ஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா

”தூய்மை இந்தியா”வைத் திருத்தி எழுதும் “கக்கூஸ்”

0
28794
திவ்யாவின் கக்கூஸ் ஆவணப்படம் “தூய்மை இந்தியா” திட்டத்தின் மேம்போக்கான தன்மையைக் கேள்விக்குட்படுத்தியுள்ளது.

ரயில் பாதையில் பயணிகளின் மலம் விழுந்து கிடக்கிறது; அதைச் சுற்றிலும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன; பெண் துப்புரவுத் தொழிலாளிகள் முதலில் அந்தக் குப்பைகளை அகற்றுகிறார்கள்; அவர்களே அந்த மலத்தைச் சுற்றிலும் ப்ளீச்சிங் பவுடரைத் தூவுகிறார்கள்; பின்னர் ஆண் துப்புரவுத் தொழிலாளிகள் நீரைப் பீய்ச்சியடித்து அந்த இடத்தைச் சுத்தம் செய்கிறார்கள்; தமிழ்நாட்டின் பல உள்ளாட்சி அமைப்புகளில் இரவு 10 மணி முதல் அதிகாலை 3 மணி வரைக்கும் மலம் அள்ளும் வேலையைப் பெண் துப்புரவுப் பணியாளர்கள் செய்கிறார்கள்; குப்பை வண்டியில் அவற்றைக் கொண்டு செல்லும் வேலையை ஆண் துப்புரவுப் பணியாளர்கள் செய்கிறார்கள்.

திவ்யா இயக்கிய “கக்கூஸ்” விவரணப் படம் இவற்றை ஆவணப்படுத்துகிறது; சுத்தமாக கழிவறையைப் பயன்படுத்துவதற்கான கல்விகூட இல்லாத சமூகமாக நாம் இருக்கிறோம் என்பதை முகத்தில் அறைந்ததுபோல சொல்லிச் செல்கிறது இந்த 105 நிமிடப் படம்; நமது சமூகம் எப்படி “நம்ம டாய்லெட்”டிலும் தீண்டாமையைத் தக்கவைத்திருக்கிறது என்பதைக் காட்சிகளாக விவரிக்கிறது. ஒவ்வொரு மனிதரும் தன் மலத்தைச் சுத்தம் செய்வதற்குக்கூட பொறுப்பேற்காத சமூகத்தில் “தூய பாரதம்” என்ற பெயரிலும் “தூய தமிழ்நாடு” என்ற பெயரிலும் கடைக்கோடி மனிதர்கள் சுரண்டப்படுகிறார்கள்; கழிவு நீர் வடிகால்களில் அடைப்புகளை அகற்றுவதற்காக இறங்கி எந்தவித சுவாச உதவிகளும் இல்லாமல் மரணிக்கும் துப்புரவுத் தொழிலாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மத்திய அரசு 2013ஆம் ஆண்டில் நிறைவேற்றிய மனிதக் கழிவு அகற்றல் தடைச்சட்டம் தண்ணீர் வசதியில்லாத, சுகாதாரமில்லாத கழிப்பறைகளைக் கட்டக்கூடாது என்று தெளிவாக சொல்கிறது; மனித மலத்தைச் சுத்தம் செய்வதற்கான அவசியமே ஏற்படக்கூடாது என்பதுதான் இந்தச் சட்டத்தின் நோக்கம்; ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் “தூய்மை இந்தியா” திட்டத்தில் கட்டப்படும் கழிவறைகள், தண்ணீர் வசதியின்றியும் சுகாதாரமின்றியும் இருப்பதைக் களத்திலிருந்து திவ்யாவின் கேமரா படம்பிடித்துள்ளது. ”தூய்மை இந்தியா” கழிவறைகளே மத்திய அரசின் சட்டத்தை அப்பட்டமாக மீறுகின்றன. “மத்திய, மாநில அரசுகள் தினமும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை இந்தப் படம் அம்பலப்படுத்துகிறது” என்கிறார் சமூக அக்கறைக்காக மகசேசே விருது பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா.

“மக்களின் வரிப் பணத்தில்தான் லட்சக்கணக்கான கோடிகளை எடுத்து தூய்மையான இந்தியாவுக்கு கழிவறைகள் கட்டுகிறார்கள்; இந்தக் கழிவறைகள் சுகாதாரமற்ற முறையில் கட்டுமானம் செய்யப்படுவதால் மீண்டும் ஜாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை வைத்து மலம் அகற்றும் வேலை தொடரும்” என்கிறார் மகசேசே விருது பெற்றவரும் சஃபாய் கர்மாசாரி அந்தோலன் அமைப்பின் தேசிய அமைப்பாளருமான பெஸ்வாடா வில்ஸன்; 2013இல் இந்தச் சட்டம் இயற்றப்பட்ட சமயத்தில் நாட்டிலிருந்த அத்தனை சுகாதாரமில்லாத கழிவறைகளும் இடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இதனை “தூய்மை இந்தியா” திட்டத்துக்கு முன்பு செய்திருக்க வேண்டும்; மனிதக் கழிவுகளை எந்த மனிதரும் அகற்றாத நிலைமையை உறுதி செய்வதற்கான அரசியல் விருப்பம் மத்திய அரசுக்கு இல்லை.

இதையும் படியுங்கள்: ஜிஷாவும் அம்பேத்கரும்

இதையும் படியுங்கள்: நிறுவனமயப்பட்ட ஒடுக்குமுறையைச் சீரழியுங்கள்

ஜாதியைக் காப்பாற்றும் தண்ணீர் இல்லாத “நம்ம டாய்லெட்கள்”

குடிமை உணர்வுள்ளவர்களாக அல்லது தங்களது அழுக்குகளைச் சுமக்கும் சிரமத்தைச் சக மனிதர்களுக்கு தரக்கூடாது என்கிற உணர்வுள்ளவர்களாக மக்களை மாற்றுவது ஏன் கடினமாகிறது? பல நூற்றாண்டுகளாக நமது கழிவுகளை அள்ளுவதற்கு ஆள் உண்டு என்கிற ஜாதிய மனப்பான்மை கட்டமைக்கப்பட்டுள்ளதுதான் காரணம்; இந்த ஜாதிய மனப்பான்மையைத் தக்கவைக்கும் அரசியல்தான் பிரதமர் நரேந்திர மோடி போன்றவர்களாலும் முன்வைக்கப்படுகிறது; இந்த மனப்பான்மயுடன் இந்தியா எப்படி சம வளர்ச்சியைச் சாதிக்கும்? ”24 மணி நேர அவகாசத்தில் 500 ரூபாய், 1000 ரூபாய் செல்லாது என்று சொன்ன பிரதமரால், எந்த மனிதரும் இந்த நாட்டில் பிற மனிதர்களின் கழிவுகளைச் சுத்தம் செய்ய மாட்டார் என்று அறிவிப்பதற்கு எவ்வளவு நேரமாகும்?” என்கிறார் பெஸ்வாடா வில்ஸன்.

”நமது சக மனிதர்கள் சென்னை, மும்பை, விஜயவாடா, பெங்களூர் பெருநகரங்களின் சாக்கடைகளில் மூச்சுத் திணறிச் செத்துப்போவதைக் கண்டு கொந்தளிப்பதுதான் தேசியவாதம்; இந்த அநீதிக்கு முற்றுப்புள்ளி வைப்பதே தேசியவாதத்தின் தலையாய பணி” என்கிறார் வில்ஸன். துப்புரவுத் தொழிலிலிருக்கும் மனிதர்களின் சுயமரியாதையைக் காக்கும் பயணத்திற்கு திவ்யாவின் “கக்கூஸ்” படம் அழகான கருவி; இது பொதுச் சமூகத்திடம் முதலில் உரையாடலையும் பின்னர் செயல்பாட்டையும் தூண்டும் என்று சமூகவியலாளர்கள் நம்புகிறார்கள். ”நமது ஆட்சியாளர்களின் ஜாதிய மனநிலையைப் படம்பிடித்துள்ளது திவ்யாவின் விவரணப் படம்” என்கிறார் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வியலை ஆய்வு செய்து புத்தகம் எழுதிய செய்தியாளர் பாஷா சிங்.

விவரணப் படத்துக்காக சுமார் ஒரு வருடம் தூய்மைத் தொழிலாளர்களுடன் பயணம் செய்த திவ்யா, தமிழ்நாட்டில் சுமார் 90 சதவீதம் தூய்மைத் தொழிலாளர்கள் பெண்களாக இருப்பதாகப் பதிவு செய்கிறார். “இந்தத் தொழிலே பெண்மயப்படுத்தப்பட்டுள்ளது” என்கிறார். தூய்மைத் தொழில் செய்யும் பெண்களிடம் சமூக விரோதிகளும் இரவுப் பணி ரோந்துக் காவலர்களும் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் சம்பவங்களையும் படம்பிடித்துள்ளது “கக்கூஸ்.” பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொழில் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைவுகளையும் நேரடி வாய்மொழியாகவும் காட்சிகளாகவும் பதிவு செய்துள்ளது இந்தப் படம்.

இதையும் படியுங்கள்: சசி

இதையும் படியுங்கள்: ஜெயலலிதாவின் மூன்று மந்திரங்கள்

கழிவுநீர் வடிகால் மரணங்களையும் கழிவுநீர்த் தொட்டி மரணங்களையும் நீர்த்தேக்கத் தொட்டி மரணங்களாக பூசி மெழுகும் ஊடக மொழியையும் கடுமையாக விமர்சிக்கிறார் சட்ட மாணவியாக போராட்டக் களத்துக்கு வந்து அரசியல் செயல்பாட்டாளராக பயணிக்கும் திவ்யா. படப்பிடிப்புகளின்போது ஒளிப்பதிவுக் கருவியைப் பல முறை தூய்மைப் பணி அதிகாரிகளிடமும் மேற்பார்வையாளர்களிடமும் பறிகொடுத்து காவல் துறையின் தலையீட்டில் மீட்டெடுத்துள்ளார். மனிதக் கழிவுகளை அகற்றி உயிரிழந்தவர்களுக்குரிய சட்டபூர்வமான இழப்பீட்டைப் பெறவே சம்பந்தப்பட்ட மக்கள் போராடும் நிலையையும் படம் பேசுகிறது.

பெருநகரத்திலும் நவீன நிறுவனங்களிலும் ஒரு ஜாதிக்குரிய தொழிலாக மனிதக் கழிவுகளை அகற்றுதல் பேணப்படுவதைப் பேசுகிறது “கக்கூஸ்”. திருப்பூரிலும் சென்னையிலும் வெளிமாநிலத் தொழிலாளிகள் துப்புரவுத் தொழிலுக்கு வந்துள்ளதையும் படம் பதிவு செய்கிறது. மலர்வதி எழுதிய தூப்புக்காரி நாவலில் இந்தத் தொழில் ஜாதியைக் கடந்து சமூகத்தில் நலிவுற்ற பெண்களுக்குக் கையளிக்கப்படுவது சித்தரிக்கப்பட்டுள்ளது. தூய்மைத் தொழில் ஏழை, எளிய மக்களுக்கானது என்பதே ஜாதிய அணுகுமுறையின் விளைவுதான்.

கழிவுகளை அகற்ற குழிகளில் இறங்கி மரணிக்கும் மனிதர்களின் வழக்குகள் வெறும் சந்தேக மரணங்கள் என்று காவல் துறையால் பதிவு செய்யப்படுகின்றன; சட்டத்தை மதிக்காமல், பாதுகாப்பு உபகரணங்களை அளிக்காமல் அவர்களுக்கு ஆக்ஸிஜன் சுவாசக் கருவிகளை வழங்காமல் மரணிக்க விடுவது உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்பந்ததாரர்கள் செய்யும் பட்டப்பகல் படுகொலை அல்லவா? இதற்கெதிராக இந்த நாடு கிளர்ந்து எழாமல் கட்டிப் போட்டிருப்பது ஜாதி என்கிற சுவர்தானே. ஜாதியைக் காப்பாற்றும் வேலையில் போலீஸும் ஊடகமும் ஒன்றாக வேலை செய்கின்றன என்பதைத் தெளிவாகப் பேசுகிறது இந்தப் படம்.

இதையும் படியுங்கள்: கடலூரில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளிகள் உயிரிழப்பு

நம்மைச் சுற்றிலும் ஜாதி அடிப்படையிலான பாகுபாடும் மத அடிப்படையிலான பாகுபாடும் தொடர்ந்து கொண்டிருக்கிறது; பெண்களுக்கும் திருநங்கைகள் முதலான மாற்றுப் பாலினத்தவர்களுக்கும் எதிரான ஒடுக்குமுறையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சக மனிதர்களே இந்தப் பாகுபாட்டையும் ஒடுக்குமுறையையும் முன்னின்று செய்கிறார்கள். இந்தச் சுரண்டலான அமைப்பை ஆட்சியாளர்கள் “தூய்மை இந்தியா” திட்டம் போன்றவற்றின் கட்டமைப்பாலும் ஏற்கனவே இயற்றப்பட்ட சட்டங்களை மதிக்காமலும் தொடரச் செய்கிறார்கள்; ஜாதியால் கட்டுண்ட நமது சமூகம் தொடர்ந்து கழிவறைகளை அசுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறது. நமது கழிவுகளுக்கு நாம் பொறுப்பேற்காதவரை நாம் உலகிற்குத் தலைமையேற்க முடியாது; வழிகாட்டவும் முடியாது.

இதையும் படியுங்கள்: “நேர்வழில சம்பாதிக்கறதோட சந்தோஷத்தை மனைவிகிட்ட எடுத்துச் சொல்ல முடியும்”

இதையும் படியுங்கள்: செல்ஃபோனால் நாம் எதைத் தொலைத்தோம்?

இதையும் படியுங்கள்: கலை என்பது மனிதர்களைச் செயல்படத் தூண்ட வேண்டும்: டி.எம்.கிருஷ்ணா

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்