ஜெயலலிதாவின் மூன்றாவது ஆட்சிக்காலத்தில் தவறுகள் இல்லை: வாஸந்தி

0
319

(செப்டம்பர் 12,2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)

இந்தியா டுடே தமிழ்ப் பதிப்புக்கு சுமார் பத்தாண்டுகள் எடிட்டராக இருந்த வாஸந்தி Amma: Jayalalithaa’s journey from movie star to political Queen என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்; ஜெயலலிதாவைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் ஆங்கிலத்தில் மிகவும் குறைவு என்கிற வெற்றிடத்தை நிரப்புவதற்கு இந்த நூல் மிக முக்கியமான தொடக்கமாக அமைந்திருக்கிறது. “எதைச் செய்ய வேண்டுமென்று துணிந்தாலும் அதை வெற்றிகரமாகச் செய்துவிட முடியும்” என்ற அசாத்திய தன்னம்பிக்கை கொண்டவர் ஜெயலலிதா; படிப்பிலும் சினிமாவிலும் அரசியலிலும் அவர் ஜொலித்ததற்கு வேறென்ன காரணம் இருக்க முடியும் என்று வாசகர்களிடம் கேட்கிறார் வாஸந்தி; ஜெயலலிதாவின் பள்ளிக்கூட வாழ்விலிருந்தும் சினிமா வாழ்விலிருந்தும் அரசியல் வாழ்விலிருந்தும் மிகவும் முக்கியமான தருணங்களைத் தொகுத்து வழங்கி ஜெயலலிதாவின் சமூக-அரசியல் பங்களிப்பை ஆவணப்படுத்தியுள்ளார் நூலாசிரியர்.

ஆணாதிக்கம் மிகுந்த சினிமா உலகிலும் அரசியல் உலகிலும் ஜெயலலிதாவின் வெற்றிப் பயணத்தை அசாத்திய தன்னம்பிக்கை என்கிற ஒரு சொற்றொடருக்குள் அடக்குவது கடினம்; “விடா முயற்சி”, “கண்ணும் கருத்துமாக உழைத்தல்” என்று இன்னும் பல நற்பண்புகள் இல்லாமல் இதையெல்லாம் சாதித்திருக்க முடியாது என்று வாஸந்தி பல சம்பவங்களைச் சொல்லி விளக்குகிறார்; அதிகாரத்தைப் பெற்ற பிறகு “பேராசை”, “பழிவாங்கும் குணம்” போன்ற தீமைகளும் சேர்ந்துகொள்கின்றன; முதல் முறை முதலமைச்சரானபோது செய்த தவறுகள் இப்போதுவரை ஜெயலலிதாவை விடாது துரத்துகின்றன. ஆனால் 1991-96, 2001-06 ஆகிய இரண்டு முறை முதலமைச்சராக இருந்தபோது செய்த தவறுகளிலிருந்து ஜெயலலிதா பாடம் படித்துக்கொண்டார்; 2011-16 ஆட்சியின்போது ஜெயலலிதா பெரும்பாலும் தவறுகள் செய்யாமலே இருந்தார் என்பதை வாஸந்தி இந்த 173 பக்கப் புத்தகத்தில் அழகாக சொல்லிச் செல்கிறார்.

வாஸந்தியின் இந்தப் புத்தகத்தின் விரிவான வடிவத்தை முதலில் பெங்குவின் வெளியிடுவதாக இருந்தபோது ஜெயலலிதா சார்பில் உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெறப்பட்டது; இப்போது ஜக்கர்நாட் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டிருக்கிறது. வாஸந்தியின் பார்வையிலிருந்து இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள பகுதிகள் ஓர் ஊடகவியலாளரின் உயிரோட்டமான பதிவாக அமைந்துள்ளன; ஜெயலலிதாவின் அரசியல் எழுச்சியை விரும்பாத ஆர்.எம்.வீரப்பனின் பார்வைகள் கதையோட்டத்துக்குத் தேவையான வில்லத்தனத்துடன் நூலை சுவாரஸ்யமாக்குகின்றன; இந்த சுவாரஸ்யத்துக்கான தேவையைத் தவிர ஆர்.எம்.வீரப்பனுக்குப் பெரிய வரலாற்றுப் பாத்திரம் கிடையாது; இருந்தாலும் வாஸந்தி அதற்கு கணிசமான இடமும் முக்கியத்துவமும் தந்திருக்கிறார். ஜெயலலிதாவின் அரசியல் போட்டியாளரான கருணாநிதியின் பங்களிப்புக்கும் நூலில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது; அதனைச் சொல்லாமல் வரலாறு முழுமை பெறாது.

எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்குமிருந்த இணக்கத்தைக் காட்டிலும் முரண்பாடுகள் நூலில் கணிசமான இடத்தை ஆக்கிரமிக்கின்றன; இதனை நூலாசிரியரின் பார்வை என்றுகூட சுருக்கிவிட முடியாது; இந்த நூலுக்கான வாஸந்தியின் ஆராய்ச்சிப்போக்கில் பேட்டிகள் தந்த ஆர்.எம்.வீரப்பனின் தாக்கம் கதைசொல்லலின் தன்மைகளைப் பாதித்திருக்கக்கூடும்; ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆருடன் முரண்பாடுகள் உண்டானபோது அதனைச் செப்பனிட்ட அரசியல் தலைவர்களின் பேட்டிகளும் கிடைத்திருந்தால் நூல் இன்னும் சிறப்பு பெற்றிருக்கும். இருந்தாலும் வாஸந்தியின் இந்த நூல் வரலாற்றுச் சிறப்பு மிக்க முயற்சி; ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள விரும்பும் யாரும் படிக்க வேண்டிய புத்தகமாக இதனைப் பரிந்துரைப்பேன்.

(குறிப்பு: ஊடகவியலில் எனக்கு முதல் வேலை தந்தவர் வாஸந்தி; அதற்காக இந்த மதிப்புரையில் புகழுரைகள் இடம்பெறவில்லை.)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்