நீட்டை ஏற்றுக்கொண்டதைப் போன்ற தோற்றத்தை அளிக்கிறது.

பல விஷயங்களில் இன்றைய தமிழக அரசு மத்திய அரசு கூறுவதைக் கேட்டு, அனுசரித்து செல்லும் நிலையே உள்ளது.

காரணம் ஜெயலலிதா இறந்தபின் ஆளும் அதிமுக மூன்று பிரிவாகப் பிரிந்து பலவீனமடைந்தது. அதிமுக-வில் இருந்து பிரிந்து சென்ற தினகரனுக்கு 9 சதவீத வாக்கு வங்கி இருப்பதாக ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது.

இது மாநில அரசியலில் எதிர்க்கட்சியாக வந்து செல்வாக்கோடு இருந்த காலத்தில் விஜயகாந்தின் தேமுதிக-விடம் இருந்த வாக்கு வங்கிக்கு சமம். இந்த கருத்துக்கணிப்பு உண்மையைப் பிரதிபலிக்குமானால், அவரால் அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக உருவாகிவிட முடியும். இந்த அரசிடம் பெரும்பான்மை என்பது உறுதியாக இல்லை. எனவே அவர்கள் மத்திய அரசை சார்ந்தே இருக்கும் நிலை உள்ளது.

மேகதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிராக ஒரு நிலை எடுக்கப்படுகிறது, அவ்வப்போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் தீவிரவாதம் ஊடுருவியிருப்பதாக பேசுகிறார். இதெல்லாம் ஜெயலலிதா இருந்திருந்தால் சாத்தியமில்லை.

ஸ்டாலினின் பலவீனம் என்ன?

மாறாக, திமுக-விடம் உறுதியான ஒரு வாக்கு வங்கி இருக்கிறது. அந்தக் கட்சியிடம் 38 சதவீத வாக்கு வங்கி இருப்பதாக ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது. இது கூட குறைய இருக்கலாம். ஆனால், அதுவே இன்று தமிழகத்தில் தனிப்பெரும் அரசியல் கட்சியாக இருக்கிறது. இன்று தேர்தல் நடந்தாலும் வெற்றி பெறும் சூழ்நிலை திமுக-வுக்கு இருக்கிறது.

அந்தக் கட்சியின் மீது அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உறுதியான பிடிமானம் இருக்கிறது. அவர் சென்னை மாநகர மேயராக இருந்தபோது, நல்ல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை வைத்து, அவர்களுக்கு அதிகாரம் அளித்து நல்ல நிர்வாகத்தை தந்திருக்கிறார். அவரது மேயர் பதவிக் காலத்தில் சென்னையில் பல நல்ல விஷயங்கள் நடந்தன.

திமுக ஆட்சிக்கு வந்தால் இதைப் போல நல்ல நிர்வாகம் கிடைக்ககூடும். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு சுதந்திரம் இருக்கும்.ஆனால், ஆந்திரப்பிரதேசம், தெலங்கானாவில் பாஜக-வுக்கு மாற்றாக ஒரு தேசிய அணியை உருவாக்குகிறார் சந்திரபாபு நாயுடு. மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜி குறிப்பிடத்தக்க தேசியத் தலைவராக இருக்கிறார். இதைப் போல தேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்தும் உறுதியான தலைமையாக ஸ்டாலின் உருவாகவில்லை.

செய்தியாளர் கூட்டங்களில் நான்கு கேள்விகளுக்கு மேல் தொடர்சியாக அவரால் பதில் கூற முடியவில்லை. அவரது ஆழம் போதாது என்பதையே இது காட்டுகிறது.

தொடர்ந்து தொண்டர்களிடம் பேசும்போதுகூட இந்த ஆட்சி கலையும், அடுத்து திமுக ஆட்சிதான் என்று மட்டுமே அவரால் அடுத்தடுத்து கூற முடிகிறது. ஒருபுறம் இவர் சொல்லிக்கொண்டே இருக்கிறார். மறுபுறம் இந்த அரசு கலைக்கப்படாமல் தொடர்கிறது.

மத்திய அரசிடம் எல்லாவற்றுக்கும் தமிழக அரசு பணிந்து போகிறது. ஆனால், இது மாநிலத்தின் நன்மைக்காக மத்திய அரசுடன் இணக்கமாகப் போகும் அணுகு முறை என்கிறது எடப்பாடி பழனிசாமி அரசு. மேகதாட்டு போன்ற பிரச்சனைகளில் தமிழகத்தின் நலனுக்கு மாறாக மத்திய அரசு ஒரு முடிவெடுக்கிறது. அப்படியானால், தமிழகத்தின் நலனுக்காக இணக்கமாகப் போவதாக அதிமுக அரசு கூறும் வாதம் என்னவாகிறது?

ஜெயலலிதா இருக்கும்போதெல்லாம் வாய் திறக்காத நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த், இன்னும் சின்னஞ்சிறு நடிகர்கள் எல்லாம் அரசை விமர்சிக்கிறார்கள். இதெல்லாம் அதிமுக அரசு பலவீனமாக இருப்பதையே காட்டுகிறது.

வெற்றிடத்தை நிரப்புவார்களா?

ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்கள் இந்த வெற்றிடத்தை நிரப்புவார்கள் என்பது ஏதும் அறியாதவர்கள் கூறுவது. ஜெயலலிதா, கருணாநிதி போன்றோர் அரசியலில் இருக்கும்போதே அவர்கள் வந்திருந்தால் அது வேறு. எம்.ஜி.யாரை உதாரணம் கூறுகிறார்கள். அவர் வெறும் நடிகர் அல்ல. நடித்துக்கொண்டிருக்கும்போதே அவர் அரசியல்வாதி, நடிக்கும்போதே எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர். திமுக-வில் இருந்து பிரிந்து செல்லும்போது அந்தக் கட்சியின் பலத்தில் பாதியை பிரித்து தம்மோடு இட்டுச் சென்றார்.

விவரம் மிக்க பல திமுக தலைவர்கள் அவரோடு சென்றார்கள். நடிகராக இருந்த விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் வரை உயர்ந்தார். ஆனால், அவர் கட்சி ஆரம்பிக்கும் முன்பே நீண்டகாலம் தமது மன்றம் மூலம் உறுதியான கட்டமைப்பை ஏற்படுத்தியிருந்தார். தீவிர அரசியலில் குதிக்கும் முன்பே அவரது மன்றத்தினர் உள்ளாட்சித் தேர்தலில் பங்கெடுத்திருந்தனர். அப்படி இருந்தும் அவர் அரசியலில் தற்போது செல்வாக்கை இழந்துள்ளார். இதெல்லாம் காட்டுவது என்னவென்றால், அரசியலில் ஊறித் திளைத்தவர்கள்தான் இங்கே வெல்ல முடியும்.

அடுத்த தலைமையாக உருவாகும் வாய்ப்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. ஆனால், அவர் தம்மை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நடைமுறை அறிவு உண்டு. அது இல்லாவிட்டால் அவர்கள் இந்த இடத்துக்கு வந்திருக்க முடியாது. ஆனால், படிப்பறிவு என்பதும், ஆழமான அரசியல் புரிதல் என்பதும் முக்கியம். ஒரு பேட்டியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நீங்கள் ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்படுகிறது. அவர் புத்தகம் படிப்பேன் என்கிறார். கடைசியாக என்ன புத்தகம் படித்தீர்கள் என்று கேட்டபோது, பார்க்கவருகிறவர்கள் புத்தகம் கொடுக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு என்ன புத்தகம் என்று சொல்ல முடியாமல் தடுமாறுகிறார்.

சர்வாதிகாரமும்- ஜனநாயகமும்

ஜெயலலிதா சர்வாதிகாரத் தன்மையோடு இருந்தார். எதிர்ப்புகளை நசுக்கினார். கருணாநிதியும்கூட சில நேரங்களில் போராட்டங்களை ஒடுக்குவார். இல்லாவிட்டால் அழைத்துப் பேசி போராட்டமே நடக்காமல் பார்த்துக்கொள்வார்.

ஆனால், ஜெயலலிதா இறந்த உடனே நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம், இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்குப் பிறகு நடந்த ஒரு தன்னெழுச்சியான போராட்டமாக 10 நாள்களை ஸ்தம்பிக்க வைத்த போராட்டமாக நடந்தது. ஜெயலலிதா என்ற சர்வாதிகாரத் தலைமை இல்லை என்ற ஆசுவாசத்தை மக்கள் அனுபவித்தனர்.

கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவரது கூட்டம் ஒன்றில் பங்கேற்ற நடிகர் அஜித் அரசியல் கூட்டங்களுக்கு வரும்படி நடிகர்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாக கூறினார். நடிகர் ரஜினிகாந்த்கூட எழுந்து நின்று கைத்தட்டினார். ஆனால், இரண்டு நாளில் கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்த அஜித் தமது பேச்சுக்கு விளக்கம் அளித்தார்.

ஆனால், இப்போது சின்னஞ்சிறு நடிகர்கள் எல்லாம் அரசை விமர்சிக்கின்றனர். ஐபிஎல் விளையாட்டு நடக்காமல் சென்னையில் இருந்து விரட்ட ஒரு சிறு அமைப்பால் முடிகிறது. ஜெயலலிதா இருந்திருந்தால் இது நடந்திருக்காது.

இதெல்லாம் ஜனநாயக வெளி உருவானதன் அடையாளம் அல்ல. ஆட்சியில் இருக்கும் கட்சியின் பலவீனத்தின் அடையாளம்தான். ஏனென்றால் ஒருபுறம் ஜனநாயக வெளி என்பது யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதைப் பாராமல் தனது பலத்தினால் உருவாவதாக இருக்கவேண்டும். மற்றொருபுறம், மத்திய அரசிடம், செல்வாக்கு மிக்கவர்களிடம், சிறு அமைப்புகளிடம் அதிகாரம் காட்டுவதில் ஜெயலலிதாவின் பாணியை பின்பற்றாத முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட் அவுட் வைப்பது, அதிக போலீஸ் பாதுகாப்பு எடுத்துக்கொள்வது போன்றவற்றில் ஜெயலலிதா பாணியைப் பின்பற்றுகிறார்.

அதே நேரம் கஜா புயலை ஒட்டி முன்னேற்பாடுகளை செய்வதில் இந்த அரசு ஜெயலலிதா காலத்தோடு ஒப்பிடுகையில் சிறந்த முறையில் செயல்பட்டது.

Courtesy : bbc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here