ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. 

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஓராண்டுக்கும் மேலாக நடைபெறும் விசாரணையில் இதுவரை 145-க்கும் மேற்பட்டோர் ஆணையத்தால் விசாரிக்கப்பட்டுள்ளனர். பிப்ரவரி மாத இறுதிக்குள் விசாரணை ஆணையம் தமது அறிக்கையை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக ஆலோசனை வழங்கியதாக கூறப்படும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜனவரி 9-ஆம் தேதி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விசாரணைக்கு ஆஜராகுமாறு ரிச்சர்ட் பீலேவுக்கு ஈ மெயில் மூலம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அப்பலோ மருத்துவர்கள் மற்றும் ஜெயலலிதாவின் தனி மருத்துவர் சிவகுமார் உள்ளிட்டோரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் பல கேள்விகள் ரிச்சர்ட் பீலேவிடம் முன்வைக்கப்பட வாய்ப்புள்ளது.

இதேபோல், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வரும் 11-ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 
ஏற்கெனவே கடந்த 18-ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், கடந்த 20-ம் தேதி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவர்கள் ஆஜராகவில்லை. இதனால் விஜயபாஸ்கர் வரும் 7-ம் தேதியும், ஓ.பன்னீர்செல்வம் வரும் 8-ம் தேதியும் ஆஜராகும் படி மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here