பிரிவினைவாதத் தலைவர் யாசீன் மாலிக்கின் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எஃப்) அமைப்புக்கு மத்திய அரசு வெள்ளிக்கிழமை தடை விதித்தது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஆலோசனை கூட்டத்தில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் யாசீன் மாலிக் அமைப்புக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலர் ராஜீவ் கௌபா கூறியதாவது:
யாசீன் மாலிக்கின் அமைப்பு, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் செழிக்க ஆதரவளிக்கிறது. பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள முடியாது என்ற கொள்கையை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது.

எனவே, ஜேகேஎல்எப் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேகேஎல்எஃப் அமைப்பு, பிரிவினைவாத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கடந்த 1989-ஆம் ஆண்டில் காஷ்மீர் பண்டிட்டுகளை படுகொலை செய்ததில் இந்த அமைப்புக்கு பங்கு உண்டு. அதன் தொடர்ச்சியாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியை விட்டு பண்டிட்டுகள் வெளியேறினார்கள். இந்தப் படுகொலைகளுக்கு சதித்திட்டம் தீட்டியவர் யாசீன் மாலிக்.

ஜேகேஎல்எஃப் அமைப்பை பாகிஸ்தானைச் சேர்ந்த அமானுல்லா கான் கடந்த 1970ஆம் ஆண்டு பிரிட்டனின் பர்மிங்ஹாமில் தொடங்கினார்.

ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை 1971ஆம் ஆண்டு கடத்தியபோது இந்த அமைப்பு கவனம் பெற்றது. ஜம்மு-காஷ்மீர் காவல் துறை இந்த அமைப்புக்கு எதிராக 37 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளது. பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது.

பிரிட்டனில் இந்திய தூதரக அதிகாரி ரவீந்திர மாத்ரேவை கடந்த 1984ஆம் ஆண்டில் கடத்தி கொலை செய்ததில் இந்த அமைப்புக்கு தொடர்பு உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி ஜேகேஎல்எஃப் அமைப்பைச் சேர்ந்த மக்பூல் பட் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு சில பிரிவினைவாதத் தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது. நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி செய்யும் எந்தவொரு பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவும் மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), அமலாக்கத் துறை ஆகிய விசாரணை அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றன. காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கும், சதி செயல்களில் ஈடுபடுவோருக்கும் ஜேகேஎல்எஃப் அமைப்பு நிதியுதவி அளித்து வருகிறது என்றார் ராஜீவ் கௌபா.

யாசீன் மாலிக், ஜம்முவில் உள்ள கோத் பல்வால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு 4 வீரர்களை சுட்டுக் கொன்று முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் முஃப்தி முகமது சயீதின் மகள் ருபய்யா சயீதை கடத்திய வழக்கில் யாசீன் மாலிக் விசாரணையை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஜமாத்-ஏ-இஸ்லாமி ஜம்மு-காஷ்மீர் என்ற அமைப்பை அண்மையில் மத்திய அரசு தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

ஜேகேஎல்எஃப் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதன் மூலம் மத்திய அரசு என்ன சாதிக்கப் போகிறது? என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மெஹ்பூபா முஃப்தி தனது டிவிட்டர் பக்கத்தில் யாசீன் மாலிக் எப்போதோ வன்முறை பாதையைத் துறந்துவிட்டார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் காஷ்மீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு யாசீன் மாலிக்கும் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார் என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here