ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்திருப்பார் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தில்லியில் தெரிவித்தார்.

இது தொடர்பாக தில்லியில் சனிக்கிழமை ’தினமணி’க்கு அவர் அளித்த பேட்டி:

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காமல் மத்திய அரசு ஆந்திரத்தை வஞ்சித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மத்திய அரசுக்கு எதிராக, தெலுங்கு தேசம் கட்சி சார்பில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தோம். இதற்கு அண்டை மாநிலமான தமிழ்நாடு தார்மீக அடிப்படையில் ஆதரவு அளித்திருக்க வேண்டும்.

ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மாநில உரிமைகளுக்காக ஒரு மாநிலம் போராடும்போது, அதற்கு அண்டை மாநிலம் ஆதரவு அளிப்பதுதானே முறை?

இந்த நேரத்தில், ஜெயலலிதா, கருணாநிதி போன்ற வலிமையான தலைவர்கள் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருந்தால் எவ்வாறு இருக்கும் என நினைத்துப் பார்க்கிறேன்.

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்திருப்பார் என நம்புகிறேன். ஏனென்றால், மாநில உரிமைகளில் அவர் நம்பிக்கை வைத்திருந்தார். மத்திய அரசால் மாநில உரிமைகள் மறுக்கப்பட அவர் அனுமதித்திருக்க மாட்டார்.

அண்டை மாநிலத்தின் தார்மீக குரலுக்கு அவர் ஆதரவளித்திருப்பார்.

அதேபோல, திமுக தலைவர் கருணாநிதி செயல்படும் நிலையில் இருந்திருந்தால், மாநில உரிமைகளை நசுக்கும் மத்திய அரசின் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்திருப்பார்.

அண்டை மாநிலங்கள் நட்புறவாக இருக்க வேண்டும்.

நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக தமிழக அரசு மீது எனக்கு வெறுப்புணா்வு இல்லை. ஆனால், அவர்கள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்திருக்க வேண்டும். ஏனென்றால், இன்று ஆந்திரத்துக்கு நடப்பது நாளை தமிழகத்துக்கு நடக்கலாம் என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும்” என்றார் அவர்.

Courtesy : Dinamani

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்