சரக்கு-சேவை வரி(ஜிஎஸ்டி) விதிப்பு முறையில் மேலும் சீர்திருத்தம் கொண்டு வரும் வகையில், 12 மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி விரைவில் ஒன்றிணைக்கப்பட்டு, அதற்கு இடையில் ஒரு வரம்பில் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சூசகமாகத் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டியில் 28 சதவீத வரி விதிப்பது, படிப்படியாக முற்றிலும் நீக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பல்வேறு வரி விதிப்பு முறைகளுக்கு மாற்றாக, நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் வகையில், ஜிஎஸ்டி வரி முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத்தியது. அதன்படி, 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இந்த வரி விதிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு துறையினரின் கோரிக்கையை ஏற்று, பல பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், 23 பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதாக ஜேட்லி அறிவித்தார். அந்த 23 பொருள்களில், கியர் பாக்ஸ், பயன்படுத்தப்பட்ட டயர்கள், பவர் பேங்க் (மின் சேமிப்பகம்), டிஜிட்டல் கேமரா, விடியோ கேமரா, விடியோ கேம் சாதனங்கள் உள்ளிட்ட 7 பொருள்களின் ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பு, வரும் ஜனவரி 1-இல் இருந்து அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மேலும் சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என்று ஜேட்லி கூறியுள்ளார்.

இது தொடர்பாக, ஜிஎஸ்டி வரி விதிப்பில் 18 மாதங்கள் என்ற தலைப்பில் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

தற்சமயம், 1,216 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. அவற்றில், 183 பொருள்களுக்கு வரி விலக்கு (0சதவீதம்) அளிக்கப்பட்டுள்ளது. 308 பொருள்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டியும், 178 பொருள்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டியும், 517 பொருள்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டியும் விதிக்கப்படுகிறது. இதுதவிர, மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், சிமென்ட், ஆடம்பர பொருள்கள், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்கள் (சிகரெட், புகையிலை) ஆகியவை உள்பட மொத்தம் 28 பொருள்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி தொடர்கிறது.

பெரும்பாலான கட்டுமானப் பொருள்களின் மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 12 மற்றும் 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டு விட்டது. அடுத்தகட்டமாக, சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதைத் தொடர்ந்து, 12 மற்றும் 18 சதவீத வரி விதிப்புக்கு முறைக்கு மாற்றாக, அதற்கு இடையில் கிட்டத்தட்ட சராசரியாக ஒரு வரி நிர்ணயிக்கப்படும். அதன் பிறகு, 0 சதவீதம் (வரி விலக்கு), 5 சதவீதம் மற்றும் புதிதாக நிர்ணயிக்கப்படும் ஒரு வரி என மொத்தம் மூன்று அடுக்கு முறை வரிகள்தான் நடைமுறையில் இருக்கும்.

புதிதாக நிர்ணயிக்கப்படும் வரி வரம்பில் ஆடம்பர பொருள்களும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களும் இருக்கும். ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பிறகு, வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; வரி ஏய்ப்பு குறைந்துள்ளது; வரி வருவாய் அதிகரித்துள்ளது; வர்த்தகர்கள் எளிதில் வர்த்தகம் செய்யும் சூழல் மேம்பட்டுள்ளது; எனவே, வரி வருவாய் அதிகரிப்பின் காரணமாக, பல பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரி படிப்படியாகக் குறைக்கப்படுகிறது. இதற்கு முன்பு 31 சதவீத வரி விதித்து நாட்டு மக்களை துன்புறுத்தி வந்தவர்கள் (காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்) ஜிஎஸ்டி அமலாக்கத்தை குறை கூறுகிறார்கள். அவர்கள் முதலில் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஜிஎஸ்டி வரி வருவாயைப் பொருத்தவரை, கடந்த ஆண்டில் மாத சராசரி வருவாய் ரூ.89,700 கோடியாக இருந்தது. நிகழாண்டில் இது, ரூ.97,100 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும், நிகழாண்டில் வரி வருவாய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது என்று அந்தப் பதிவில் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

Courtesy : https://www.dinamani.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here