ஜெயலலிதாவின் மூன்று மந்திரங்கள்

மக்கள் நல அரசு, மாநில உரிமைகள், மதச்சார்பின்மை

0
1677
ஜெயலலிதாவுக்கு (1948-2016) இப்போது டாட் காமின் அஞ்சலி

1.மக்கள் நல அரசு

2.மாநில உரிமைகள்

3.மதச்சார்பின்மை

இந்த மூன்றும்தான் தமிழக முதல்வராக மறைந்த ஜெயலலிதாவின் (1948-2016) மந்திரங்களாக இருந்தன; தன்னுடைய மன ஊக்கத்தினாலும் தலைமைத்துவத்தாலும் இந்தத் தத்துவங்களின் முழுப்பொருளை மக்களே நேரடியாக உணரும்படி செய்தார்; உறுதியான பண்பு நலனால் இந்த மந்திரங்களில் சமரசமின்றி செயல்பட்டு வரலாற்றுப்புகழை அடைந்திருக்கிறார் ஜெயலலிதா.
மக்கள் நல அரசு (Welfare State) என்பதன் எல்லைகளை விரிவுபடுத்தியதில் ஜெயலலிதா இந்தியாவுக்கே முன்னுதாரணமாக இருந்தார்; மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் இவரது திட்டம் உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவால் பின்பற்றப்பட்டது; நகர்ப்புற வறுமையை ஒழிக்கும் அம்மா உணவகங்கள் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் கவனத்தையும் உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்தன. 2011-2016 கால ஆட்சியில் ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்கு கல்வியும் நல்வாழ்வும் எந்தச் செலவுமில்லாமல் கிடைப்பதை உறுதி செய்தார். கல்வியையும் சுகாதாரத்தையும் சாமானிய மக்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்ததுதான் இவர் 2016இல் மீண்டும் சாதாரண மக்களால் முதல்வராக தேர்வு செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தது என்பதை இப்போது டாட் காமின் அறிவியல்பூர்வமான கருத்துக்கணிப்பு உறுதி செய்தது.

அறிஞர் அண்ணாவின் பெயர் கொண்ட இயக்கத்துக்கு 29 ஆண்டுகள் தலைமையேற்று சமூக நீதியையும் மாநில உரிமைகளையும் நிலைநாட்டினார்; 1994இல் அரசு வேலைவாய்ப்புகளிலும் கல்வியிலும் 69 சதவீதம் இடஒதுக்கீட்டைப் பெற்று தந்தார்; காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை 2013இல் மத்திய அரசிதழில் வெளியிட செய்தார்; 2014இல் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த செய்து தன்னுடைய அரசியல் வழிகாட்டி எம்.ஜி.ராமச்சந்திரனின் வரலாற்றுத் தவறை சரிசெய்தார். 1992இல் பெண் சிசுக் கொலையை தடுக்க இவர் கொண்டு வந்த தொட்டில் குழந்தைத் திட்டமும் 2003இல் அம்மாவின் பெயரைப் பிள்ளைகளுக்கு இனிஷியலாக வைக்கலாம் என்ற அரசாணையும் காலம் போற்றுகிற சாதனைகளின் பட்டியலில் இருக்கிறது.

தனது நண்பர் நரேந்திர மோடி 2002இல் மதக்கலவரத்திற்குப் பின்னால் குஜராத்தில் ஆட்சியைப் பிடித்ததால், தமிழ்நாட்டிலும் மதவாத அரசியல் ஜெயிக்கும் என்று தப்புக் கணக்குப் போட்டார்; 2004இல் தமிழ்நாட்டு மக்கள் பாடம் கற்பித்த பின்னர் மதவாத அரசியலின் திசையில் திரும்பிக்கூட பார்க்காமல் திடமுடன் முன்னோக்கிச் சென்றார்; பிறவிக் குணமான தன்னம்பிக்கையைப் புதுப்பித்துக் கொண்டார்; மதச்சார்பின்மையை உறுதியாக பற்றிப் பிடித்துக்கொண்டார். 1995இல் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு ஆடம்பரத் திருமணம் நடத்தியது, 1991-96 ஆட்சியில் ஊழல்கள் புரிந்தது, 2003இல் அரசு ஊழியர்கள் மீதான அடக்குமுறை ஆகிய பெரும் தவறுகளிலிருந்தும் பாடம் கற்றுக்கொண்டு தனது பொது வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொண்டார்.

அரசியல் வழிகாட்டி எம்.ஜி.ராமச்சந்திரனின் சாதனைகளைத் தாண்டி பன்மடங்கு சாதனைகளை செய்துகாட்டினார்; 2006-11இல் எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் அ.இ.அ.தி.மு.கவில் இளைய ரத்தம் பாய்ச்சினார்; கட்சியின் கடைசி மனுஷிக்கும் ஜனநாயகத்தில் பெரும் வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்பதை திரும்பத் திரும்ப உறுதிப்படுத்தினார்; எம்.ஜி.ஆர் காலத்தில் அ.தி.மு.கவுக்கு அன்னியமாக இருந்த சென்னையின் 16 சட்டமன்றத் தொகுதிகளில் 14ஐ 2011இல் ஜெயித்துக் காட்டினார்; அதே ஆண்டில் சென்னை மாநகராட்சியையும் முதல் முறையாக இவர் தலைமையில்தான் அ.தி.மு.க வென்றது. 2014இல் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 37ஐ வென்றதும் 2016இல் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் இரட்டை இலைச் சின்னத்தில் வேட்பாளர்களைப் போட்டியிட செய்து அறுதிப் பெரும்பான்மை பெற்றதும் “நமது வெற்றி முடிவானது” என்ற அசாத்திய தன்னம்பிக்கை ஜெயித்துவிட்ட தருணங்கள்.

திராவிட அரசியல் தலித்துகளுக்கும் பெண்களுக்கும் போதுமான இடமளிக்கவில்லை என்கிற வரலாற்றுக் குறையைப் போக்கியவர்; கொண்ட கொள்கையிலும் பண்பு நலன்களிலும் உறுதியாக இருந்தால் பெண்கள் அரசியலில் முன்னோக்கிச் செல்வதில் எந்தத் தடையும் இல்லை என்கிற நம்பிக்கையை தமிழ்நாட்டுப் பெண்களிடம் பரவலாக்கினார்; உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு, கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டங்களில் தலித்துகளுக்கும் குடும்பத் தலைவிகள் வழிநடத்தும் குடும்பங்களுக்கும் முன்னுரிமை ஆகியவை எடுத்துக்காட்டுகள். ஆரம்பத்தில் ஊடகங்களை, விமர்சனங்களை எடுத்தெறிந்தார் என்றாலும் காலம் அவரைப் பண்படுத்தியது; கடும் விமர்சனங்களை ஆக்கபூர்வமான செயல்படத்தக்க அணுகுமுறையுடன் எதிர்கொண்டார்.

ஜெயலலிதாவின் மூன்று மந்திரங்களைப் பின்பற்றி வழிநடக்கும் வரை அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டு மக்களின் அன்பைப் பெற்றிருக்கும்.

இதையும் பாருங்கள்: மக்கள் தலைவி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்