‘ஜிசாட்-30’ : உயர்தரமான தொலைக்காட்சி, தொலைதொடர்பு சேவைகளை வழங்கும்

0
285

தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் உள்ள ஏவு தளத்தில் இருந்து சர்வதேச நேரப்படி நேற்று அதிகாலை2.35 மணிக்கு ஏரியன்-5ராக்கெட் (வி.ஏ.251) மூலம்‘ஜிசாட்-30’ விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இதனை இஸ்ரோதனது டிவிட்டர் பக்கத்தில் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏரியன் விண்வெளி ஏவுதள தலைமை செயல் அதிகாரி ஸ்டீபன் இஷ்ரல்,“ஏரியன் ராக்கெட்டில் அனுப்பப்பட்ட செயற்கைகோள் வெற்றிகரமாக புவி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஜிசாட்-30செயற்கைகோள் புவி சுற்றுப்பாதையை மாற்றும் கோளப் பாதையில் நிறுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை பாராட்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

செயற்கைகோளை விண்ணில் செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்ரோவின் யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மைய இயக்குனர் பி.குன்கி கிருஷ்ணன் கூறுகையில், “இந்த ஜிசாட்-30 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டிருப்பதன் மூலம், இஸ்ரோ 2020 ஆம் ஆண்டை சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது. திட்டக் குழுவினர் ஹாசனில் உள்ள செயற்கைகோள் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடி அந்த செயற்கைகோளை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். செயற்கைகோள் அதன் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு உடனே மேற்கொள்ள வேண்டிய பணிகள் செய்யப்படும்” என்றார்.

இது குறித்து இஸ்ரோதலைவர் சிவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜிசாட்-30 செயற்கைகோள் ஒரு தனித்துவமான கட்டமைப்பைக் கொண்டது. நெகிழ்வுதன்மையுடன் தகவல்களை வழங்கும் திறன் உடையது. இந்த செயற்கைகோள் கியூபாண்ட் மூலம் இந்தியா மற்றும் அதன் தீவுகள்,சி பாண்ட்மூலமாக அரபுநாடுகள், அதிகளவிலான ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளுக்கும் சேவையை வழங்கும் திறன் கொண்டது.

இந்த செயற்கைகோள் டி.டி.எச். டெலிவிஷன் சேவைகள்,ஏ.டி.எம். எந்திரங்களுக்காகவிசாட் இணைப்புஏற்படுத்துவது, டெலிவிஷன்அப்லிங்கிங், டெலிபோர்ட் சேவைகள்,டிஜிட்டல் சேட்டிலைட் செய்திசேகரித்தல், மின்னணு நிர்வாக செயலிகள் செயல்படவும் உதவும்.மேலும் பெருகி வரும் தொலைத் தொடர்பு செயலிகளின் தொகுப்புக்காக மொத்தமாக தகவல்களை மாற்றும் வசதியும் கிடைக்கும். இவ்வாறு சிவன் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானிகள் நடத்திய முதல்கட்ட சோதனையில் செயற்கைகோள் எந்த பிரச்சினையும் இன்றி நல்ல முறையில் இருப்பதாகவும் வரும் நாட்களில் அந்த செயற்கைகோளின் புவிசுற்றுப் பாதையை படிப்படியாக உயர்த்தி பூமியில் இருந்து36 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் இந்த செயற்கைகோள் இறுதிபுவி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டு அனைத்து சுற்றுப்பாதை சோதனைக்கு பிறகு அந்த செயற்கைகோள் செயல்படத் தொடங்கும். ஜிசாட்-30 செயற்கைகோள் சக்தி வாய்ந்த தகவல் தொடர்பு சேவைகள் அதாவது உயர்தரமான தொலைக்காட்சி சேவை,தொலைதொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளை வழங்கும்.

மேலும், இந்த செயற்கைகோளில் 12சி மற்றும் 10கியூபாண்ட் டிரான்ஸ்பான்டர்ஸ் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே தகவல் தொடர்பு சேவையை வழங்கிவரும் இன்சாட்-4ஏ செயற்கைக் கோளின் ஆயுட்காலம் நிறைவடைவடைகிறது. அதற்கு பதிலாக 15 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இந்த ஜிசாட்-30 செயற்கைகோள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சக்தி வாய்ந்த தகவல் தொடர்பு செயற்கைகோள் ‘ஜிசாட்-30’-ஐ உருவாக்கியது. 3,357 கிலோ எடை கொண்ட அந்த செயற்கைக்கோள் தற்போது விண்ணில் ஏவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here