ஜல்லிக்கட்டு போட்டியின் போது உயிரிழப்பு, நிரந்தர ஊனம் ஆகியவற்றுக்கு இழப்பீடு வழங்குவது யார் என தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாயக்க மன்னர்களின் காலத்தில் உருவானது ஜல்லிக்கட்டு என்றும், தமிழ் மக்களின் விளையாட்டு என்பதற்கு கலித்தொகை தவிர வேறெதிலும் ஆதாரம் இல்லை என்றும் மனுதாரர் தெரிவித்திருந்தார். ஜல்லிகட்டு குழுக்களில் அனைத்து சமூக பிரதிநிதிகளையும் இடம்பெறச் செய்ய அரசுக்கு உத்தரவிடவும் கோரப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜல்லிக்கட்டுக் குழுவில் யாரெல்லாம் அங்கம் வகிக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு என்றும் அதில் நீதிமன்றம் கருத்து கூற முடியாது என்றும் தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டியின் போது போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் உயிரிழந்தாலோ, நிரந்தம் ஊனம் அடைந்தாலோ அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது யார் என தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.