ஜாதி குறித்து பேசிய மோடி; பதிலடிக் கொடுத்த பிரியங்கா காந்தி

0
324

மோடியின் ஜாதி குறித்து எனக்கு தெரியாது, பிரச்சினைகளை மட்டுமே பேசுகிறேன்  என்று மோடியின் ஜாதி குறித்த பேச்சுக்கு  பிரியங்காகாந்தி பதிலடி கொடுத்துள்ளார். 

பிரதமர் மோடியின் ஜாதி என்ன என்று எனக்கு தெரியாது, நானும், எதிர்க்கட்சியினரும் பிரச்சினைகளை மட்டுமே எழுப்பி பிரச்சாரம் செய்கிறோம் என்று கூறியுள்ளார் பிரியங்கா காந்தி . 

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, கன்னோஜ் நகரில் பிரச்சாரத்தில் பேசிய போது  பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி என்னுடைய ஜாதிச் சான்றிதழை பிரதி எடுத்து வழங்கி வருகிறார். நான் இந்த நேரத்தில் உங்களிடம் கூறுவது என்னவென்றால், நான் குஜராத்தின் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவன் . 

மாயாவதி என்னுடைய ஜாதி சான்றிதழை வெளியிடாத வரைக்கும்  நான் என்னுடைய ஜாதி குறித்து கவலைப்படவில்லை. இப்போது அகிலேஷ் யாதவும், காங்கிரஸ் கட்சியும் கூட என்னுடைய ஜாதியை பற்றி பேசத் தொடங்கிவிட்டார்கள். நான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் இதுவரை ஜாதி அரசியல் செய்தது இல்லை.  நான் அவர்களிடம் கேட்பதெல்லாம், தயவு செய்து என்னை ஜாதி அரசியலுக்கு இழுக்காதீர்கள் என்றார். 

 அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரியங்கா காந்தியிடம்  மோடியின் ஜாதி குறித்து எதிர்க்கட்சிகள் பேசுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.  அதற்கு  பிரியங்கா காந்தி கூறியதாவது –

 எனக்கு இப்போதுவரைக்கும் மோடி எந்த ஜாதியைச் சேர்ந்தவர் என்பது தெரியாது. எதிர்க்கட்சியினரும், நானும் பிரச்சினைகளை குறித்து கேள்வி எழுப்பித்தான் பிரச்சாரம் செய்து வருகிறோம். குறிப்பாக நாட்டில் வேலையின்மை, வளர்ச்சி, சுகாதாரச் சேவைகள், கல்வி, பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் நலன் ஆகியவற்றைத்தான் பேசுகிறோம். ஜாதியை குறிப்பிட்டுப் பேசவில்லை.

இந்த தேர்தலில் பாஜக தேசியவாதத்தை ஆயுதமாக எடுத்துப் பேசி வருகிறது. தேசியவாதம் என்பது மக்களுக்கு சேவை செய்வது, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கண்டறிந்து அதை தீர்ப்பதாகும்.

ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள். மக்களின் பிரச்சினைகளை செவிமடுத்துக் கேட்பதில்லை. மக்களின்  குரல்கள் நசுக்கப்படுகின்றன இதற்குப் பெயர் தேசியவாதம் இல்லை.

அமேதி பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி, இந்த தொகுதி மக்களுக்கு ஷூக்களை வழங்கி அவமானப்படுத்துகிறார். இதுதான் பாஜக தேர்தலில் போட்டியிடும் முறையா இது சரியான செயல் அல்ல.

தேர்தலில் போட்டி இப்படி இருக்கக் கூடாது. மக்களுடன் மக்களாகச் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அதற்கு தீர்வு காண வேண்டும், நாங்கள் அதிகாரத்துக்கு வந்தால் என்ன செய்வோம் என்று கூறுவோம்.

 அமேதி மக்கள் சுயமரியாதை நிரம்பியவர்கள், அவர்கள் ஒருபோதும் யாரிடமும் யாசகம் கேட்கமாட்டார்கள். எனக்கு 12 வயதாக இருந்தபோதில் இருந்தே இங்கு வந்துகொண்டிருக்கிறேன். ஒருபோதும் மக்கள் யாரிடமும் எதுவும் கேட்டதில்லை என்றார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here