ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஆகஸ்ட் 12 ஆம் தேதி தனது 43 ஆவது ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் ‘ஜியோ பைபர்’ பிராட்பேண்ட் சேவையை அறிவித்துள்ளது. தொலைபேசி, இண்டர்நெட், கேபிள் டி.வி. என பல சலுகைகள் இடம்பெற்றுள்ளன.

ஜியோ நிறுவனம், தொடங்கிய மூன்று ஆண்டுகளில் சந்தையில் மிக வேகமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது. ஜியோ நிறுவனம் தற்சமயம் 34 கோடி சந்தாதாரர்களுடன் உலகின் 2-வது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக வளர்ந்துள்ளது. ஜியோ சேவையில் மாதந்தோறும் 10 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைந்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஜியோவின் 3 வது ஆண்டு விழாவையொட்டி, செப்டம்பர் 5ஆம் தேதி, ‘ஜியோ பைபர்’ பிராட்பேண்ட் சேவையை அறிமுகப்படுத்துகிறது. இத்திட்டம் இந்தியா முழுவதும் செயல்பாட்டுக்கு வருவதற்கு 12 மாதங்கள் பிடிக்கும்.

இதில், தொலைபேசி, இண்டர்நெட், கேபிள் டி.வி. ஆகியவற்றில் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டப்படி, லேண்ட்லைன் தொலைபேசிகளில் ஆயுட்காலம் முழுவதும் இலவசமாக பேசிக்கொள்ளலாம். பிராட்பேண்ட் சேவையில் இண்டர்நெட் வேகம், வினாடிக்கு 100 எம்.பி. முதல் ஒரு ஜி.பி. வரை இருக்கும். இதற்கான மாதாந்திர கட்டணம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்திற்கேற்ப ரூ.700 இருந்து ரூ.10 ஆயிரம் வரை இருக்கும்.

ஜியோ பைபர் திட்டத்தில் இணையத்தின் குறைந்தபட்ச வேகமே வினாடிக்கு 100 எம்.பி. ஆக இருக்கும். ஆனால், வளர்ந்த நாடான அமெரிக்காவில், பிராட்பேண்ட் இணையத்தின் சராசரி வேகம் வினாடிக்கு 90 எம்.பி. ஆகும். உலகில் ரிலையன்ஸ் நிறுவனம் போட்ட பைபர் கேபிள்களை எடுத்து அளந்தால், இந்த பூமியை 11 தடவை சுற்றி வரலாம்.

மேலும், லேண்ட்லைன் தொலைபேசியில் இருந்து அமெரிக்கா, கனடாவுக்கு அளவற்ற சர்வதேச அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதற்கான கட்டணம் மாதத்துக்கு ரூ.500 ஆகும். ஜியோ பைபரின் கட்டணங்கள், தற்போது சந்தையில் உள்ள கட்டணங்களில் ஐந்தில் ஒரு பங்கு முதல் 10 ல் ஒரு பங்குவரை இருக்கும்.

இதுதவிர, ஜியோ பைபர் வரவேற்பு திட்டத்தில், குறிப்பிட்ட சந்தாவை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 4கே ஹெச்.டி. டி.வி. அல்லது பர்சனல் கம்ப்யூட்டர் இலவசமாக வழங்கப்படும். 4கே செட்-டாப் பாக்சும் இலவசம். ஜியோ பைபர் பிரிமீயம் திட்டத்தின்கீழ், வாடிக்கையாளர்கள் புதிதாக வெளியாகும் திரைப்படங்களை தங்கள் வீட்டில் இருந்தே கண்டுகளிக்கலாம். அடுத்த ஆண்டில் இருந்து இந்த வசதி அறிமுகம் ஆகிறது.

மேலும், இந்தியாவில் டிஜிட்டல் புரட்சி ஏற்படுத்தும் நோக்கத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஜியோ நிறுவனம் 10 ஆண்டு காலம் இணைந்து செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here