“ஜாகிர் நாயக் இனவாத அரசியல் குறித்து பேசக் கூடாது” – மலேசியப் பிரதமர் மகாதீர்

0
223

ஜாகிர் நாயக் இனவாத அரசியல் குறித்துப் பேசியது தவறு என்று மலேசிய பிரதமர் மகாதீர் மொஹமத் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் மலேசியாவில் இஸ்லாம் குறித்துப் பேசவும் போதிக்கவும் ஜாகிருக்கு எந்தத் தடையும் இல்லை என அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.

இனவாத அரசியல் குறித்துப் பேசுவது மலேசியாவில் நிலவும் நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இனவாத அரசியலை தொட்டதன் மூலம் ஜாகிர் எல்லை மீறிப் பேசிவிட்டதாக கூறியுள்ளார்.

“மதம் குறித்தும், மற்ற சரியான விஷயங்கள் குறித்தும் ஜாகிர் நாயக் பேசுவதை நாங்கள் தடுக்க விரும்பவில்லை. ஆனால் அவரோ மலேசியாவில் இனவாத அரசியலில் பங்கெடுக்க விரும்புகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவருக்கு நிரந்தர தங்கும் உரிமையை கொடுத்தது யார்? என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அத்தகைய உரிமையைப் பெற்றவர் அரசியல் குறித்துப் பேச இங்கு அனுமதி இல்லை,” என்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் மகாதீர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஜாகிர் நாயக் இஸ்லாத்தை போதிக்கலாம் என்றாலும், அவர் அதைச் செய்யவில்லை என்று குறிப்பிட்ட பிரதமர் மகாதீர், மாறாக மலேசியாவில் உள்ள சீனர்களை சீனாவுக்கும், இந்தியர்களை மீண்டும் இந்தியாவுக்கும் திருப்பி அனுப்புவது குறித்தே ஜாகிர் பேசியதாக சுட்டிக் காட்டினார்.

ஜாகிர் நாயக்
Image captionஜாகிர் நாயக்

தன்னைப் பொறுத்தவரை ஜாகிர் இவ்வாறு பேசியதை ஓர் அரசியல் நகர்வாகக் கருதுவதாகவும் மகாதீர் குறிப்பிட்டார்.

உணர்ச்சிகரமான, முக்கியமான விஷயங்கள் குறித்து பேசும் போது மிகக் கவனமாக இருப்பது மலேசிய மக்களின் வழக்கமாக இருந்து வருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர் மகாதீர், ஜாகிர் நாயக் எல்லை மீறிப் பேசிவிட்டதாகத் தெரிவித்தார்.

“நான் ஒருபோதும் அப்படிப் பேசியதில்லை. சீனர்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று எப்போதுமே கூறியதில்லை. ஆனால் அவரோ (ஜாகிர்) இங்கு வந்து அவர்களை (சீனர்கள்) திரும்பிச் செல்லுமாறு கூறுகிறார்.”

“இது ஜாகிர் நாயக்கின் தவறான நகர்வு. இனவாத உணர்வுகளைத் தூண்டியதால் காவல்துறை அவரை விசாரிக்க வேண்டியுள்ளது. எத்தகைய நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டாலும் அது சட்டத்துக்கு உட்பட்டதாகவே இருக்கும். சட்டத்தின் ஆட்சியை மலேசிய அரசாங்கம் மதிக்கிறது,” என்றார் பிரதமர் மகாதீர்.

ஜாகிர் நாயக்கிற்கு நிரந்தர தங்கும் உரிமை அளிக்கப்பட்டது குறித்து மகாதீர் இவ்வாறு குறிப்பிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யார் இந்த ஜாகிர் நாயக்… அவர் அப்படியென்ன பேசினார்…?

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருப்பவர் இந்த ஜாகிர். இவர் ஒரு மத போதகர். பண பரிமாற்றம் தொடர்பில் 115 மில்லியன் ரிங்கிட் வரை மோசடி செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டை இந்தியாவில் எதிர்நோக்கி உள்ளார் என மலேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மலேசியாவில் மதப் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட அவர் வந்ததாகக் கூறப்பட்டது. இந்தியாவில் அவர் சில குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவதாக தகவல் வெளியான பிறகு அவர் ஊடகங்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டார்.

ஜாகிர் கூறியதாக வெளியான கருத்துகள் குறித்து துவக்கத்தில் எந்தவித சலசலப்பும் எதிர்ப்பும் எழவில்லை. நாட்களின் போக்கில் நிலைமை மாறியது.

இந்நிலையில் அண்மையில் கிளந்தான் என்ற மாநிலத்தில் உரையாற்றியபோது அவர் குறிப்பிட்டதாக சில கருத்துகள் வெளியாகின. இது தொடர்பான காணொளிப் பதிவு வெளியானதும் சர்ச்சையும் வெடித்தது.

ஜாகிர் கூறியதாக வெளியான கருத்துகள் குறித்து துவக்கத்தில் எந்தவித சலசலப்பும் எதிர்ப்பும் எழவில்லை

“மலேசியாவில் உள்ள இஸ்லாமியர்கள், இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சமூதாயத்தினரைவிட நூறு மடங்கு நன்றாக உள்ளனர். அதே வேளையில் மலேசியாவில் உள்ள இந்துக்களும் இந்தியர்களும் நம் நாட்டுப் பிரதமர் துன் மகாதீரை ஆதரிக்காமல் இந்தியப் பிரதமர் மோதியை ஆதரிக்கின்றனர்,” என்று ஜாகிர் நாயக் தமது உரையில் குறிப்பிட்டார் என்பதே தற்போது எழுந்துள்ள சர்ச்சைக்கு மூலாதாரம்.

எந்த ஆய்வின் அடிப்படையில் அவர் இவ்வாறு கூறுகிறார் எனும் கேள்வி எழுந்துள்ளது. அவரது பேச்சு மத, இன நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்காதா? என்றும் எதிர்பார்ப்பாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்தியா போன்ற நட்பு நாட்டில் தேடப்படும் ஒரு நபரை இவ்வாறு சுதந்திரமாக சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேச அனுமதிப்பது சரிதானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஜாகிர் நாயக் விவகாரம் காரணமாக இந்தியா-மலேசியா இடையேயான நல்லுறவு பாதிக்கப்படலாம் என்றும் ஒரு தரப்பினர் கவலை தெரிவித்துள்ளனர்.

Courtesy: BBC