பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தலைமறைவாகியுள்ள முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான 4 சொத்துகளை முடக்க தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ஜாகிர் நாயக் தேடப்படும் குற்றவாளியாக கடந்த 2017 ஜூன் மாதம் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டதை அடுத்து, மும்பையில் அவருக்குச் சொந்தமான இரு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் மற்றும் ஒரு வர்த்தக கட்டடத்தை என்ஐஏ முடக்கம் செய்திருந்தது.

இந்நிலையில், மும்பையின் மாஸ்கான் பகுதியில் ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமாக உள்ள 4 சொத்துகளை முடக்கம் செய்வதற்கு அனுமதி கோரி சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ மனு தாக்கல் செய்திருந்தது. அதன் மீது விசாரணை மேற்கொண்ட சிறப்பு நீதிமன்றம், சம்பந்தப்பட்ட 4 சொத்துகளையும் முடக்குவதற்கு அனுமதி அளித்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.
முன்னதாக என்ஐஏ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “ஜாகிர் நாயக்கிற்கு எதிராக வழக்குப் பதிவு செய்ததை அடுத்து பல்வேறு நிதிஆதாரங்களில் இருந்து அவருக்கு கிடைத்து வந்த உதவிகள் நிறுத்தப்பட்டன. எனவே, தற்போது இந்த சொத்துகளை விற்பதன் மூலமாக தனக்கு நிதி வசதியை ஏற்படுத்திக் கொள்ள ஜாகிர் நாயக் முயற்சிக்கிறார்’ என்று கூறப்பட்டிருந்தது.

மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு மும்பையில் உள்ள ஜாகிர் நாயக்கின் முஸ்லிம் ஆராய்ச்சி அறக்கட்டளையை சட்டவிரோத அமைப்பாக அறிவித்தது. இதையடுத்து, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட பலரை தூண்டியதாகவும், மதங்களிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் பொதுக் கூட்டங்களில் பேசியதாகவும் அவர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குப் பதிவு செய்தது.

Courtesy : Dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here