தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், வருகிற 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை விண்ணில் செலுத்தப்பட இருந்த சந்திரயான் 2 விண்கலம், ஏவப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக, தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து சந்திரயானை நிலவுக்கு அனுப்பும் சூழல் வரும் 21, 22ஆம் தேதிகளில் உள்ளதாகவு‌ம், அதைத் தவறவிட்டால் செப்டம்பரில்தான் அனுப்ப முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்பட்டது. 

அதைத் தொடர்ந்து, இஸ்ரோவின் தொழில்நுட்பப் பிரிவு, கோளாறைச் சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக வும், அடுத்த 2 நாட்களுக்குள் முழுமையாக சீர்செய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் கோளாறு முழுமையாகச் சரி செய்யப்பட்டு விட்டதை அடுத்து, வரும் 22 ஆம் தேதி மதியம் 2.43 மணிக்கு சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.