சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதத்தை மாற்றுவது குறித்து இதுவரை அமைச்சர்கள் குழு பரிசீலிக்கவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜிஎஸ்டி வரி விகித மாற்றங்கள் குறித்து ஆலோசனைகள் தருவதற்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நியமித்தது. அந்தக் குழுவில், மேற்கு வங்கம், கேரளம், கோவா, பிகார், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மாநில நிதியமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தற்சமயம், 5 12, 18, 28 சதவீத அடிப்படையில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இவை தவிர தங்கம், தங்க நகைகளுக்கு 3 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதற்கிடையே, ஜிஎஸ்டி வரி விதிப்பில் 5 சதவீதத்தை நீக்கிவிட்டு, அந்த வரி வரம்புக்குள் வரும் சில பொருள்களுக்கு 3 சதவீதமும் சில பொருள்களுக்கு 8
சதவீதமும் வரி விதிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் குறித்து அமைச்சர்கள் குழு இதுவரை பரிசீலிக்கவில்லை. அமைச்சர்கள் குழுக் கூட்டம், மே மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்று தெரிகிறது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகு, அமைச்சர்கள் குழு தங்கள் பரிந்துரையை நிதியமைச்சர் தலைமையிலான ஐஎஸ்டி கவுன்சிலிடம் வைக்கும் என்றார் அவர்.
கடந்த சில மாதங்களாக பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், விலைவாசி உயர்வை ஏற்படுத்தாத ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது கொள்கை வகுப்பவர்களுக்கு சவாலான விஷயமாக இருக்கும்.