ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கை தமிழக அரசு முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணை கேட்டு திமுக வழக்குத் தாக்கல் செய்யும் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் கூடுதல் நேரத்தில் கடை திறந்து வைத்திருந்ததாகக்கூறி, ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீஸார் கடுமையாகத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் அவர்களை கோவில்பட்டி கிளைச் சிறையில் போலீஸார் அடைத்தனர். இதில் இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்த் திரையுலகினர் முதல் பாலிவுட் திரையுலகினர், ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் இச்சம்பவத்தில் தொடர்புடைய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, ஜெயராஜ் உடல்நலக் குறைவாலும், அவரது மகன் பென்னிக்ஸ் மூச்சுத்திணறலாலும் இறந்ததாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 27) தன் ட்விட்டர் பக்கத்தில், “சாத்தான்குளத்தில் கொலை செய்யப்பட்ட இருவரது பிரேதப் பரிசோதனை அறிக்கை வராத நிலையில் பென்னிக்ஸ் மூச்சுத்திணறலில் இறந்தார் என்றும், அவரது தந்தை ஜெயராஜ் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார் என்றும் முதல்வர் எதனடிப்படையில் சொன்னார்?

தவறு அரசின் பக்கம் என்றுதானே அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் கொடுத்தீர்கள்? இயற்கையான மரணம் என்றால் கொடுத்திருப்பீர்களா? காவல் நிலையத்தை சாத்தான் வேட்டைக்காடாக மாற்றியவர்களை கொலை வழக்கில் கைது செய்திடுக!

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கை தமிழக அரசு முறையாக விசாரித்து ஒழுங்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணை கேட்டு திமுக வழக்குத் தாக்கல் செய்யும்” எனப் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here